கரோனாவிலிருந்து பூரண நலம்: ‘க்ரோர்பதி’ நிகழ்ச்சிக்கு தயாராகும் அமிதாப்

கடந்த ஜூலை மாதம், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஆராத்யா பச்சன் என அனைவரும் கோவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு 10 நாட்கள் கழித்து தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்து வீடு திரும்பினர். ஆகஸ்ட் 2-ம் தேதியன்று அமிதாப் பச்சனும் குணமடைந்து வீடு திரும்பினார்.

மகன் அபிஷேக் பச்சன் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பின் ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று சிகிச்சை முடிந்து, தொற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

தற்போது ‘கௌன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார் அமிதாப் பச்சன்.

இது குறித்து அமிதாப் தனது வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கேபிசி நிகழ்ச்சி மற்றும் ப்ரோமோ படப்பிடிப்புக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாழ்க்கை எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. இந்த தொற்று காலத்தில் நாம் நம்மை எப்படி வழிநடத்திக் கொள்கிறோம் என்பதே முக்கியம்.

இவ்வாறு அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

கடந்த மே மாதம் ‘கௌன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கரோனா அச்சுறுத்தலால் பாதியில் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE