'சூப்பர் டீலக்ஸ்' ஆச்சரியமளித்தது: பூமி பெட்னேகர்

'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் தனக்கு ஆச்சரியமளித்தது என்று பூமி பெட்னேகர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, காயத்ரி, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், பல்வேறு முன்னணி பிரபலங்களும் 'சூப்பர் டீலக்ஸ்' படம் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள்.

தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூமி பெட்னேகர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"திரைப்படங்களில் பெண்களையும், ஆண்களையும் எப்படி சித்தரிக்கிறோம் என்பதை நாம் மாற்ற வேண்டும். பெண்களைத் தவறாகச் சித்தரிக்கக் கூடாது. எங்களுக்கும் ஆசைகள், லட்சியங்கள், உடல் தேவைகள், உணர்ச்சிகள் உள்ளன. எல்லாவற்றையும் சமாளிக்கும் திறன் எங்களுக்கு உள்ளது. பெண்களுக்கு அற்புத சக்திகள் உள்ளது என நான் நம்புகிறேன். அதை நமது திரைப்படங்களில் அதிகம் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அதே போல ஆண்களின் சித்தரிப்பும் மாற வேண்டும். ஆண்கள் மீது அதிக அழுத்தத்தை நாம் தருகிறோம். அவர்கள் வலிமையாக இருக்க வேண்டும், அவர்கள் அழக் கூடாது, உணர்ச்சிகளைக் காட்டக் கூடாது என்று சொல்லி வருகிறோம். இது மிகவும் தவறு. ஒரு ஆண் யாரையும் காயப்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டு வருவது மாற வேண்டும்.

ரசிகர்கள் மீது திரைப்படங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அதை வைத்து மக்களின் மனநிலையை நல்ல வழியில் மாற்றப் பயன்படுத்தலாம். பெண்களைக் காட்சிப் பொருளாக்கக் கூடாது. எல்ஜிபிடி உள்ளிட்ட அனைத்து விதமான மனிதர்களையும் திரைப்படங்களில் காட்ட வேண்டும். மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. இன்னும் வேகப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்.

இப்படித்தான் சமீபத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' பார்த்தேன். நான் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. திரைப்படங்களில் மிகச் சிறந்த படைப்புகள் வருகின்றன. இந்த சூழலில் இந்தி திரைத் துறையில் பங்காற்றுவதை எனது அதிர்ஷ்டமாக உணர்கிறேன்"

இவ்வாறு பூமி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE