சுஷாந்த் வழக்கு: நடிகை ரியாவிடம் விசாரணையை தொடங்கிய சிபிஐ 

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி அவரது குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சுஷாந்த்தின் தந்தை கேகே சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த ஒரு காணொளியில் சுஷாந்தின் காதலி ரியா தனது மகனுக்கு விஷம் தந்து வந்ததாகவும், ரியா தான் கொலையாளி என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நடிகை ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று (28.08.20) விசாரணையை தொடங்கினர். சுஷாந்த் வழக்கை சிபிஐ கையிலெடுத்த பிறகு முதன்முதலாக ரியா சிபிஐ அதிகாரிகள் முன் நேற்று ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரங்களுக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ரியாவுடன், சுஷாந்த்தின் நண்பர் சித்தார்த் பிதானி, மற்றும் மேலாளர் சாமுவேல் மிராண்டா, உதவியாளர் தீபேஷ் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மும்பையில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக நடிகை ரியாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE