நடிகர் சூரி பிறந்த நாள் ஸ்பெஷல்: தனிச்சிறப்புகள் மிக்க நகைச்சுவைக் கலைஞர் 

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் நெடிய நகைச்சுவைப் பாரம்பரியத்தின் தவிர்க்க முடியாத அங்கமான நடிகர் சூரி இன்று (ஆகஸ்ட் 27) பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

மதுரை மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவரான சூரி சினிமா நடிகராகும் கனவுகளுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். 1998-ல் வெளியான 'மறுமலர்ச்சி' திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தலைகாட்டினார். அதன் பிறகு பல போராட்டங்களுக்குப் பிறகு கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் உதவியாளராகச் சேர்ந்தார். 'சங்கமம்', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'ரெட்', 'வின்னர்', 'காதல்', 'ஜி', 'பீமா' போன்ற பல படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும் தலை காட்டும் பெயர் தெரியாத வேடங்களில் நடித்தார்.

2009-ல் சுசீந்திரன் இயக்குநராகவும் விஷ்ணு விஷால் நடிகராகவும் அறிமுகமான 'வெண்ணிலா கபடிக் குழு;' திரைப்படம் சூரிக்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் முதல் முறையாக படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 50 பரோட்டாக்களை அசால்ட்டாக உண்பவராக அவர் நடித்திருந்த நகைச்சுவைக் காட்சி பட்டிதொட்டி எங்கும் அவரைக் கொண்டு சேர்த்தது. 'பரோட்டா' சூரி என்றே அவர் அழைக்கப்படலானார்.

ஏ.சற்குணம் இயக்கிய முதல் படமான 'களவாணி'யில் நாயகனின் நண்பர்களில் ஒருவராக நகைச்சுவைக்குச் சிறப்பாகப் பங்களித்திருந்தார். அதே ஆண்டு வெளியான 'நான் மகான் அல்ல' படத்தில் நாயகனின் நண்பனாக நகர்ப்புற இளைஞராக அழகாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் நகைச்சுவை மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட குணச்சித்திர வேடம் போன்றது என்றாலும் இதிலும் “மத்தவன் கொடுத்த செக் பேங்க்ல போட்டாதான் பவுன்ஸ் ஆகும், இவன் கொடுத்த செக் தரையில போட்டாலே பவுன்ஸ் ஆகும்” என்பது போன்ற இவர் பேசிய சில நகைச்சுவை வசனங்கள் திரையரங்குகளில் சிர்ப்பலைகளைக் கிளப்பின.

தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவைக்குப் பங்களிக்கும் துணை நடிகராக நடித்துவந்த சூரி 2011-ல் 'வேலாயுதம்' படத்தில் விஜய்யுடன் நடித்ததன் மூலம் மேலும் புகழ்பெற்றார். அதோடு 'மனம் கொத்திப் பறவை', 'சுந்தரபாண்டியன்', தேசிங்கு ராஜா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' போன்ற பல படங்களில் முதன்மை நகைச்சுவை நடிகராக அசத்தினார். நகைச்சுவையை முதன்மைப்படுத்திய பல படங்களில் இவருடைய இருப்பு கலகலப்புடன் சிரிப்புடனும் படம் பார்த்த மனநிறைவை ரசிகர்களுக்கு வழங்குவதில் முக்கியப் பங்களித்தது.

விஜய்யுடன் மீண்டும் 'ஜில்லா' படத்தில் நடித்தார். 'வேலாயுதம்' படத்தைப் போல் அல்லாமல் இதில் இவரே முதன்மை நகைச்சுவைக் கதாபாத்திரமாக நடித்திருந்தார். அஜித்துடன் 'வேதாளம்' படத்தில் முதன்மை நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். சூர்யாவுடன் 'அஞ்சான்', 'சிங்கம் 3' படங்களிலும் நடித்தார்.

முன்னணிக் கதாநாயகர்களில் சிவகார்த்திகேயனுடன் 'மான் கராத்தே', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' எனப் பல படங்களில் வெற்றிக்கூட்டணி அமைத்தவர் சூரி. அதே போல் விஷால், ஜீவா, விமல் ஆகியோருடனும் அதிக படங்களில் நடித்து சிறப்பான நகைச்சுவைக் காட்சிகளைத் தந்தார். இவற்றில் விஷ்ணு விஷாலுடன் அவர் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' ரசிகர்களை விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளைக் கொண்டிருந்தது. கட்டாயத் திருமணத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனிதராக வசனங்கள் மட்டுமல்லாமல் உடல்மொழி, முகபாவனைகள் என அனைத்திலும் சிரிக்க வைத்திருப்பார் சூரி. விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோருடனும் ஒரு சில படங்களில் நடித்து ரசிக்க வைத்தவர்.

இயக்குநர்களில் சுசீந்திரன், சமுத்திரக்கனி, பொன்ராம், ஹரி, பாண்டிராஜ் ஆகியோருடன் அதிகப் படங்களில் பணியாற்றியிருக்கிறார். சுசீந்திரனின் 'ஜீவா', 'மாவீரன் கிட்டு', சமுத்திரக்கனியின் 'நிமிர்ந்து நில்', 'தொண்டன்' போன்ற படங்களில் நகைச்சுவையைத் தாண்டி உணர்வுபூர்வமான குணச்சித்திர நடிப்பிலும் மனதைக் கவர்ந்திருந்தார்.

கடந்த இருபது ஆண்டுகளில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார் சூரி. தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராகவும் நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் சிறப்பாக பங்களிக்கக்கூடிய துணை நடிகராகவும் பரிணமித்திருக்கிறார் சூரி. அதோடு வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் கதையின் நாயகனாக அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை அடையவிருக்கிறார். அதிலும் அவர் வெற்றிபெறுவார் என்று நம்பலாம்.

ஒரு நகைச்சுவை நடிகராகப் பார்வையாளர்கள் தங்களில் ஒருவராக அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய தோற்றம் உடல்மொழி, வசனம் சார்ந்த இருவகையான நகைச்சுவையிலும் சிறப்பாக வெளிப்படுத்தல் கிராமப்புறக் கதைகள், சிறுநகரக் கதைகள், பெருநகர்ப்புறக் கதைகள் என அனைத்து கதைக் களங்களுக்கும் பொருந்துவது ஆகியவை சூரியின் சிறப்புகள். அரிதான வசன உச்சரிப்புகள், பிறமொழிச் சொற்களை நகைச்சுவையாக உச்சரிப்பது ஆகியவையும் ஒரு நகைச்சுவைக் கலைஞராக அவருடைய தனி முத்திரையாகத் திகழ்கின்றன.

இன்று தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புதிய திறமைசாலிகள் கால் பதிக்கிறார்கள். நகைச்சுவை திறமையை முன்வைப்பவர்களே இந்தப் புதியவர்களில் அதிகம். இதனால் நிலவும் கடும் போட்டியைத் தாண்டியும் தன்னுடைய அபார நகைச்சுவைத் திறனாலும் தனிச் சிறப்புகளாலும் ஒரு நகைச்சுவைக் கலைஞராகவும் துணை நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தவிர்க்க முடியாத இடத்தைத் தக்கவைத்திருக்கிறார் சூரி. அவர் மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்கவும் சாதனைகளை நிகழ்த்தவும் மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE