சுஷாந்த் தற்கொலை வழக்குப் பெரிதாகி வருகிறது; வெவ்வேறு வழக்குகளை இணைக்கிறது: பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ்

சுஷாந்த் சிங் வழக்குத் தொடர்பாக பாஜகவின் பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சுஷாந்த். இவரது மரணத்தைச் சுற்றிப் பல மர்மங்கள் நிலவுவதால், அதுகுறித்த விசாரணையை சிபிஐ தற்போது மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. சுஷாந்த் சிங் குடும்பத்தினர் அவருடைய காதலி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

சுஷாந்த் சிங்கிற்கு போதை மருந்து கொடுக்கப்பட்டது என்ற தகவல் நேற்று (ஆகஸ்ட் 26) முதல் பரவி வருகிறது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக கங்கணா ரணாவத்தும் பாலிவுட்டில் போதைப் பொருட்கள் உபயோகிப்பது வழக்கமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தற்போது சுஷாந்த் சிங் வழக்குத் தொடர்பாக பாஜகவின் பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தற்கொலைக்குத் தூண்டியது, இயற்கைக்கு மாறான மரணம் ஆகியவை பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. அமலாக்கப் பிரிவு பண மோசடியை விசாரித்து வருகிறது.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகிறது. தேசியப் புலனாய்வு முகமையும் உள்ளே வர வேண்டுமோ என்னவோ. இந்த வழக்குப் பெரிதாகி வருகிறது. வெவ்வேறு வழக்குகளை இணைக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவும், எல்லா நாடுகளில் இருக்கும் இந்தியர்களும் இதை உன்னிப்பாக, தீவிரமாக, உணர்ச்சிகரமாகக் கவனித்து வருகின்றனர். இதில் உதவும், பங்காற்றும் ஒவ்வொருவரும் சுஷாந்துக்கு நீதி கிடைக்க மட்டுமல்ல, சுத்தமான பாலிவுட் அமைய வேண்டும் என்ற இயக்கத்துக்கும் உதவுகின்றனர்.

இந்தியப் பிரதமருக்கு கங்கணாவின் ட்வீட்டைத் தொடர்ந்து, சுஷாந்துக்கு நீதி (#JusticeforSSR) மற்றும் சுத்தமான பாலிவுட் ஒரு மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்து வருகிறது. தூய்மையான பாலிவுட், தூய்மையான இந்தியா".

இவ்வாறு முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE