ட்விட்டரில் இணைந்த கங்கணா: சமூக ஊடகத்தின் சக்தியை உணர்ந்ததாக விளக்கம்

நடிகை கங்கணா ரணவது ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார். இது குறித்து காணொலி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு கங்கணாவின் சகோதரி ரங்கோலி உண்மைக்குப் புறம்பாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் ட்வீட் செய்ததால் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இத்தனைக்கும் கங்கணாவின் மேலாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரங்கோலி தான் கடந்த காலங்களில் கங்கணாவின் சார்பாக ட்வீட் செய்தது. இந்த முடக்கத்தைத் தொடர்ந்து ட்விட்டர் தளத்தையே இந்தியா தடை செய்ய வேண்டும் என்று கங்கணா ஆவேசப்பட்டிருந்தார். தொடர்ந்து அவரது குழு ஒன்று புதிய கணக்கை ஆரம்பித்து அதன் மூலம் கங்கணாவின் கருத்துகள் பகிரப்பட்டிருந்தன.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கங்கணாவின் கருத்து, காணொலிகள், பேட்டிகள் இந்தக் கணக்கின் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்டன. தற்போது கங்கணா தனிப்பட்ட முறையில் மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள காணொலியில் பேசியதாவது:

"15 வருடங்களாக நான் திரைத்துறையில் இருக்கிறேன். சமூக ஊடகத்தில் இணைய வேண்டும் என்று சில சமயங்கள் எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகத்தில் இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தங்களில் இருந்த நிபந்தனை காரணமாக நான் கோடிக்கணக்கான விளம்பர வாய்ப்புகளை விட்டிருக்கிறேன் என்பது ஏஜன்ஸிக்களுக்கும், சில பிராண்டுகளுக்கும் தெரியும். என்னை அரக்கி என்றிருக்கிறார்கள், நான் சமூக ஊடகத்தில் இல்லாததைப் பயன்படுத்தி என்னை வசை பாடியுள்ளார்கள்.

ரசிகர்களிடமிருந்து நான் தள்ளி இருப்பதாக உணரவில்லை என்பதால் தான் நான் சமூக ஊடகத்திலிருந்து விருப்பத்துடன் தள்ளி இருந்தேன். இவ்வளவு அடிப்படையான ஒரு வழியில் நான் ஏன் என் கருத்துகளைக் கூற வேண்டும், நான் ஏதாவது சொல்ல விரும்பினால் அதை என் படத்தின் மூலமாகச் சொல்லலாம் என்று நினைத்தேன். என் படங்களில் பெண்கள் உரிமை, தேசபக்தி குறித்து நான் பேசியிருக்கிறேன். கலைப்பூர்வமாக கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பது பல காலமாக எனது கொள்கை.

ஆனால் இந்த வருடம் சமூக ஊடகத்தின் சக்தியை நான் கவனித்தேன். சுஷாந்துக்காக எப்படி ஒட்டுமொத்த உலகமும் திரண்டு வந்து போராடி வெற்றி பெற்றது என்பதைப் பார்த்தேன். அது என்னை நேர்மறையாக உணர வைத்தன. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் சீர்திருத்தங்களை முன்னெடுக்கலாம் என்பதில் எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. அதனால் நான் ட்விட்டரில் இணைந்துள்ளேன். ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். தொடர்ந்து உங்களின் உதவியும், ஆதரவும் எனக்குத் தேவை. இந்த அற்புதமான பயணத்தில், இன்னும் பல அற்புத மனிதர்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். இந்த வாய்ப்புக்கு நன்றி" என்று கங்கணா பேசியுள்ளார்.

கங்கணா ட்விட்டரில் இணைந்ததைத் தொடர்ந்து #BollywoodQueenOnTwitter என்கிற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE