நீட், ஜேஇஇ தேர்வுகள்: மாணவர்களுக்கு உதவக் களமிறங்கும் சோனு சூட்

நீட், ஜேஇஇ தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு உதவக் களமிறங்கியுள்ளார் சோனு சூட்.

வரும் செப்டம்பர் மாதம் திட்டமிட்டபடி நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தேர்வுகளை நடத்த மத்திய அரசு தீவிரமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

ஆனால், நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையிலும், பல்வேறு மாநிலங்களில் மழை, வெள்ளம் குறையாத நிலையில் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதைத் தள்ளிப்போடுங்கள் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், தேர்வுகள் நடத்தப்படும் என தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடைபெற உள்ளது.

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று நடிகர் சோனு சூட் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது சோனு சூட் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ஒருவேளை ஜே.இ.இ, நீட் தேர்வுகள் நடந்தால், அதை எழுத வேண்டிய, பிஹார், அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருக்கும் மாணவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் எங்கிருந்து பயணப்பட வேண்டும் என்று எனக்குச் சொல்லுங்கள். உங்கள் தேர்வு மையங்களுக்குச் சென்று வர நான் பயண ஏற்பாடுகளைச் செய்ய முயன்று வருகிறேன். யாரும் வசதி இல்லை என்பதால் தேர்வைத் தவறவிடக் கூடாது"

இவ்வாறு சோனு சூட் தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவைத் தொடர்ந்து சில மணித்துளிகளில் ஒரு புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"ஜேஇஇ, நீட் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களே, நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் எங்காவது சிக்கியிருந்தால் எந்தப் பகுதிக்குப் பயணப்பட வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். தேர்வு மையத்துக்குச் சென்று சேர நான் உங்களுக்கு உதவுகிறேன். வசதிகள் இல்லை என்பதால் யாரும் தேர்வைத் தவறவிடக் கூடாது".

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் சோனு சூட். இதனால் அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தற்போது மாணவர்களுக்கு உதவுவதற்கும் சோனு சூட் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE