குவிந்த ரசிகர்கள், பதட்டமடையாத விஜய்: 'சர்கார்' சுவாரசியம் பகிரும் ஏ.ஆர்.முருகதாஸ்

By செய்திப்பிரிவு

விஜய் பைக் ஓட்டிக் கொண்டு வரும் காட்சியை படமாக்கிய விதம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி 4-வது முறையாக இணைந்து பணிபுரியவுள்ளது. இது தொடர்பான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு முன்பாக, இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்த படம் 'சர்கார்'. சர்ச்சைகள் இருந்தாலும், வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் மாநாடு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும், அதில் ராதாரவியை சந்தித்துப் பேச பைக்கில் ஒரு பெரும் கூட்டத்துடன் செல்வார் விஜய். இந்தக் காட்சியைப் படமாக்கிய போது, நள்ளிரவில் ரசிகர்கள் கூடிவிட்டதை 'டோக்கியோ தமிழ்ச் சங்கம்' நேரலை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அந்தச் சம்பவம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பதாவது:

"விஜய் பைக்கில் வரும் காட்சி. நகரத்துக்குள் எடுத்தோம். அவரை ஆயிரம் பைக்குகள் தொடரும். அந்தக் காட்சி எடுக்கும் போது நாங்கள் விஜய் அவர்களின் பக்கத்தில் இருக்க முடியாது ஏனென்றால் தொலைவிலிருந்து எடுத்தால் தான் அந்த பைக் கூட்டம், பிரம்மாண்டம் தெரியும்.

இரவு 12 மணிக்கு மேல் தான் படப்பிடிப்பு ஆரம்பிப்போம். விஜய்க்கு பக்கத்தில் பைக் ஓட்ட வேண்டிய துணை நடிகர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்திருந்தோம். ஏனென்றால் ஒரு பைக் லேசாகத் தவறினால் கூட பின்னால் தொடர்ந்து வரும் ஒவ்வொரு பைக்கும் கீழே விழும் அபாயம் இருக்கிறது. அதே போல நாயகன் விஜய் பைக் மீதும் யாரும் மோதிவிடக் கூடாது.

நாங்கள் தூரத்தில் கேமராவுடன் இருப்போம். அல்லது எதாவது கட்டிடத்தின் மேல் இருந்தோம். இணை இயக்குநர்களும் தூரத்தில் ஒரு காரில் காத்திருக்க வேண்டும். பாதுகாப்புக்காக சில துணை இயக்குநர்களை அந்த கூட்டத்தில் பைக் ஓட்ட வைத்திருந்தோம். இப்படி ஒரு சூழலில் படப்பிடிப்பு நடந்தது.

ஆனால் எப்படி யாருக்குத் தகவல் போனது என்று தெரியவில்லை இடையே பொது மக்களின் பைக் சில வர ஆரம்பித்துவிட்டன. ஒரு கட்டத்தில் விஜய் எங்கிருக்கிறார் என்பதே கேமராவில் தெரியவில்லை. அவர் எங்காவது வண்டியை நிறுத்தினால் உள்ளே கலந்து வந்து பொதுமக்கள் எல்லோரும் சூழ்ந்து விடுவார்கள் என்பதால் 2 மணி நேரம் வரை அவர் பைக்கை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே இருந்தார்.

அந்த கூட்டத்திலிருந்து விஜய் அவர்களை மீட்டு காருக்குள் ஏற்றுவதற்குள் எனக்கு திக்கென்று ஆகிவிட்டது. இந்த படப்பிடிப்பு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் விஜய் கோபப்படவில்லை, பதட்டமாகவில்லை. அமைதியாகவே இருந்தார்"

இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE