எஸ்.பி.பிக்காக திரையுலக பிரபலங்கள் கூட்டுப் பிரார்த்தனை: பாரதிராஜா, சத்யராஜ் கண்ணீர்

By செய்திப்பிரிவு

எஸ்.பி.பிக்காக திரையுலக பிரபலங்கள் நடத்திய கூட்டுப் பிரார்த்தனையில் பாரதிராஜா மற்றும் சத்யராஜ் கண்ணீர் மல்க தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு எக்மோ கருவியின் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி பூரண நலம்பெற வேண்டி இன்று (ஆகஸ்ட் 20) மாலை 6 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு இயக்குநர் பாரதிராஜா ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் உலகமெங்கும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இன்று பலரும் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். ரஜினி, கமல், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் அவர்களுடைய வீடுகளில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். மாலை 6 மணியளவில் ஜூம் செயலி வழியே பாரதிராஜா ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனையில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இதில் சிவகுமார், பிரபு, சத்யராஜ், சரத்குமார், ராதிகா சரத்குமார், இயக்குநர் எஸ்.ஏ.சி, இயக்குநர் அமீர், பாடகர் மனோ, பாடகி சித்ரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தது மட்டுமன்றி, அவருடனான நினைவலைகளையும் சிறிதாகப் பகிர்ந்து கொண்டார்கள். பிரார்த்தனை முடிந்தவுடன் பாரதிராஜா அழுது கொண்டே பேசும் போது, "நாம் அவனைத் திரும்பக் கொண்டு வர வேண்டும். பஞ்ச பூதங்களை நான் நம்புறேன். எஸ்.பி.பி திரும்ப வருவான். அவன் வரவில்லை என்றால் பஞ்ச பூதங்கள் பொய் என்று அர்த்தம்" என்று தெரிவித்தார்.

சத்யராஜ் பேசும் போது, "75 படங்களில் வில்லனாக நடித்தவனை டூயட் பாடி மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்றால் அதற்கு எஸ்.பி.பி சாருடைய குரல் தான் முக்கியமான காரணம். எப்படி சார் என்னை எல்லாம் ஹீரோவாக பார்த்திருப்பார்கள்." என்று தேம்பி அழுதார்.

கூட்டுப் பிரார்த்தனை இறுதியில் பாரதிராஜா பேசும் போது ரஜினி, கமல், விஜய், இளையராஜா உள்ளிட்ட அனைவருக்குமே நன்றி தெரிவித்துப் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE