வசந்தகுமாரின் வாரிசுகள் அவர் பெயரைக் காப்பாற்றுவார்கள்: பாரதிராஜா இரங்கல்

வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் நேற்று மாலை காலமானார்.

வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பாரதிராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:

"கீழ்மட்டத்திலிருந்து தன்னுடைய உழைப்பால் மேலே வந்தவர்களை நான் மிகவும் ரசிப்பேன். அதில் வசந்தகுமார் ஒரு பனங்காட்டுப் பூமியிலே பிறந்தவர். அவர் அண்ணன் குமரி அனந்தன் எங்குப் பேசினாலும், பள்ளி நாட்களில் போய் கேட்பேன். அவர் ஒரு பெரிய காங்கிரஸ்வாதி. குமரி அனந்தன் பேச்சு அப்படி இருக்கும். அதற்குப் பிறகு உழைப்பால் உயர்ந்த வசந்தகுமாரை ரொம்ப ரசித்தேன். இவ்வளவு கொடூரமான நிலைக்குத் தள்ளப்படுவார் என்று நினைக்கவே இல்லை.

மிகவும் சுறுசுறுப்பானவர், புத்திசாலி. எல்லோருக்கும் எல்லாப் பொருட்களும் சென்றடைய வேண்டும் என்று தவணை முறைகளில் ரொம்பப் பிரமாதமாகச் செய்து பெயரெடுத்தவர். உலகம் முழுக்க வசந்த் அண்ட் கோ என்றால் தெரியும். உலகில் தமிழர்களுடைய பெயர்களை நிலைநாட்டியவர்களில் முக்கியமானவர் வசந்தகுமார். எனக்கு அதிகமாகப் பழக்கமில்லை என்றாலும், தூரத்திலிருந்து ரசிப்பேன். அவருடைய உடை, சுறுசுறுப்பான நடை. அற்புதமான மனிதர்.

இந்தக் கரோனாவுக்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா... அனைவரையும் கொன்று தீர்த்துவிடுகிறது. இன்னும் பயமாக இருக்கிறது. எவ்வளவு நல்லவர்களை தூக்கிட்டுப் போகப் போகிறதோ. பிரயோஜனம் இல்லாத மனிதர்களைக் கொண்டு போ. அதில் கூட எனக்கு உடன்பாடு கிடையாது.

ஆனால், ஒரு எம்.பி., நாடாளுமன்றத்தில் தன் கடமையைச் செய்தவர், சட்டப்பேரவையில் தன் கடமையைச் செய்தவர். அரசியலில் மாறுபட்ட கருத்து இருக்குமே தவிர, எந்த அரசியல்வாதியையும் வசந்தகுமார் வெறுத்ததில்லை. அனைவருடனும் தோளோடு தோள் சேரும் பழக்கமுள்ளவர்.

எஸ்.பி.பிக்காக செய்யப்பட்ட பிரார்த்தனை இந்த உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் செய்யப்பட்ட பிரார்த்தனை. கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் எழுந்து வர வேண்டும். வசந்தகுமாருக்கு ஏற்பட்ட கதி வேறு யாருக்கும் வரக்கூடாது.

தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டியவர் வசந்தகுமார். அவர் வியாபாரி மட்டுமல்ல. கடமையுள்ளவர், பொதுச் சேவை உள்ளவர். அவருடைய இழப்புக்கு ஆழ்ந்த இரங்லைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வது வார்த்தைகளால் முடியவே முடியாது. வசந்தகுமார் எங்கு இருந்தாலும் உங்களுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும். உங்கள் வாரிசுகள் உங்களுடைய பெயரைக் காப்பாற்றுவார்கள். உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE