அப்பாவின் புற்றுநோய் சிகிச்சைக்கு முதன்முதலில் உதவியர் சஞ்சய் தத் - இர்ஃபான் கானின் மகன் உருக்கம்

கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதியன்று சுவாசப் பிரச்சினை, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஞ்சய் தத், தன் உடல் நலனைக் கவனித்துக் கொள்ள நடிப்பிலிருந்து சில காலம் ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்தார்.

மேற்கொண்டு அவரது குடும்பத்திலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றாலும் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக திரைத்துறையைச் சேர்ந்த கோமல் நட்டா பகிர்ந்தார். தற்போது இதற்கான சிகிச்சை மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சஞ்சய் தத்துக்குத் தொடங்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் சஞ்சய் தத் விரைவில் குணமடைய சமூகவலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சஞ்சய் தத் உடல்நிலை குறித்து எந்தவொரு வதந்தியையும் பரப்ப வேண்டாம் என்று மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஊடகங்களுக்கு நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் சஞ்சய் குறித்த தகவல்களில் யூகத்தை கலக்க வேண்டாம். அது உங்கள் பணி என்பதை நான் அறிவேன். அதே நேரத்தில் நமது ஆன்மாவில் மனிதத்தின் உணர்வுகளும் கலந்துள்ளன என்பதையும் நான் அறிவேன். சஞ்சுவுக்கு அவரது குடும்பத்தினருக்கும் தேவையான நேரத்தை அவர்களுக்கு வழங்குங்கள். ஒரு ரகசியம் சொல்கிறேன்: என் அப்பா முதன்முதலில் சிகிச்சைக்கு சென்றபோது எல்லா வகையில் உதவி செய்யமுன்வந்தவர் சஞ்சு பாய் தான். அப்பா இறந்த பிறகும் எங்களுக்கு ஆதரவாக இருந்த சிலரில் சஞ்சுவும் ஒருவர். ஊடக பரபரப்பின்றி அவரை இந்த நோயை எதிர்த்து போராட விடுங்கள். விரைவில் அவர் இந்த கட்டத்திலிருந்து மீண்டு வருவார்.

இவ்வாறு பாபில் கான் கூறியுள்ளார்.

நடிகர் இர்ஃபான் கான் கடந்த ஏப்ரல் மாதம் புற்றுநோயால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE