சுஷாந்த் சிங் விவகாரம்: நசீருதின் ஷாவின் சாடல், கங்கணா பதில்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தையொட்டி இணையத்தில் வெடித்துள்ள சர்ச்சையில் வாரிசு அரசியல் தொடர்பான கருத்துகளைச் சாடியிருக்கும் நடிகர் நசீருதின் ஷா, கங்கணாவின் பெயரைக் குறிப்பிடாமல் நடிகை ஒருவரின் செயல்களை விமர்சித்துள்ளார். இந்தக் கருத்துகளுக்கு கங்கணா ரணவத் பதில் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பாலிவுட் உலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலால்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது இந்த மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு மூத்த பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா பேட்டியளித்திருந்தார். இதில் "வெளியிலிருந்து வருபவர்கள், வாரிசுகள் என்று இவர்கள் சொல்லும் முட்டாள்தனம் எனக்குப் புரியவில்லை. இது வெறும் அபத்தம். இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஒரு நடிகனாக என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக வாழும் நான், ஏன் என் மகனை அதே துறைக்கு வர வேண்டும் என்று ஊக்குவிக்கக் கூடாது? இதேதான் ஒரு தொழிலதிபரும், வழக்கறிஞரும், மருத்துவரும் செய்வார். அப்படி இருக்கும் எவரும் செய்யக்கூடியதே இது. நஸ்ரத் ஃபதே அலிகானின் வாரிசுகள் பாடகர்களாக ஆகக் கூடாதா?

இந்த வாரிசு என்ற அடையாளம் ஒரு கட்டம் வரைக்கும் மட்டுமே அழைத்துச் செல்லும். அதற்கு மேல் உங்கள் திறமை தான் உங்களைக் காப்பாற்றும். துறை மீது சிறிய விரக்தியில் இருக்கும் ஒவ்வொருவரும் சுஷாந்த்தை வைத்து ஊடகங்களில் பேசி வருகின்றனர்.

சுஷாந்துக்கு நீதித் தேடித் தர வேண்டும் என்று அரைகுறையாகக் கல்வியறிவுள்ள ஒரு நடிகை தானே முன்வந்து போராடுகிறார் என்பதில் யாருக்கும் அக்கறை இல்லை. உங்கள் புகார்களை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். சட்டத்தின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அது அதன் வேலையைச் செய்யும்" என்கிற ரீதியில் கடுமையாகச் சாடிப் பேசியிருந்தார். இதில் அவர் கங்கணாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் குறிப்பிட்ட அரைகுறை கல்வியறிவுள்ள நடிகை கங்கணாவையே குறிப்பதாகப் பலர் கருதினர்.

இதற்கு கங்கணா தனது குழுவினர் நடத்தி வரும் ட்விட்டர் கணக்கின் மூலம் பதிலளித்துள்ளார்.

"நன்றி நாசர் அவர்களே. என் சமகால நடிகைகள் யாரும் பெறாத எனது விருதுகள் மற்றும் சாதனைகளை நீங்கள் வாரிசு அரசியல் என்ற தராசில் எடைபோட்டிருக்கிறீர்கள். எனக்கு இது பழக்கம் தான். ஆனால் இதையே நான் பிரகாஷ் படுகோன் அல்லது அனில் கபூரின் மகளாக இருந்தால் சொல்லியிருப்பீர்களா?

நாசர் அவர்கள் மிகப்பெரிய கலைஞர். இப்படி ஒருவரிடமிருந்து திட்டு வாங்குவதும் இறைவனிடம் ஆசீர்வாதம் பெறுவது போலத்தான். ஆனால் இதைக் கேட்பதற்குப் பதில் கடந்த வருடம் நானும் அவரும் கலந்து கொண்ட சினிமா மற்றும் எங்கள் கலையைப் பற்றிய உரையாடலைப் பார்ப்பேன். அதில் அவர் என்னை எந்த அளவு பாராட்டுவதாகக் கூறியிருந்தார்" என்று கங்கணா பதிலளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE