ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக இயக்குநர் M.பாஸ்கர் M.A. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய மற்றுமொரு படம் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ (1982). ஒளிப்பதிவு, விஸ்வம் நட்ராஜன். இசை, சங்கர் கணேஷ். முழுமையான பொழுதுபோக்குக்கு உத்தரவாதமளிக்கும் நயமான திரில்லர் வகைப் படம் இது.
அன்பான கணவன், மனைவி, அழகுக் குழந்தை என்று நிம்மதியாக வாழ்ந்த ஒரு குடும்பத்துக்கு ஏற்பட்ட சிக்கலும் அதிலிருந்து அது எப்படி மீண்டது என்பதுமே கதை. ராஜேஷ் (சிவகுமார்) ஒரு பெரிய நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகப் பணிபுரிகிறார். அவருடைய மனைவி ராதா (அம்பிகா). இவர்களுடைய குழந்தை ப்ரியா (பேபி மீனா). பிற பெண்களுடன் ராஜேஷுக்குத் திருமணம் தாண்டிய உறவு உள்ளதோ என்பது ராதாவின் சந்தேகம். அது தொடர்பாக அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது. காரசாரமாக வந்துவிழும் வார்த்தைகள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கின்றன. ராதாவை வர்கீஸ் என்னும் உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறான் ராஜேஷ்.
அன்று ஏப்ரல் 1. வழக்கம்போல் அலுவலகம் சென்று வருகிறான் ராஜேஷ். குழந்தை வரவேற்பறையில் இருக்கிறாள். ராதா படுக்கையறையில் பொட்டு கலைந்து, காதில் ஒரு தோடு இல்லாமல் சற்று அலங்கோலமான தோற்றத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். ராஜேஷின் வாசிப்பு அறையில் ரிக்கார்ட் ப்ளேயர் இயங்கிக்கொண்டிருக்கிறது. பயன்படுத்திய இரண்டு கப் அண்ட் சாஸர்கள் அப்புறப்படுத்தப்படாமல் டீப்பாயின் மீது உள்ளன. இவையெல்லாம் ராஜேஷுக்கு ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது அவன் தன் வாசிப்பறைக்குச் செல்கிறான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் மூழ்கடிக்கிறது. அவனை மட்டுமல்ல; பார்வையாளர்களையும்தான்.
» கரோனாவிலிருந்து பூரண நலம்: ‘க்ரோர்பதி’ நிகழ்ச்சிக்கு தயாராகும் அமிதாப்
» ஹ்ரித்திக் ரோஷன் குறித்த கருத்து - ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான கங்கணா
லாரன்ஸ் அன் கோ நிறுவனத்தின் உரிமையாளர் லாரன்ஸ் (சத்யராஜ்). இவரது நிறுவனத்தின் வாடிக்கையாளர் ராதா. லாரன்ஸுடைய மனைவி ஷீலா (சத்யகலா). அவர்களுடைய குழந்தை மேரி பார்வைத்திறனற்றவள். லாரன்ஸுக்குப் பெண்கள் பலருடன் உறவிருப்பதாக அவரது கடையில் வேலை பார்க்கும் கமல் உட்படப் பலரும் பேசுகிறார்கள். இது ஷீலாவுக்கும் தெரியும். இந்த லாரன்ஸின் சடலம்தான் ராஜேஷின் வாசிப்பறையில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடக்கிறது. லாரன்ஸை யார் கொலைசெய்திருப்பார்கள் என்பதை சுவாரசியமான திரைக்கதை மூலம் விவரித்திருக்கிறார் இயக்குநர் பாஸ்கர்.
முழு உண்மையை அறியாமல், கேட்ட, பார்த்த தகவல்களின் அடிப்படையிலான ஊகத்தின் உதவியுடன் உண்மையைப் பார்க்க விழைந்தால் அது எத்தகைய விபரீதத்தில் கொண்டுவிடும் என்பதையே திரைக்கதை தெள்ளத் தெளிவாக எடுத்துவைத்திருக்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய் என்பார்கள். அதைத் தான் இந்தப் படமும் சொல்கிறது. லாரன்ஸை ராதா கொலைசெய்திருப்பாளோ எனச் சந்தேகிக்கிறார் ராஜேஷ். ராஜேஷ் கொன்றிருப்பாரோ எனச் சந்தேகிக்கிறாள் ராதா. ராதாதான் லாரன்ஸைக் கொன்றாள் என்றே சொல்கிறாள் ஷீலா. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவரவர் ஊகத்துக்குத் தேவையான தடயங்களும் சந்தர்ப்ப சாட்சியங்களும் அவரவர் ஊகத்தை வலுப்படுத்துகின்றன. இப்படி ஒரு பயணத்தின் வழியே கொலைசெய்தவர் யார் என்பதும், அதற்கான காரணம் என்பதும் பார்வையாளர்களுக்குத் தெரியவரும்போது அது எதிர்பாராததாக உள்ளது.
ஒரு மர்மப் படத்துக்குத் தேவையான இருளும் ஒளியும் பெரியளவில் ஈடுபாடின்றி ஒரே வீட்டில் வாழும் கணவன் மனைவி போல் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு, பின்னணியிசை இரண்டும் அமானுஷ்யத் தன்மையுடன் இயங்கும்வேளையில் வசனம் பூடகத்தன்மையைக் கொண்டிருக்கிறது. நாளேட்டில் இடம்பெறும் கொலைச் செய்தி போன்ற ஒரு கதையை உரிய திரைக்கதை, தேவையான கூர்மையான வசனங்கள் தகுந்த ஒளிப்பதிவின் வழியே திரையில் எழுதியதில் இயக்குநரது திறன் வெளிப்படுகிறது.
சிவகுமார், அம்பிகா, பேபி மீனா, சத்யராஜ், சத்யகலா, விஜயராகவன் எனப் படத்தில் பங்குகொண்ட அனைவரும் அவரவர் தரப்பைச் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு திரில்லராக எந்த இடத்திலும் இறுக்கம் குலையாமல் இறுதிவரை பயணிக்கிறது படம். நகைச்சுவைக்காக வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் உள்ளார்கள். ’பைரவி’ திரைப்படத்தை நினைவுபடுத்துவது போன்ற நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவரவில்லை. ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி சிவகுமாரைப் படுத்தி எடுக்கும் சில காட்சிகளை மட்டும் ரசிக்க முடிகிறது.
மனைவிமீது அன்புகொண்ட அதே நேரத்தில் அவள் மீது எழும் சந்தேகத்தையும் தவிர்க்க இயலாத ஒரு சராசரிக் கணவனாக சிவகுமார் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான பாசம், கோபம், எரிச்சல், ஆற்றாமை என அத்தனை உணர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறார். மனரீதியான பாதிப்பு கொண்ட பெண்ணாக இருந்தபோதும் அம்பிகாவின் கதாபாத்திரம் இயல்பான ஒரு மனைவின் தன்மையிலிருந்து பெரிதும் மாறாதது. கணவனே கண் கண்ட தெய்வம் என்னும் பழமையில் ஊறிப்போனது. அதே நேரத்தில் தன் உரிமைக்காகக் குரல் கொடுக்கவும் தயங்காதது. வேர் பழமையிலும் கிளை புதுமையிலும் ஊடாடும் கதாபாத்திரத்துக்கு அம்பிகா இயல்பான நடிப்பால் உயிரூட்டியுள்ளார். கனவில் அம்மா மலையிலிருந்து விழுந்ததைக் கண்ட அதிர்ச்சி நீங்காத நிலையில் மருத்துவமனையில் அம்மா அம்பிகாவைப் பார்க்க வரும் காட்சியில் பேபி மீனாவின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்த்துவிடக் கூடியது. தந்தை இரவின் கெட்ட கனவால் கத்தும்போது பேபி மீனா, “ஏன் டாடி கத்துத இனிமே இப்படிக் கத்தாத எனக்குப் பயமா இருக்கு” என்பது மிக யதார்த்தமான வசனம்.
படத்தின் வசனங்களில் பாஸ்கரின் எழுத்து வன்மை வெளிப்படுகிறது. உதாரணமாக சில வசனங்கள்:
“செத்துப் போனவனுக்கு ஜாதகம் பாக்குறதும் கெட்டுப் போன என் கணவனப் பத்திப் பேசுறதும் ஒண்ணுதான்.”
”மாங்கல்யம் பறிபோயிடுச்சு தாங்கிக்கிட்டேன் ஆனா என் மானம் பறிபோனா என்னால தாங்கிக்கவே முடியாது.”
”கொலைப்பொருளா இல்ல கலைப் பொருளா வச்சிருக்கேன்.”
”குறுக்குவிசாரணை பண்ணுங்க குருட்டு விசாரணை பண்ணாதீங்க”
”எங்குணம் துளசி மாதிரி மத்தவங்களுக்கு மருந்தா இருப்பேனே ஒழிய விருந்தா இருக்க மாட்டேன்”
இயன்றவரை யதார்த்தமான திரைமொழியில் படத்தை நகர்த்தினாலும் தான் எடுப்பது ஒரு பொழுதுபோக்கு சினிமா என்ற விவேகத்துடன் பாஸ்கர் படத்தை இயக்கியிருப்பதால் எந்த இடத்திலும் சினிமாத்தனங்கள் வரம்பை மீறி வெளிப்படவில்லை. தொடக்கம் முதல் இறுதிவரை இப்போதும் எந்த விலகலுமின்றிப் படத்தைப் பார்க்க முடிவதே இந்தப் படத்தின் சிறப்பைச் சொல்லும்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago