சீனாவில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள 'தி எய்ட் ஹண்ட்ரட்' என்கிற திரைப்படம், கடந்த வாரம் உலக அளவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
கரோனா நெருக்கடியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட உலகத்தின் அனைத்து நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மூடப்பட்டன. சீனாவிலிருந்து பரவியதாகக் கூறப்படும் கரோனா தொற்றுப் பிரச்சினையிலிருந்து முதலில் மீண்டது சீனாதான்.
அங்கு படிப்படியாகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது பெரும்பாலும் சகஜமான வாழ்க்கைக்கு சீனர்கள் திரும்பிவிட்டனர். அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டு, புதிய வெளியீடுகள் இல்லாததால் பழைய பிரபலத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன. மேலும் சில நாடுகளில் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பல மாதங்களாக வெளியீடு ஒத்திப் போடப்பட்டிருந்த 'டெனெட்' திரைப்படம், பிரிட்டன் உட்பட திரையரங்குகள் திறக்கப்பட்ட 41 நாடுகளில் கடந்த வாரம் வெளியானது.
'இன்செப்ஷன்', 'டார்க் நைட்', 'இண்டர்ஸ்டெல்லர்' உள்ளிட்ட பிரம்மாண்ட ஆக்ஷன், அறிவியல் புனைவுத் திரைப்படங்களை இயக்கியிருக்கும் கிறிஸ்டோஃபர் நோலனின் படம் என்பதால் 'டெனெட்' படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. எனவே வெளியான முதல் வாரம் 'டெனெட்' உலக அளவில் நல்ல வசூலைப் பெறும் என்றும், பல மாதங்களாக முடங்கியிருந்த திரையரங்க வியாபாரத்துக்குப் புத்துயிர் தரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல 'டெனெட்', இந்த 41 நாடுகளில் மொத்தமாக 53 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இன்றைய சூழலில் இது நல்ல வசூலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வசூலைப் பெற்றும், சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 'டெனெட்' முதலிடத்தைப் பிடிக்க முடியவில்லை. மாறாக, சீனாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ள 'தி எய்ட் ஹண்ட்ரட்' என்கிற திரைப்படமே 'டெனெட்' படத்தை விட அதிக வசூலைப் பெற்றுள்ளது.
முக்கியமாக 'டெனெட்' உலக அளவில் பல்வேறு நாடுகளில் பெற்ற வசூலை விட, 'தி எய்ட் ஹண்ட்ரட்' சீனாவில் மட்டுமே அதிகமாக வசூலித்துள்ளது. வெளியான முதல் வார இறுதியில் 79.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருந்த இந்தப் படம், இரண்டாவது வார இறுதியில் 69 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. அதாவது 'டெனெட்' படத்தை விட (சீனாவில் மட்டும்) 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகம்.
1937-ம் ஆண்டு சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நடந்த போரை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம், ஐமேக்ஸ் போன்ற பெரிய திரைகளிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 10 நாட்களில் சீனாவில் மட்டுமே 277 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தப் படம் வசூலித்துள்ளதாக வெரைட்டி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது இந்த வருடம் வெளியான படங்களின் சர்வதேச வசூலை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
'டெனெட்' இன்னும் சீனாவில் வெளியாகவில்லை. செப்டம்பர் 3-ம் தேதி அமெரிக்காவிலும், 4-ம் தேதி சீனாவிலும் வெளியாகவுள்ளது. சீனாவில் 'டெனெட்' முதல் வாரம் 40 மில்லியன் டாலர்கள் வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
19 mins ago
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago