வெள்ளத்தால் பாதிப்பு: கிராமவாசிகளுக்கு வீடு கட்டித் தரும் சல்மான் கான்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்துக்காக நடிகர் சல்மான் கான் செய்திருக்கும் உதவிகள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

பீயிங் ஹ்யூமன் (Being Human) என்கிற அமைப்பை சல்மான் கான் நடத்தி வருகிறார். மகாராஷ்டிராவில் இருக்கும் கித்ராபுர் என்கிற கிராமத்தை, எலான் என்கிற அமைப்புடன் சேர்ந்து தானும் தத்தெடுத்து நல உதவிகள் செய்யவுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சல்மான் கான் அறிவித்திருந்தார்.

கோலாபூர் மாவட்டத்தில் இருக்கும் இந்தக் கிராமத்தில்தான் பிரபல கோபேஷ்வர் சிவன் கோயில் உள்ளது. கடந்த வருடம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில், வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக சல்மான் கூறியிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு, 70 வீடுகளின் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாடி யாத்ரவ்கர் ட்வீட் செய்திருந்தார். பூமி பூஜை தொடங்கப்பட்டுவிட்டதாக, புகைப்படங்களுடன் பகிரப்பட்ட இந்த ட்வீட்டில் சல்மானையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தக் கட்டுமானத்துக்காக வீட்டுக்கு ரூ.95,000 மட்டுமே அரசு தரவுள்ளது. மீதமுள்ள செலவுகள் முழுக்க சல்மானும், எலா அமைப்பும் ஏற்கிறது. ஒவ்வொரு வீடும் 250 சதுர அடி அளவு இருக்கும் என எலான் அமைப்பைச் சேர்ந்த ஆகாஷ் கபூர் தெரிவித்துள்ளார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு சல்மான் கானுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக சல்மான் கான் 'ராதே - யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்' திரைப்படத்தில் நடிக்கிறார். அதற்கு முன் பிக் பாஸ் சீஸன் 14 நிகழ்ச்சியைத் அக்டோபர் மாதம் தொகுத்து வழங்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE