'சூரரைப் போற்று' ஓடிடி வெளியீட்டைக் கைவிடுக: சூர்யாவுக்கு இயக்குநர் ஹரி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

'சூரரைப் போற்று' திரைப்படத்தை ஓடிடியில் வெளியீடும் திட்டம் குறித்து நடிகர் சூர்யாவுக்கு இயக்குநர் ஹரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கையும் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இந்தப் படம் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஆகஸ்ட் 22-ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சூர்யாவின் இந்த முடிவு திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது. தற்போது 'சூரரைப் போற்று' படத்தை ஓடிடியில் வெளியிடும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று சூர்யாவுக்கு இயக்குநர் ஹரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள்...

ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல.

நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு, தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால்தான், நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்.

சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், தியேட்டர் என்கிற கோயிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கு, உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம்.

தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்".

இவ்வாறு இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகவிருந்த 'அருவா' படத்தில் நடிக்கவே தேதிகள் ஒதுக்கியிருந்தார் சூர்யா. தற்போது அந்தப் படம் கைவிடப்பட்டு இருப்பது நினைவு கூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE