ஓடிடி தளத்தில் 'வி' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நானி நடிப்பில் உருவாகியுள்ள 'வி' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வி'. இது நானி நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும்.

'வி' படத்தின் டீஸரின் மூலம் இணையத்தில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. மேலும், இந்தப் படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார் நானி.

சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியானது. ஆனால், படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இதனிடையே, நேற்று (ஆகஸ்ட் 20) மாலை 'வி' படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என நானி அறிவித்தார். அதன் மூலம் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு உறுதியானது. இன்று (ஆகஸ்ட் 20) படக்குழுவினர் சின்ன வீடியோ வழியே, 'வி' படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாவதை உறுதிச் செய்தனர்.

தனது 25-வது படம் ஓடிடியில் வெளியாவது குறித்து நானி, "கடந்த 12 ஆண்டுகளாக எனது படங்களைக் காண டிக்கெட்கள் எடுத்து திரையரங்கிற்கு வந்தீர்கள். இப்போது நான் உங்களுடைய வீட்டிற்கே வந்து நன்றி கூறவுள்ளேன். எனது 'வி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முன்னணி நாயகனின் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக 'வி' அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE