’கேப்டன்’ விஜயகாந்தின் முதல் வெற்றி... ‘சட்டம் ஒரு இருட்டறை’! 

By வி. ராம்ஜி

அந்த நடிகரின் முதல் மூன்று படங்கள் ரசிகர்களைக் கவரவில்லை. அதேபோல் அந்த இயக்குநரின் முதல் படம் வெற்றி பெறவில்லை. நடிகரும் இயக்குநரும் இணைந்தார்கள். மிகப்பெரிய வெற்றியைச் சுவைத்தார்கள். அட்டகாச வெற்றி கிடைத்தது. அந்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். நடிகர்... விஜயகாந்த். அந்தத் திரைப்படம்... ‘சட்டம் ஒரு இருட்டறை’.

மன்னர் காலப் படங்கள் எடுப்பதில் சிலர் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். புராணப் படங்களை இவரைப் போல எடுக்கமுடியாது எனும் அளவுக்கு படங்கள் எடுப்பார்கள். பாசத்தை உணர்த்தும் படங்கள், கிராமிய மணம் கமழும் படங்கள், பழிக்குப் பழி படங்கள், காதல் படங்கள், காதலில் கல்லூரிப் படங்கள், க்ரைம் படங்கள், காமெடிப் படங்கள், அரசியல் படங்கள், சமூக அவலங்களைச் சொல்லும் படங்கள் என்றெல்லாம் பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலின்படி தனித்தனியே ராஜாங்கம் பண்ணிய இயக்குநர்களையும் சொல்லலாம்.

அந்த வகையில், சட்டத்தை வைத்துக்கொண்டு படம் பண்ணிய இயக்குநர் எனும் பெருமைக்கு உரியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதிலொரு ஸ்பெஷல்... அந்த சட்டநுணுக்கங்கள் கொண்ட படத்தில், பாசம் இருக்கும். காமெடி இருக்கும். க்ரைம் கலந்திருப்பார். காதலும் இருக்கும். அரசியல் முகமூடியும் கிழிக்கப்படும். சமூகப் பிரச்சினைகளும் அலசப்படும். அத்தனையையும் ஒவ்வொரு படத்துக்குள்ளும் புகுத்தி, நுழைத்து, கலந்து, ஒரு ஃப்ரூட்மிக்ஸர் ஜூஸ் போட்டுக் கொடுப்பதில் வல்லவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இவர் எடுத்த பல படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கின்றன. தமிழில் இருந்து பல மொழிகளுக்கு ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. இவருக்கென ஒரு ஸ்டைல், இவருக்கென ஒரு பாணி, இவர் படத்துக்கென சில இயல்புகள் என வைத்துக்கொண்டு ஜித்து வேலை காட்டிய மிகச்சிறந்த கதாசிரியர், அற்புதமான ரைட்டர், தெளிவுத் திரைக்கதைக்கானவர், அட்டகாசமாய் இயக்கக்கூடியவர் எனப் பல பெருமைகள் கொண்டவர்.

1981ம் ஆண்டு வெளியான படம் சட்டம் ஒரு இருட்டறை. எடுத்துக்கொண்ட கதை அரதப் பழசுதான் என்றாலும் அது சொல்லப்பட்ட விதத்தில்தான் எல்லா சென்டர்களிலும் வெற்றி பெற்றது, இந்தத் திரைப்படம். படம் வெளியாகி 39 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் இந்தப் படம் ஃப்ரெஷ்ஷாக, அப்படியே இருக்கிறது மனதுக்குள். எதுஎதையோ ரீமேக்குகிறவர்கள், இந்தப் படத்தை எப்போது வேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம். எவர் நடித்துவேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம். அத்தனை முறையும் வெற்றித் தீர்ப்பை எழுதுவார்கள் ரசிகர்கள். அதுதான் இந்தப் படத்தின் மிகச்சிறந்த ஸ்கிரிப்ட்!

பெரிய தொழிலதிபரை மூன்று கெட்டவர்கள் இணைந்து கொன்றுவிட, அதைப் பார்த்துவிட்ட ஒருவர், சாட்சி சொல்கிறார். அதனால் மூவருக்கும் 12 வருடத் தண்டனை கிடைக்கிறது. ஜெயிலில் தண்டனை அனுபவிக்கும் மூன்று பேரும் ஜெயிலில் இருந்து வந்து, சாட்சி சொன்னவரைக் கொல்கிறார்கள். அவரின் மூத்தமகளைக் கற்பழித்துக் கொல்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்ணுக்கு முன்னே பார்த்துக்கொண்டு, அம்மாவுடனும் அக்காவுடனும் இருந்தபடி கதறித்துடிக்கிறான் சிறுவன். இந்தச் சிறுவன்தான் ஹீரோ என்பதை, பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் என்று தெளிவுறச் சொல்லிவைத்திருக்கிறது சினிமாச் சட்டம்!

ஆனால், பொத்தாம்பொதுவாக, சட்டப்படி சொல்லமுடியாமல், சட்டப் பாயிண்டுகளையெல்லாம் துணைக்கு வைத்துக்கொண்டு வாதப்பிரதிவாதங்கள் செய்வது போல, இந்தக் கதையை வைத்துக்கொண்டு, அழகாய் ரூட் போட்டு, திரைக்கதையுமாக்கி படமெடுத்ததுதான் எஸ்.ஏ.சி-யின் அசகாயசூரத்தனம்!

போலீஸ் ஸ்டேஷனுக்கு குழந்தைகளுடன் சென்று, கொன்ற விவரங்களைச் சொல்லுவார்கள். ஆனாலும் பயனில்லை. ‘உள்ளே ஜெயில்ல இருக்கற மூணு பேரும் எப்படிப்பா கொன்னுருக்கமுடியும்’ என்று சொல்லுவார்கள். நொந்து போன அந்தக் குடும்பம், தலை குனிந்து வீடு திரும்பும். அந்தச் சிறுவன் இளைஞனாவான். கொலை செய்யும் எண்ணமும் வளர்ந்து விஸ்வரூபமெடுத்திருக்கும். அந்த இளைஞனின் அக்கா, போலீஸாக இருப்பார். ‘எந்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு அவர்கள் தப்பித்தார்களோ, அதேச் சட்டத்தைக் கொண்டு அவர்களைக் கொல்லுவேன்’ என்று சபதமிடுகிறான் நாயகன். சட்டத்தை மீறி எதையும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அதைத் தடுப்பவளும் நானே; உன்னைச் சிறைப் பிடிப்பவளும் நானே... என்று சூளுரைக்கிறாள் நாயகனின் சகோதரி!

ஒருபக்கம் வில்லன்களின் கூட்டத்தைப் பந்தாடவேண்டும். இன்னொரு பக்கம் போட்ட சபதம் நிறைவேற்ற வேண்டும். நடுவே அக்காவே கட்டையைக் கொடுக்கிறாள். ஆனால் அத்தனையும் சமாளிப்பான் ஹீரோ. அதுவும் எப்படி? மூன்று கொலைகள். மூன்றே மூன்று கொலைகள். அந்த மூன்று கொலைகளையும் சட்ட மீறலாக, சாட்சிகள் ஏதுமின்றி, சொல்லப்போனால் சட்டத்தையே சாட்சிகளாக்கிக்கொண்டு துவம்சம் பண்ணுவதுதான் ’சட்டம் ஒரு இருட்டறை’!

இப்படியொரு பரபர சுறுசுறு விறுவிறு கதை, தீயாய்ப் பற்றிக்கொண்டது. பார்த்தார்கள். கூட்டம்கூட்டமாக வந்து பார்த்தார்கள். பார்த்தவர்களே பார்த்தார்கள். பார்த்தவர்கள், பார்க்காத உறவுகளையும் நட்பையும் அழைத்துக்கொண்டு வந்து பார்த்தார்கள்.

படத்தின் நாயகன் விஜயகாந்த். ஏற்கெனவே அப்படி இப்படியெனப் படங்கள் வந்தன. இயக்குநர் சந்திரசேகரன்,ஏற்கெனவே ஒரு படத்தை எடுத்து அதுசரியாகப் போகவில்லை. விஜயகாந்துக்கும் அப்படித்தான். வந்த படங்கள் எதுவும் ஓடவில்லை. பேர் சொல்லவில்லை. நல்ல படம் என்று கூட சம்பாதித்துக் கொடுக்கவில்லை. ஆக, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் விஜயகாந்துக்கும் வெற்றிக்கனியை வழங்கியதில், முதல் படம் முழுமையான படம் என்கிற பெருமையைப் பெறுகிறது சட்டம் ஒரு இருட்டறை.

நூறுநாள் விழாவெல்லாம் கொண்டாடினார்கள். அதையடுத்து இருவருக்குமே ஏகப்பட்ட படங்கள் வரிசையாக ஒப்பந்தமாகின. அந்த வகையில் விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இப்போது விஜய்யின் ரசிகர்களாக இருக்கிறவர்களுக்கும் மறக்கமுடியாத படம் இது.

படத்தின் கதை ஷோபா. எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி. படத்தில், விஜயகாந்தின் பெயர் விஜய். அதுமட்டுமா? விஜயகாந்துக்கு குரல் கொடுத்திருப்பவர் எஸ்.ஏ.சி.யின் மைத்துனர் பாடகர் எஸ்.என்.சுரேந்தர்.

‘பகலில் ஒரு தாகம் இரவில் அது தீரும்’ என்று ஒரு கிளப் டான்ஸ் பாட்டு. நம்மை ஆடவைக்கும் இசை. ’தனிமையிலே ஒரு ராகம்’ பாடல் அழகிய டூயட். பூர்ணிமாதான் நாயகி. கிளப் டான்ஸர். விஜயகாந்தின் காதலி. சங்கிலிமுருகன், செளத்ரி முதலான மூன்றுபேர் வில்லன்கள். அவர்கள் மூவரையும் தனித்தனியே, எந்தச் சாட்சியமும் இல்லாமல் கொல்லும்விதம், கைத்தட்ட வைக்கும். அந்த யுக்தி ஆஹா சொல்லவைத்தது.

விஜயகாந்தின் அக்காவாக, போலீஸ் கேரக்டரில் வசுமதி. அக்காவுக்கும் தம்பிக்கும் நடக்கிற சட்ட சண்டைகள் கலாட்டா ரகம். அதுவும் தம்பியிடம் அன்பாய்ப் பேச்சுக் கொடுத்தபடியே அந்தக் கொலையைப் பற்றிய விஷயங்களை டேப்ரிக்கார்டரில் தெரியாமல் பதிவு செய்வதும், சொல்லி முடித்தபிறகு டேப்ரிக்கார்டரைப் போட்டால், பேசியது எதுவும் பதிவாகாமல் ’ஏமாறச் சொன்னது நானா?’ பாடல் ஒலிபரப்பாவதும் தெறித்துக்கைத்தட்டி ரசித்து மகிழ்ந்தார்கள் ரசிகர்கள்.

அன்றைக்கு விஜயகாந்தை விட பல படிகள் முன்னேறி உயரத்தில் இருந்த ரஜினியின் ஹிந்தி வெற்றிக்கு, இந்தப் படமும் ஒரு காரணம். ஆமாம்... இங்கே விஜயகாந்த் நடித்த கேரக்டரில் அங்கே ரஜினி பண்ணியிருந்தார்.

‘சட்டம் ஒரு இருட்டறை’ பாட்டு, அப்போது எங்கு பார்த்தாலும் ஒலித்தன. படத்திலும் (சங்கர்) கணேஷ் நடித்திருப்பார். அந்தப் பாட்டுக்கு உள்ளே வருகிற காட்சிகள் பொளேர், சுளீர் ரகங்கள். சமூக அவலங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் சட்டத்தின் பாரபட்சங்களையும் சாமான்யர்களின் பார்வையில் இருந்தே படமாக்கிக் கொளுத்திப்போட்டிருப்பார் எஸ்.ஏ.சந்திரசேகரன். படத்தின் நடுவே, ஓரிடத்தில் டைரக்‌ஷன் கார்டு போடுவது பாக்யராஜ் பாணி. இதில் எஸ்.ஏ.சி.யும் அப்படித்தான் டைட்டிலில் டைரக்‌ஷன் கார்டு போட்டிருப்பார்.

விஜயகாந்த் திரைக்கு வந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தப் படம் வந்து 39 ஆண்டுகளாகின்றன. இன்றைக்கு ஆகஸ்ட் 25ம் தேதி விஜயகாந்த் பிறந்தநாள்.

இந்தநாளில் கேப்டனை வாழ்த்துவோம். அவரின் திரைவாழ்வில், முதல் வெற்றிப்படமாக அமைந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’யை நினைவுகூர்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்