ரியாவிடம் மூன்றாவது நாளாக விசாரணை: சுஷாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேள்வியெழுப்பிய சிபிஐ 

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி சுஷாந்த் குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சுஷாந்தின் தந்தை கேகே சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த ஒரு காணொலியில், சுஷாந்தின் காதலி ரியா தனது மகனுக்கு விஷம் தந்து வந்ததாகவும், ரியா தான் கொலையாளி என்றும் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நடிகை ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (28.08.20) அன்று விசாரணையைத் தொடங்கினர். 10 மணி நேரங்களுக்கும் மேலாக நீடித்த விசாரணையில் சுதாந்த் உடனான உறவு குறித்து ரியாவிடன் ஏராளமான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் முன்வைத்தனர்.

கடந்த இரண்டு நாட்களைத் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் சிபிஐ அதிகாரிகள் முன்பு ரியா ஆஜரானார். அவரிடம் சுஷாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவர் உட்கொண்ட மருந்துகள் குறித்து ரியாவிடன் கேள்வியெழுப்பியதாகக் கூறப்படுகிறது.

மேலும் சுஷாந்துக்கும் ரியாவுக்கு இடையிலான பிரச்சினைகள், சுஷாந்த் உடனான வாட்ஸ் அப் சாட்டில் போதைப் பொருட்கள் குறித்த உரையாடல், சுஷாந்துக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையே இருந்த பிரச்சினைகள், பணப் பரிமாற்றம், முதலீடு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஏராளமான கேள்விகள் ரியாவிடம் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.

ரியா அளித்த பதில்கள் திருப்திகரமான இல்லை என்று சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE