இந்தி சின்னத்திரை படப்பிடிப்பில் கரோனா தொற்று: 7 பேர் பாதிப்பு

By செய்திப்பிரிவு

இந்தி சின்னத்திரை மெகா தொடர் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட 7 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

'யே ரிஷ்தா க்யா கேஹ்லதா ஹாய்' என்கிற தொடரின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இதில் சச்சின் தியாகி என்பவருக்கு முதலில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது சக நடிகர்கள் சமீர் ஓன்கார், ஸ்வாதி சித்னிஸ் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டு அதில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்குழுவைச் சேர்ந்த மேலும் 4 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ராஜன் சாஹி, "தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் மூன்று நடிகர்களும் எங்கள் குழுவில் முக்கியமானவர்கள். அவர்களுக்கு அறிகுறிகள் இல்லை என்பதால் வீட்டுத் தனிமையில் இருக்கிறார்கள். படப்பிடிப்பிலிருந்த அத்தனை பேருக்கும் உடனடியாகப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எங்கள் குழுவில் உள்ள மேலும் 4 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சிக்குத் தகவல் சொல்லி ஒட்டுமொத்த அரங்கிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

வீட்டுத் தனிமையில் அனைவருக்கும் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியம். தொடர்ந்து அவர்களுடன் பேசி வருகிறோம். அனைவரது பாதுகாப்பு எங்கள் கடமை. எனவே, அனைத்துப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இதே படப்பிடிப்பில் பங்கேற்ற சக நடிகர்கள் ஷிவாங்கி, மோஸின் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதாக புதன்கிழமை காலை செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE