இரண்டு மூன்று தலைமுறையையும் கடந்து, ஒரு கலைஞனை இன்னமும் மறக்காமல் இருப்பதும் கொண்டாடிக் கொண்டிருப்பதும் அப்படியொரு கலைஞனுக்கு நிகரில்லை என்று வியந்துகொண்டிருப்பதும் சாதாரணமல்ல. அப்படி, தலைமுறைகள் கடந்த மகத்தான கலைஞர்... மாமனிதர்... என்.எஸ்.கிருஷ்ணன்.
தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்து ஆளுமையையும் வள்ளல் தன்மையையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதற்கும் முன்னதாக உள்ள மூன்றெழுத்துக்காரர்... மாபெரும் வள்ளல் என்.எஸ்.கே. ஆனால் என்.எஸ்.கே. என்பதும் என்.எஸ்.கிருஷ்ணன் என்பதும் மறந்து கலைவாணர் என்று போற்றத் தொடங்கினார்கள். இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் கடைக்கோடி என்றும் இந்தியாவின் ஆரம்பமுனை என்றும் கன்யாகுமரியைச் சொல்லலாம். இங்கே, நாகர்கோவிலில் பிறந்தவர் கலைவாணர். இந்த வேலைதான் என்றில்லாமல் எல்லா வேலைகளையும் பார்த்தபடி பால்யத்தைக் கழித்தார். இயல்பாகவே இவருக்குள் பாட்டும் பேச்சும் இருந்தன. பேசினால் கைதட்டல்; பாடினால் விசில் என்றிருந்தது. வில்லுப்பாட்டுக் கலைஞராக மக்களிடம் அறிமுகமானார். வில்லுப்பாட்டில்... தேசப்பற்று நரம்பில் குத்திய சிரிஞ்சென, புது ரத்தம் பாய்ச்சியது. ஒழுக்க போதனைகள் பாடமாக இல்லாமல் பாடலாகச் சொல்லி வலியுறுத்தப்பட்டன. மனிதநேயத்தையும் வாழ்க்கைத் தத்துவத்தையும் தோளில் கைபோட்டுக்கொண்டு சொல்லும் நண்பனைப் போல் சொன்னார். ஆனால் தன்னில் இருந்து புறப்பட்ட கருத்துகளையெல்லாம் தேன் தடவிச் சொன்னார். அது... நகைச்சுவைத் தேன். சிரிக்கச் சிரிக்கச் சொன்னார். சிரிக்கும்படி சொன்னார்.
வில்லுப்பாட்டில் இருந்து நாடகங்கள்... நாடகத்தில் இருந்து சினிமா. படங்களைத் தயாரித்தார். இயக்கினார். ‘நகைச்சுவை என்பது எவரையும் காயப்படுத்தாமல் இருக்கவேண்டும்’ என்றார் கலைவாணர். அவருடைய நகைச்சுவையும் வசனங்களும் எவரையும் எள்முனையளவும் காயப்படுத்தியதில்லை .
ஒரு நகைச்சுவை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, கலைவாணரின் வசனங்களும் காட்சிகளும் இன்றைக்கும் என்றைக்குமான உதாரணங்கள். கணவன் மனைவிக்குள் இருக்கிற உறவைச் சொல்லி நக்கலடிப்பார். முதலாளிக்கும் தொழிலாளிக்குமான உறவை வைத்துக் கொண்டு கேலி பண்ணுவார். நண்பர்களுக்கு இடையே, அரசாங்கத்துக்கு இடையே, மக்களுக்கு நடுவே என காட்சிகள் வைத்து, காமெடி பண்ணுவார். அவையெல்லாமே குடும்பத்துக்கும் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் பாடங்கள்; வேதங்கள்.
கலைவாணர் குரல் தனிக்குரல். அந்தக் காலத்தில், இவரின் பாடல் திரையில் வந்தால், கரவொலி தியேட்டரை அதிரவைக்கும். ‘ஒன்ஸ்மோர்’ கேட்டதும் நடந்திருக்கிறது. பாடலை மீண்டும் ஒளிபரப்பியதும் நிகழ்ந்திருக்கிறது.
ஒருமுறை, முக்கியமான பிரபலத்தின் வீட்டுக்கு கலைவாணரும் அவர் மனைவி டி.ஏ.மதுரமும் சென்றிருந்தனர். அவர்களை வரவேற்றவர்கள், ‘என்ன சாப்பிடுறீங்க... காபியா, டீயா, கூல்டிரிங்க்ஸா, ஹார்லிக்ஸா...’ என்று அடுக்கிக் கொண்டே போக... கலைவாணர் சொன்னார்... ‘டீயே மதுரம்’ என்று! அந்த வீடே குலுங்கிச் குலுங்கிச் சிரித்தது.
இன்றைக்கு நகைச்சுவைப் பஞ்சம், நகைச்சுவையே இல்லை, மனதில் நிற்கும்படியாகவோ நினைத்து நினைத்துச் சிரிக்கும்படியாகவோ காமெடி இல்லை என்று அலுத்துச் சலித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அக்மார்க் காமெடிக்கு இன்றைக்கும் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார் என்.எஸ்.கே.
சினிமாவுக்கான கதை பண்ணுவதில் கில்லாடி. அப்படிக் கதை பண்ணினால் அதில் சமூக அவலங்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் இருக்கும். பெண்ணடிமைத்தனத்தை குத்திக் காட்டுவார். விஞ்ஞான வளர்ச்சியை ஏற்க வேண்டி வலியுறுத்துவார். அதேசமயம்... தேசத்தின் மீது பக்தி தேவை என்று பளீரென உணர்த்துவார். நடிப்பார். வசனம் எழுதுவார். பாடுவார். தயாரிப்பார். இயக்குவார் என பன்முகங்கள் கொண்ட வித்தகர் என்.எஸ்.கிருஷ்ணன். ‘விஞ்ஞானத்தை வளக்கப் போறேண்டி’ பாடலை இந்தக் காலத்தில் கேட்டுப் பாருங்கள்... சிரித்துத் திகைப்பீர்கள்.
குதிரை வண்டியில் பயணம் செய்தபடி ஒரு விழாவுக்குச் சென்றார். அங்கே பேசும்போது, ‘குதிரைவண்டிக்காரர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஏன்னா... அவங்கதான் ‘முன்னுக்கு வா, முன்னுக்கு வா’ன்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க’ என்றார். விழா நடத்தியவர்கள் உணர்ந்து சிரித்த சிரிப்பு, அந்த ஊருக்கு கலைவாணர் வந்திருப்பதற்கு கட்டியம் கூறியது போல் இருந்தது.
காந்திஜியின் தனிமனித ஒழுக்கம் இவரை ஈர்த்த, பாதித்த ஒன்று. அதனால் பக்தியைப் பரப்பி வந்த வில்லுப்பாட்டுக் காலத்தில், காந்தியின் தேசியத்தையும் ஒழுக்கத்தையும் பரப்பினார் என்.எஸ்.கே. 1949-ம் வருடம், நாகர்கோவிலில், காந்தி நினைவு ஸ்தூபியை, தன் சொந்த செலவில் இருந்து, கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் செலவில் எழுப்பினார். விழாவுக்கு அப்போதைய முதல்வர் குமாரசாமி ராஜாவையும் பேரறிஞர் அண்ணாவையும் இன்னும் பலரையும் அழைத்திருந்தார். அண்ணாவின் மீது பற்று கொண்டிருந்ததால், அவரின் பேச்சை, நிறைய ஊர்களுக்கு அழைத்துச் சென்று பரப்பினார். இதனால் ஏற்பட்ட சலசலப்பைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை. இங்கே இன்னொரு விஷயம்... ஆசியாவிலேயே காந்திஜிக்கு, நினைவு ஸ்தூபி அமைத்த முதல் மனிதர் கலைவாணர் என்பது சரித்திரம்.
ஆன்மிகத்துக்காக நந்தனார் என்று நாடகம் போட்ட காலம். இவர் கிந்தனார் என்று நாடகம் போட்டார். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வாலிபன், படிப்பதற்காக சென்னைக்குச் செல்வான். ‘நீயெல்லாம் ஆடுமாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று ஆசிரியர் அவனைத் திட்டி அனுப்புவார். ஆனால் அவனோ, நன்றாகப் படித்து, பள்ளிக்கல்வித் துறையில் இன்ஸ்பெக்டராக வேலை கிடைத்து, அதே ஊருக்கு, அவன் படித்த பள்ளிக்கே வருவார். ரயில்வே ஸ்டேஷனில் அந்த ஆசிரியர், அப்படியே தன் மாணவனை நெஞ்சாரத் தழுவிக் கொள்வார். கல்வியின் முக்கியத்துவத்தையும் தாழ்ந்ததாகச் சொல்வோர், உயர்ந்தோராவதற்குக் கல்விதான் அடிப்படை என்பதையும் அப்போதே வலியுறுத்தி கதை பண்ணியிருப்பார். அதேபோல், காந்தி மகான், வள்ளுவம், புத்தன் சரித்திரம் என இவரின் நாடகங்கள் அனைத்துமே வீரியமானவை; விதைகளானவை.
’கலைவாணரின் கருத்துகளைக் கேட்டு, உள்வாங்கி, பல்லாயிரக்கணக்கானோர் இன்றைக்கு முன்னுக்கு வந்திருக்கிறார்கள்’ என்று அண்ணா, புகழ்ந்திருக்கிறார். நண்பரும் ஒருவகையில் உறவினருமான, ப.ஜீவானந்தம் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தார் கலைவாணர். ஆனாலும் அண்ணன் என்று ஜீவானந்தத்தை அழைத்தார் கலைவாணர்.
சென்னை மயிலாப்பூரில் இருந்த நடராஜன் கல்விக்கழகம் எனும் அமைப்பு, இவருக்கு கலைவாணர் எனும் பட்டம் சூட்டி, இன்றைக்கும் சரித்திரத்தில் அந்த அமைப்பு இடம்பிடித்துவிட்டது. பம்மல் சம்பந்த முதலியார் இந்தப் பட்டத்தை வழங்கினார்.
சேலம், நாமக்கல் அருகே உள்ள தாரமங்கலத்தில் அண்ணாவின் படத்தைத் திறந்து வைத்ததுதான் கலைவாணரின் கடைசி நிகழ்ச்சி. அதேபோல், கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்ததுதான் அண்ணாவின் கடைசி நிகழ்ச்சி.
அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்த மண்டபத்தை, விரிவுபடுத்தி, புதுப்பித்து, பிரமாண்ட மண்டபமாக்கி, அதற்கு கலைவாணர் அரங்கம் எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி. அதேபோல், நாகர்கோவிலில் கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர்.
கூத்தாடிகள், பபூன்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட நகைச்சுவை நடிகர்களுக்கு இன்றைக்கு மிகப்பெரிய அங்கீகாரமும் கெளரவமும் மரியாதையும் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவரே கலைவாணர்தான். இவர்தான்... தன் இயல்பாலும் இயல்பான நகைச்சுவையாலும் மக்களிடத்தில் அப்படியொரு பெயரைச் சம்பாதித்தார். இந்த இடம்... இன்று வரை திரையுலகில் நிரப்பப்படவே இல்லை.
அதேபோல், என்.எஸ்.கே. வீட்டில் எப்போதும் அடுப்பு எரிந்துகொண்டே இருக்கும். பந்தி பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒருநாளைக்கு, குறைந்தபட்சம் ஐம்பது எண்பது பேராவது சாப்பிடுவார்களாம். ‘உதவின்னு கேட்டா, கையில் இருப்பதைக் கொடுத்துருவாருப்பா அவரு’ என்பார்கள் ஒரு சிலரை! ஆனால், உதவி என்று கேட்டுவிட்டால், கையில் இல்லாத போதும் புரட்டியாவது கொடுத்துவிடுவார். இவர்பாட்டுக்கு, போகிற போக்கில், உதவி கேட்பவர்களுக்கு செக் கொடுத்துவிடுவாராம். பிறகு வங்கியில் இருந்து தகவல் வரும். ‘செக், பெளண்ஸ் ஆயிரும்ங்க ஐயா’ என்பார்கள். ‘ஒரு ரெண்டுமணி நேரம்’ என்று கேட்டுக்கொண்டு, அதற்குள் பணத்தைப் புரட்டிக் கட்டிவிடுவார். இப்படி, சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை வாரி வாரி வழங்கினார் கலைவாணர். கணக்கே இல்லாமல் வழங்கினார். அதனால்தான் பன்முக வித்தகர், சமூக, பொருளாதார, மனித நேயமிக்க கருத்துகளைப் பரப்பியவர் என்பதையெல்லாம் கடந்து தர்மசிந்தனையாளர் அவர். நல்ல ஆத்மா என்று இவரை இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
‘வள்ளல்’ எனும் குணத்தை வளர்க்க முடியாது. அது... பிறவிக்குணம். இந்தப் பிறவி... கலைவாணர் எனும் வள்ளலை, பண்பாளரை, மனித நேயமிக்க நல்லாத்மாவை நமக்கு வழங்கியிருக்கிறது. அதேபோல், தன் கலையின் மூலமாகவும் ஊருக்கு நல்லது சொன்ன நாகரீகக் கோமாளி அவர். அதனால்தான் அவர் இன்றைக்கும்... என்றைக்கும் கலைவாணர்!
1908ம் ஆண்டு பிறந்தார். 1957ம் ஆண்டு காலமானார். 57ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி மறைந்தார். மறைந்து 63 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் கலையுலகின் நாகரீகக் கோமாளியை, வாரிக் கொடுத்தல் வள்ளல்பெருமகனை இன்னும் நூறாண்டுகளானாலும் மறக்கமாட்டார்கள் தமிழ் மக்கள்.
நகைச்சுவைக்கு டிக்ஷனரி வகுத்துக் கொடுத்த தமிழ்த் திரையின் தனித்துவக் கலைஞனை, கலைவாணரைப் போற்றுவோம்!
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago