வேட்டையாடு விளையாடு வெளியான நாள்: உயர்தரமான போலீஸ் த்ரில்லர் 

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் எத்தனையோ காவல்துறை திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன; ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றன. கெளதம் மேனன் இயக்கத்தில் 2003-ல் வெளியான 'காக்க காக்க' அதுவரை வந்த காவல்துறைப் படங்களிலிருந்து பல வகைகளில் மாறுபட்டிருந்தது. அந்தப் படத்தின் நாயகன் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாகத் தெரிந்தார். படத்தின் உருவாக்கமும் அதி நவீன ஸ்டைலிஷ் தன்மையுடன் இருந்தது. இதன் தொடர்ச்சி என்று சொல்லத்தக்க வகையில் 2006-ல் இதே நாளில் (ஆகஸ்ட் 25) வெளியான 'வேட்டையாடு விளையாடு' ஸ்டைலிஷ் காவல் துறை த்ரில்லர் படம் என்கிற வகைமையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத படமாக அமைந்தது.

'மின்னலே', 'காக்க காக்க' படங்களின் மூலம் தன் திறமையை நிரூபித்திருந்த இயக்குநர் கெளதம் மேனன் தமிழில் தன்னுடைய மூன்றாம் படத்திலேயே மிகப் பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருந்த அனுபவம் வாய்ந்த நடிகரான கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். முதலில் தன்னுடைய 'தசாவதாரம்' கதையை கெளதம் இயக்க வேண்டும் என்று கமல் விரும்பினார். ஆனால் அதிதீவிர கமல் ரசிகரான கெளதம் கமலைத் தன் சொந்தக் கதையில் இயக்குவதில் பிடிவாதமாக இருந்தார். கெளதமின் திறமையை நம்பிய கமல் அதற்கு ஒப்புக்கொண்டதால் 'வேட்டையாடு விளையாடு' படம் உருவானது.

1990-களில் அறிமுகமான இயக்குநர் ஷங்கரின் மூன்றாம் படமான 'இந்தியன்' கமல் திரைவாழ்வில் பல வகைகளில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதேபோல் புத்தாயிரத்தில் அறிமுகமான கெளதமின் மூன்றாம் படத்தில் கமல் நடித்ததும் அதுவும் அவருடைய நெடிய திரைவாழ்வில் மிகப் பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்று காலத்தைக் கடந்து நிற்பது ஒரு சுவாரஸ்ய பொருத்தம்தான் ('மின்னலே' இந்தி மறு ஆக்கமான 'ரெஹ்னா ஹே தேரே தில்மே', 'காக்க காக்க' தெலுங்குப் பதிப்பான 'கர்சானா' இரண்டையும் சேர்த்தால் இது கெளதம் இயக்கிய ஐந்தாவது படம்).

'வேட்டையாடு விளையாடு' 'காக்க காக்க'வின் இரண்டாம் பாகம் என்றோ தொடர்ச்சி என்றோ வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இரண்டுக்கும் இடையில் கருப்பொருள் (Theme) தொடர்ச்சி இருந்தது. இவை இரண்டும் மட்டுமல்லாமல் பின்னாளில் அஜித் நடிப்பில் கெளதம் இயக்கிய 'என்னை அறிந்தால்' படமும் இவ்விரண்டு படங்களின் தொடர்ச்சிதான். இவை மூன்றுக்குமே அடிப்படையான தொடர்பு இருப்பதை கெளதம் பேட்டிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் இவை மூன்றையும் இணைத்து Gautham's Cop Trilogy என்று குறிப்பிடப்படுவதுண்டு.

'வேட்டையாடு விளையாடு' படத்தைப் பொறுத்தவரை இந்தத் தொடர்ச்சியில் மூன்றாவதாக அமைந்திருக்க வேண்டிய படம். ஏனென்றால் 'காக்க காக்க' அன்புச்செல்வன், 'என்னை அறிந்தால்' சத்ய தேவ் ஆகியோரைவிட இந்தப் படத்தின் நாயகனான டிசிபி ராகவன் வயதில் மூத்தவர். வயதுக்குரிய நிதானமும் முதிர்ச்சியும் தர்க்க அறிவுமும் சமயோசிதமும் நிறைந்தவர். அதே நேரம் வீரத்திலும் மற்ற இருவருக்கும் எந்த வகையிலும் சளைக்காதவர். இப்படி ஒரு கதாபாத்திரத்துக்கு அந்தக் காலகட்டத்தின் கமல் கச்சிதமான தேர்வாக இருந்தார். இந்தப் படம் உருவானபோது அவருடைய நிஜ வயது 50களைத் தொட்டிருந்தது. கிட்டத்தட்ட அதே வயதுடைய அல்லது அதற்குக் கொஞ்சம் குறைவான வயதைக் கொண்ட கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். காவல்துறை அதிகாரி என்றால் நரம்பு புடைக்கும் உடற்கட்டைப் பேண வேண்டும் என்று 'காக்க காக்க' உருவாக்கிய எதிர்பார்ப்பை கெளதமின் அடுத்த படமே உடைத்தது. மெல்லிய தொப்பையுடன் கூடிய, வயதைப் பிரதிபலிக்கும் உடலமைப்புடன் கமல் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உண்மையில் அதற்கு முந்தைய படங்களில் தீவிர உடற்பயிற்சி செய்து கடினமான உடற்கட்டைக் கொண்டுவந்த கமல், இந்தப் படத்தில் அதைச் செய்யவில்லை என்பதில்தான் ஒரு நடிகராக அவருடைய தனித்தன்மை மிக்க வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொடூரமான முறையில் கொன்று புதைத்துவிட்டுச் செல்லும் இரண்டு சைக்கோ கொலைகாரர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரியின் கதைதான் 'வேட்டையாடு விளையாடு'. படத்தின் பெரும் பகுதி அமெரிக்காவில் நடப்பது போல் அமைந்திருந்தது, அமெரிக்காவில் ஒரு இந்தியக் காவல் அதிகாரியின் துப்பறியும் பணி. அது சார்ந்த நடைமுறைகள், ஒவ்வொரு காட்சியிலும் இடம், நேரம், அனைத்தையும் குறிப்பிடுவது எனப் பல வகைகளில் 'வே.வி' ஒரு தரமான வெளிநாட்டுப் படத்தைப் பார்க்கும் உணர்வைக் கொடுத்தது. அதே நேரம் ஒரு சராசரி ரசிகன் எதிர்பார்க்கும் 'அடுத்து என்ன' என்ற சுவாரஸ்ய உணர்வையும் படம் முழுக்கத் தக்க வைத்திருந்தது. கெளதம் மேனனின் சாயலில் நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்களும் படத்துக்கு அழகூட்டின.

கமல் - ஜோதிகா இடையே அரும்பும் முதிர்ச்சியான காதல் மிக அழகாகக் கையாளப்பட்டிருந்தது. நாயகன் எப்படி இருந்தாலும் எவ்வளவு வயதுடையவர் என்றாலும் அவரால் காதலிக்கப்படும் பெண் கன்னித்தன்மை இழக்காதவராகவே இருக்க வேண்டும் என்ற எழுதப்படா விதியை உடைப்பதாகவும் அமைந்திருந்தது. இந்த விஷயத்தில் மிகவும் முற்போக்கான முன்னெடுப்பை நிகழ்த்திய 'வே.வி', கொடூரமாகக் கொலை செய்யும் வில்லன்களை தன்பால்/ இருபால் ஈர்ப்பார்களாகக் காண்பித்த விதம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஏற்கெனவே தன்பாலின, இருபாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட பாலியல் சிறுபான்மையினர் மீது சமூகத்தில் நிலவும் காரணமற்ற வெறுப்பை இதுபோன்ற சித்தரிப்புகள் அதிகரிக்கும் என்று சில விமர்சகர்களும் செயற்பாட்டாளர்களும் முன்வைத்த விமர்சனம் நியாயமானதுதான்.

அரசியல் சரித்தின்மை சார்ந்த இதுபோன்ற பாராட்டுகளையும் விமர்சனங்களையும் தாண்டி காவல்துறை அதிகாரியை முன்வைத்து எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த வெகுஜனத் திரைப்படம் என்ற அளவில் 'வேட்டையாடு விளையாடு' அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி மிகப் பெரிய வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. கமல்ஹாசன் ரசிகர்களைப் பொறுத்தவரை படத்தில் அவருடைய அறிமுகக் காட்சியில் “என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என்று சொல்வது தொடங்கி இறுதி ”சின்ன பசங்களா யார் கிட்ட” என்று பேசுவதுவரை பஞ்ச் வசனங்கள் ஆர்ப்பரிக்க வைத்தன.

அதே நேரம் காட்சிகளும் கமல் என்னும் திரை ஆளுமையின் கிளாஸ்+மாஸ் தன்மைக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருந்தன. இந்தப் படத்தில் ஒரு படைப்பாளியாக கமல் எந்த விதத்திலும் தலையிடவில்லை என்று தெரியவந்தது. ஆனால், ஒரு நடிகராக கமல் வழக்கம்போல் ஆகச் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். நீண்ட காலத்துக்குப் பிறகு அவர் ஒரு படத்தில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியதால் அது இன்னும் சிறப்பாக வெளிப்பட்டதாக உணர்ந்தவர்களும் உண்டு.

கதாநாயகி ஜோதிகா, துணை நடிகர்கள் பிரகாஷ்ராஜ், வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி என அனைவருமே வெகு சிறப்பாக நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. பின்னணி இசையும் படத்துக்கு வலு கூட்டியது. ரவி வர்மனின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொகுப்பு ஆகியவை படத்தின் உருவாக்கத் தரத்தைப் பன்மடங்கு கூட்டுபவையாக இருந்தன.

மொத்தத்தில் வெளியான நேரத்தில் மிகப் பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற 'வேட்டையாடு விளையாடு' அதன் பல்வேறு சிறப்புகள் பல தலைமுறைகளைத் தாண்டி ரசிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

மேலும்