உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள்தான்: முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கோரிக்கை

By செய்திப்பிரிவு

உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள்தான் என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்றுடன் (ஆகஸ்ட் 31) மூன்றாம் கட்ட ஊரடங்குத் தளர்வுகள் முடிவடைய உள்ளதால், நான்காம் கட்ட ஊரடங்குத் தளர்வுகள் தொடர்பான அறிவிப்புகளை நேற்று (ஆகஸ்ட் 30) வெளியிட்டது தமிழக அரசு. அதில் மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடக்கம், மால்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு அனுமதியளித்தது.

இதில் சினிமா படப்பிடிப்புகள் 75 பேருடன் தொடங்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு. இதற்குத் திரையுலகினர் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்த் திரையுலக நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இந்தக் காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள்.

எப்போதெல்லாம் நாங்கள் சந்திக்கமுடியுமா எனக் கேட்டபோதெல்லாம் திரையுலகிற்காய் உங்கள் அனுமதிக் கதவுகளும், பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள செவிகளும் காலந் தாழ்த்தியதே இல்லை. அதற்கு எங்கள் நன்றிகள்.

எங்கள் திரையுலகம் இருண்டுவிட்டதோ... திரும்ப தழைக்க அடுத்த ஆண்டு ஆகிவிடுமோ? பட்டினியால் பல குடும்பங்கள் வதங்கிவிடுமோ என்ற பதற்றமும், முடிவு தெரியா குழப்பமும் மேலிடத்தான், கடந்த 14 ஆம் தேதி தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக சின்னத்திரை படப்பிடிப்பாவது நடத்த அனுமதியுங்கள் எனக் கோரிக்கை வைத்தோம்.

இப்போதும், கரோனாவின் பரவல் சூழலில் தமிழக அரசு நினைத்திருந்தால் நாங்கள் படப்பிடிப்பிற்குச் செல்வதை முடக்கியே வைத்திருந்திருக்கலாம். ஆனால், அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி முழுமையாகச் செயல்படுவோம் என்ற எங்களின் உறுதிமொழியையும். பட்டினியால் வாடுவோர்களையும் கருத்திற்கொண்டு படப்பிடிப்பிற்கு அனுமதியளித்ததை நன்றியோடு பார்க்கிறோம்.

அந்த கனிவைக் காட்டிய தமிழக முதல்வராகிய தங்களுக்கும், எங்கள் பிரச்சனைகளைக் கூர்ந்து கேட்டுக்கொள்ளும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் நன்றிகள் பல. பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் இதனால் இழப்பிலிருந்து மீள முடியும்.

ஏற்கெனவே பிறசேர்க்கை பணிகளுக்கு அனுமதி கொடுத்ததிலிருந்தே எங்களின் மீது நீங்கள் காட்டிய அக்கறையைப் புரிந்துகொண்டோம். தற்போது படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்ல அனுமதி தந்துள்ளீர்கள். இன்னும் சில வரைமுறைகளோடு எங்கள் திரையரங்குகளையும் இயங்க ஆவன செய்வீர்கள் எனக் காத்திருக்கிறோம்.

முன்னமே நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகளையும் பரிசீலிக்கக் கேட்டுக் கொள்வதோடு, திரையரங்க வரிவிகிதங்களையும் குறைத்து சினிமா வாழ வழிவகை செய்தால் அத்தனை ஆயிரம் கலைக் குடும்பங்களும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாவோம். திரையுலகம் மறக்க முடியாத ஒரு முதல்வரைப் பெற்றதென உயர்த்திப் பிடிப்போம்.

பிற்சேர்க்கை பணி செய்தாலும், படப்பிடிப்புத் தளம் சென்றாலும், நாங்கள் உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள்தான். அதன் மூலமே எம் தயாரிப்பாளர்கள் முடக்கிய பணத்தைப் பெற முடியும். மக்களின் நலத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு சமூகப் பிரக்ஞைதானென்றாலும்... வழிமுறைகள் வகுத்துக் கொடுத்துத் திறந்துவிட மாட்டீர்களா என நப்பாசைப் படுகிறேன். ஆவன செய்ய அத்தனை சினிமா குடும்பங்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களெனவே காத்திருக்கிறோம்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்