‘இது அவரால் பயனடைந்த நான் செய்யும் கைம்மாறு’:  பாலசந்தரின் ரூ.1.35 கோடி கடனை தள்ளுபடி செய்த பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியம்

By செய்திப்பிரிவு

பாலசந்தரின் 1.35 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார் பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியம்

தமிழ்த் திரையுலகில் சொந்த பணத்தைப் படம் தயாரிப்பவர்கள் என்பது மிகவும் குறைவு தான். சுமார் 95% தயாரிப்பாளர்கள் பைனான்சியர்களை நம்பியே தான் படம் எடுக்கிறார்கள். நடிகர்களுக்குச் சம்பளமே பைனான்சியர்கள் வழங்கும் காசோலைகள் தான் செல்கின்றன.

ஒவ்வொரு படமும் வெள்ளிக்கிழமை வெளியாகும் முன்பு, பைனான்சியர்களிடம் கடிதம் வாங்குவதற்குள் தயாரிப்பாளர்கள் படாதபாடு படுவார்கள். இதில் சில படங்கள் வெளியீட்டுத் தேதியே மாற்றிவிடக் கூடிய அளவுக்கு எல்லாம் பஞ்சாயத்துகள் நடக்கும்.

ஆனால், தற்போது ஒரு விநியோகஸ்தர் மற்றும் பைனான்சியரின் மனிதாபிமானம் குறித்து செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தான் திருப்பூர் சுப்பிரமணியம். என்னவென்றால், மறைந்த இயக்குநர் பாலசந்தர் தானே இயக்கி, படமொன்றை தயாரித்திருக்கிறார். அந்தப் படத்தில் சத்யராஜ் நாயகனாக நடித்திருக்கிறார்.

இதற்காக திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் ஆர்.பி.செளத்ரி இருவரிடமும் சுமார் 1.5 கோடி ரூபாய் கடனாகப் பெற்றிருக்கிறார். இதற்காகப் பத்திரத்தில் கையெழுத்து, காசோலைகள் எல்லாம் கொடுத்திருக்கிறார். துரதிருஷ்டவசமாக அந்தப் படம் எடுத்து முடித்தும், சரியாக வரவில்லை என்பதால் அப்படியே கைவிடப்பட்டது.

சில காலங்கள் கழித்து 15 லட்ச ரூபாயை கொடுத்துவிட்டார் பாலசந்தர். மீதி 1.35 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியது இருந்துள்ளது. இதற்குப் பிறகு சில நாட்களில் பாலசந்தர் காலமாகிவிட்டார். கடன் அப்படியே இருந்துள்ளது. பாலசந்தர் காலமானவுடன் சில மாதங்கள் கழித்து, அவருடைய மகள் புஷ்பா கந்தசாமியை தொலைபேசியில் அழைத்து வீட்டு விலாசம் தரும்படிக் கேட்டுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.

விலாசம் கொடுத்தவுடன், திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதைத் திறந்த பார்த்த போது, புஷ்பா கந்தசாமி மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். ஏனென்றால், பாலசந்தர் கையெழுத்திட்டு கொடுத்த பத்திரங்கள், காசோலைகள் என அனைத்தையும் கேன்சல் செய்து, அதை அவருடைய வீட்டுக்கே தபாலில் அனுப்பிவைத்திருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.

"சார்.. மீண்டும் படங்கள் தயாரித்து இந்தப் பணத்தைக் கொடுத்துவிடுகிறோம்" என்று புஷ்பா கந்தசாமி தெரிவித்திருக்கிறார். ஆனால், திருப்பூர் சுப்பிரமணியமோ "பாலசந்தர் சாருடைய பல படங்கள் மூலமாக நிறையச் சம்பாதித்திருக்கிறோம். இந்தப் பணம் எங்களுக்கு வேண்டாம். இருக்கட்டும்" என்று தன்மையாகச் சொல்லிவிட்டு வைத்திருக்கிறார்.

தனது காலத்திற்குப் பிறகு, தனது மகன்கள் அந்தப் பத்திரத்தை வைத்து பாலசந்தர் குடும்பத்தினரிடம் பணமெல்லாம் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த வேலையைச் செய்திருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். புஷ்பா கந்தசாமிக்கு அனுப்பிவிட்டுத் தான், ஆர்.பி.செளத்ரியிடம் "உங்களுக்கு 65 லட்சம், எனக்கு 65 லட்சம் தரவேண்டும். நான் இப்படி பத்திரங்களை எல்லாம் அனுப்பிவிட்டேன்" என்று கூறியிருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். அவரோ, ரொம்ப நல்ல காரியம் செய்தீர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

பைனான்சியர்கள் என்றாலே பெரும் கெடுபிடி செய்வார்கள் என்ற செய்திக்கு மத்தியில், இப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE