பாலிவுட் போன்ற திட்டமிடல் கோலிவுட்டில் இல்லை என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்று படம் இயக்கி ஜெயித்த இயக்குநர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் மிக முக்கியமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழில் அவர் இயக்கிய 'கஜினி' படத்தை, இந்தியில் ஆமிர்கான் நடிப்பில் ரீமேக் செய்தார். அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அதற்குப் பிறகு 'ஹாலிடே', 'அகிரா' ஆகிய படங்களை இந்தியில் இயக்கியுள்ளார். தற்போது முழுக்க தமிழில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்தக் கரோனா ஊரடங்கில் டோக்கியோ தமிழ்ச் சங்கத்துக்கு இணையம் வழியே பேட்டியளித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் தமிழ்த் திரையுலகம், இந்தி திரையுலகம் ஆகியவற்றில் பணிபுரிந்த அனுபவம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் பேசியிருப்பதாவது:
» 'ஆச்சார்யா' கதை சர்ச்சை: தயாரிப்பு நிறுவனம் சாடல்
» அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் ஷாரூக்கான்: அட்லி படம் எப்போது?- புதுத் தகவல்கள்
"பாலிவுட் திரைத்துறையோடு ஒப்பிடும்போது இங்கு தமிழ்த் திரைத்துறையில் முறையான செயல்பாடு என்பது இல்லை. பல இடங்களில் கடன் வாங்கிப் படம் எடுப்பது. அதன் நஷ்டத்தை ஈடுகட்ட இன்னொரு படம், பின் இன்னொரு படம் என்று எடுக்கப்படுகின்றன. எல்லோரும் இல்லை. ஆனால் இப்படிப் படம் எடுப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதனால் நமது துறை பொருளாதார ரீதியில் ஒழுங்கான வளர்ச்சி அடையவில்லை என்று நான் நினைக்கிறேன். படைப்பாற்றலைப் பொறுத்தவரை இங்கு அபரிமிதமாக இருக்கிறது. திரைப்பட ஆர்வம் இருக்கும் பல தயாரிப்பாளர்கள் இருந்தாலும் அவர்களால் சரியாகப் படம் எடுக்க முடிவதில்லை. ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
இந்தி திரைத்துறை என்பது 10-15 வருடங்களுக்கு முன்பு வரை சற்று பின்தங்கியே இருந்தது. தொழில்நுட்ப ரீதியில் அவ்வளவு சிறப்பாக இருக்காது. திடீரென ஆமிர்கான் ஒரு பக்கம், சஞ்சய் லீலா பன்சாலி ஒரு பக்கம், அனுராக் காஷ்யப் ஒரு பக்கம், ராஜ்குமார் ஹிரானி ஒரு பக்கம் எனப் பலரும் பாலிவுட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டார்கள். இன்று அந்தத் துறை எங்கோ ஒரு உயரத்தில் இருக்கிறது.
ஒரு காலத்தில், இந்திப் படம் என்றால் நாயகன் 11 மணிக்குத்தான் வருவார், ஒழுங்காக ஒத்துழைக்க மாட்டார்கள் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டன. பல சர்வதேசத் திரைப்படங்கள் மும்பை, புதுடெல்லி என வடக்கில் எடுக்கப்படுகின்றன. அப்படி ஹாலிவுட் குழு வரும்போது இங்கிருக்கும் உதவி இயக்குநர்களை உதவிக்குப் பணியமர்த்துவார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு படக்குழுவை எப்படிக் கையாள வேண்டும், திட்டமிட வேண்டும் என்று முழுப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.
சென்னையில் நாம் ஒரு படப்பிடிப்புக்குத் திட்டமிடுகிறோம் என்றால் அந்த இடத்துக்குச் சென்ற பிறகுதான் வண்டிகள் நிறுத்த இடமில்லை, கேரவன் எங்கே நிறுத்துவது, வேறு எங்கோ நிறுத்தினால் போலீஸ் பிரச்சினை என்றெல்லாம் ஒவ்வொன்றாக வரும். குழப்பம் நிலவும். யார் என்ன காட்சி, எவ்வளவு பேர் தேவை, எவ்வளவு பேர் வருவார்கள் என்பதில் ஒருங்கிணைப்பு கொஞ்சம் குறைவு.
ஆனால், பாலிவுட்டில் அப்படி இல்லை. ஒரு இடத்தில் படப்பிடிப்பு என்றால் அந்த இடத்துக்குப் பக்கத்தில் எங்கு மருத்துவமனை இருக்கிறது, எங்கு காவல் நிலையம் இருக்கிறது, இன்று சூரிய வெளிச்சத்தில் அதிக நேர படப்பிடிப்பு என்பதால் அனைவரும் கறுப்புக் கண்ணாடி எடுத்து வாருங்கள் என அத்தனை விவரங்களையும் சரியாகக் குறிப்பிட்டு படப்பிடிப்புக்கு வரும் அனைவருக்கும் முன்னதாகவே அனுப்பி விடுவார்கள்.
அங்கு சென்று சேர்ந்தால் எந்த வண்டி எங்கு நிறுத்த வேண்டும், துணை நடிகர்களுக்கு கழிவறைகள் என எல்லாம் தயாராக இருக்கும். ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும்.
திடீரென ஒரு 50 துணை நடிகர்கள், பெண்கள் வந்துவிட்டால் அவர்களுக்குக் கழிவறை வேண்டுமல்லவா? ஆனால் இங்கு அது இருக்காது. பெரிய நடிகர்களுக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கேரவன் இருக்கும். ஆண்கள் எப்படியோ சமாளித்துவிடுவார்கள். துணை நடிகர்களாக வரும் பெண்கள் என்ன செய்வார்கள். அவர்களால் நம்மிடம் வந்து கேட்கவும் முடியாது. அது இங்கு மிகப்பெரிய குறை என்றே நான் சொல்வேன். மும்பையில் இந்தப் பிரச்சினை இருக்காது. உடை மாற்ற அறை, கழிவறை என எல்லாம் தயாராக இருக்கும்.
இந்தத் திட்டமிடல், சரியான அமைப்பு நம்மூரில் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. படப்பிடிப்பில் எல்லோரும் சமம் தான். அவர்களுக்கான வசதிகளைச் செய்து தர வேண்டும். நாயகன் மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு இயக்குநர்தான் பொறுப்பு.
எனது படப்பிடிப்பில் நான் இந்த விஷயத்தில் கவனமாக இருப்பேன். இவ்வளவு பெண் துணை நடிகர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு இவ்வளவு கழிவறைகள் இருக்க வேண்டும் என்று கட்டாயமாகச் சொல்லிவிடுவேன். அதே போல படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் சரியான இடத்தில் குப்பைத் தொட்டி வைத்து அங்குதான் எல்லோரும் குப்பை போட வேண்டும். குப்பைத்தொட்டி இல்லையென்றால் எனக்கு அதிகமாகக் கோபம் வந்துவிடும்.
மருத்துவமனையிலோ, பள்ளியிலோ, கல்லூரியிலோ படப்பிடிப்பு நடக்கும். குப்பைத்தொட்டி இல்லையென்றால் அங்கு வேலை முடிந்ததும் பேப்பர் கப், தட்டு என அங்கங்கு குப்பை சிதறிக் கிடக்கும். படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தவர்கள், பொதுமக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
எனவே படப்பிடிப்பு முடிந்ததும் ஆட்களைக் கூப்பிட்டு அனைத்து கப், ப்ளேட்டுகளை சுத்தம் செய்யச் சொல்லிவிடுவேன். இதை நான் கட்டாயமாகவே சொல்லிவிடுவேன். இது எனக்கு எப்படித் தோன்றியது என்று கேட்டால், பாலிவுட்டில் சென்று பணியாற்றியதால் தோன்றியது. அங்கு சென்றபின்தான் இந்த விஷயம் எனக்குப் புரியவந்தது.
உடனே நான் அங்கு ஆதரிக்கிறேன், இங்கு விரோதி என்றெல்லாம் இல்லை. நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் கற்றுக் கொள்ள வேண்டும். படப்பிடிப்பு டென்ஷனில் இதுவரை யாரும் யோசித்திருக்காமல் போயிருக்கலாம். அதை இனி கவனிக்க வேண்டும் என்றே சொல்கிறேன்".
இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
42 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago