தனுஷுடன் நடித்த 'ராஞ்ஜனா' திரைப்படத்தின் குறைகள் இவை: அபய் தியோல் பதிவு

By செய்திப்பிரிவு

நடிகர் தனுஷின் முதல் இந்தித் திரைப்படமான ராஞ்ஜனாவில் இருக்கும் குறைகள் குறித்து, அதே படத்தில் தனுஷுடன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அபய் தியோல் பதிவிட்டுள்ளார்.

2013-ம் ஆண்டு, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான திரைப்படம் 'ராஞ்ஜனா'. தனுஷ் இந்தியில் அறிமுகமான திரைப்படம் இது. தனுஷின் நடிப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு படமும் நல்ல வசூலைப் பெற்றது.

தற்போது இந்தப் படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பயனர் ஒரு விமர்சனம் பகிர்ந்திருந்தார். படத்தில் தனுஷின் கதாபாத்திரம் நாயகியை விடாமல் துரத்தித் துரத்திக் காதலிப்பது, காதலியின் திருமணத்தைக் கெடுப்பது, தன் காதலியின் காதலனை மாட்டிவிட்டு அவனது மரணத்துக்குக் காரணமாக இருப்பது என தொடர்ந்து தவறுகள் செய்கிறது என்கிற ரீதியில் கடுமையாகச் சாடியிருந்தார்.

இந்தப் பதிவைக் குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ள நடிகர் அபய் தியோல், "'ராஞ்ஜனா' திரைப்படம் குறித்துத் தெளிவான, நியாயமான கருத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தின் பிற்போக்குத்தனமான கருத்தால், வரலாறு இதைக் கனிவாகப் பார்க்காது. பல தசாப்தங்களாக பாலிவுட்டின் கதைக் கரு இதுதான். ஒரு ஆண், ஒரு பெண் ஒப்புக்கொள்ளும் வரை கண்டிப்பாகத் துரத்தலாம், துரத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால் சினிமாவில் மட்டுமே அந்தப் பெண் விரும்பி ஒப்புக்கொள்வாள். நிஜத்தில், பல முறை இது போன்ற விஷயங்கள் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு வித்திடுவதைப் பார்த்திருக்கிறோம். இது போன்ற விஷயங்களைத் திரையில் உயர்த்திப் பேசுவது, பாதிக்கப்படும் பெண்ணின் மீதே குற்றம் சுமத்துவதற்கு வழிவகுக்கும். அதை இந்த விமர்சகர் அட்டகாசமாக விளக்கியுள்ளார். உங்கள் நேரத்தைச் செலவிட்டு அவரது கருத்தைப் படிக்கவும்" என்று பகிர்ந்துள்ளார்.

அபய் தியோலின் பதிவுக்குக் கிட்டத்தட்ட 44 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE