சமூக வலைதளத்தில் சோனாக்‌ஷி சின்ஹா குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்து: இளைஞர் கைது

By ஐஏஎன்எஸ்

சமூக வலைதளத்தில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா குறித்து அருவருக்கத்தக்க வகையில் பின்னூட்டமிட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் செய்யப்படும் கேலி, கிண்டல், வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளுக்கு எதிராக மும்பை போலீஸார் மற்றும் சைபர் நிபுணர்களுடன் இணைந்து ‘மிஷன் ஜோஷ்’ என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கினார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.

இந்த ‘மிஷன் ஜோஷ்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிபுணர்களுடன் நேரலையில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.

இந்நிலையில் கடந்த ஆக்ஸ்ட் 14-ம் தேதி அன்று ஆன்லைன் கேலி, கிண்டல்கள் குறித்து சோனாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் சிலர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் பின்னூட்டம் இட்டிருந்தனர். அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்து மும்பை சைபர் க்ரைம் போலீஸாரிடம் ஒப்படைத்தார் சோனாக்‌ஷி சின்ஹா. அதனடிப்படையில் அவுரங்காபாத்தைச் சேர்ந்த சசிகாந்த் குலாப் ஜாதவ் என்ற 27 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ள சோனாக்‌ஷி சின்ஹா, ''என்னுடயை புகாரின் அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுத்த மும்பை சைபர் க்ரைம் போலீஸாருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்களும் இதேபோல துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்பதற்காகவே நான் அவர்கள் மீது புகார் அளித்தேன். நமக்கும் மற்றவருக்கும் நடக்கும் ஆன்லைன் கிண்டல்களை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE