'சூரரைப் போற்று' தொடர்பாக யார், யாரிடம் பேசுவது என்ற குழப்பமான சூழல்: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

'சூரரைப் போற்று' தொடர்பாக யார், யாரிடம் பேசுவது என்ற குழப்பமான சூழ்நிலை உள்ளதாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பலரும் சூர்யா நடிக்கும் படங்களுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடியில் வெளிவருவது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலோ, நடிகர் சங்கத்திலோ தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில் இது விஷயமாக யார், யாரிடம் பேசுவது என்ற குழப்பமான சூழ்நிலை உள்ளது.

இதில் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நிலை குறித்தும், பட வெளியீட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆன்லைன் டிக்கெட்டிங் மற்றும் வி.பி.எஃப் குறித்தும் நிரந்தரத் தீர்வு காண திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட முத்தரப்பினரும் அமர்ந்து பேசி, எல்லோருடைய கருத்தையும் அறிந்து சுமுகமான நல்ல முடிவினை எடுத்து அதை நடைமுறைக்குக் கொண்டு வந்து செயல்படுத்தித் திரை உலகம் செழிக்க திரையரங்க உரிமையாளர்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்".

இவ்வாறு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE