ட்ரெய்லரைத் தொடர்ந்து அதிக டிஸ்லைக்குகளை குவிக்கும் ‘சடக் 2’ பாடல்

By ஐஏஎன்எஸ்

ட்ரெய்லரைத் தொடர்ந்து ‘சடக் 2’ படத்தின் ‘தும் சே ஹி’ பாடலின் ரீப்ரைஸ் வடிவம் யூ-டியூபில் வெளியாகி அதிக டிஸ்லைக்குகளை குவித்து வருகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் குறித்த கருத்துகள் கடுமையாக எதிரொலித்து வருகின்றன. தொடர்ச்சியாக கரண் ஜோஹர், ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட் வாரிசுகளைக் குறிவைத்து, தாக்கிப் பேசி வருகிறார்கள்.

இதனிடையே, மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் நடித்திருக்கும் 'சடக் 2' படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இந்தப் படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேற்று (29.08.20) வெளியானது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 12 அன்று 'சடக் 2' படத்தின் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்தில், 'சடக் 2' ட்ரெய்லருக்கு டிஸ்லைக்குகள் 5 மில்லியனைத் தாண்டியது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

வெளியாகி சில நாட்களிலேயே 11 மில்லியனுக்கும் அதிகமான டிஸ்லைக்குகளை பெற்று உலகின் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட 2வது வீடியோ என்ற பேரை ‘சடக் 2’ பெற்றது.

இந்நிலையில் நேற்று ‘சடக் 2’ படத்தின் வெளியீட்டையொட்டி அப்படத்தில் இடம்பெற்ற ‘தும் சே ஹி’ பாடலின் ரீப்ரைஸ் வடிவம் யூட்யூபில் வெளியானது. வெளியான 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் 2 மில்லியனுக்கு அதிகமான முறை இப்பாடல் பார்க்கப்பட்டுள்ளது. இப்பாடல் பெற்றிருக்கும் லைக்ஸ் 21,000, ஆனால் டிஸ்லைக்ஸோ 42,000. ட்ரெய்லரைப் போலவே இந்த பாடலும் அதிக டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோக்களில் ஒன்றாக மாறும் என்று கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களிலும் இப்பாடலை குறிப்பிட்டு ஹாஷ்டேகுகளை உருவாக்கி நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE