எஸ்.பி.பி மீண்டு, பாடல்கள் மூலம் மகிழ்விக்க இறைவனை வேண்டுகிறேன்: சிரஞ்சீவி

By செய்திப்பிரிவு

எஸ்.பி.பி மீண்டு, பாடல்கள் மூலம் மகிழ்விக்க இறைவனை வேண்டுகிறேன் என்று சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:

"பல கோடி ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர், தேசமே பெருமைப்படும் அற்புதமான கலைஞன், என் சகோதரர் எஸ்பிபி, சிகிச்சையில் தேறி வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன். அதை உங்களிடம் பகிர விரும்பினேன். திரைப்படங்களைத் தாண்டி, எஸ்பிபி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் எனக்குப் பந்தம் உள்ளது. சென்னையில் நாங்கள் பக்கத்துப் பக்கத்துத் தெருவில் வசிக்கிறோம். நான் அன்பாக அவரை அண்ணாவென்று அழைப்பேன். எஸ்பிபியின் சகோதரிகள் சைலஜா, வசந்தா ஆகியோர் என்னை அண்ணனாகப் பார்க்கின்றனர்.

நான் சைலஜா, வசந்தா ஆகியோருடன் பேசி வருகிறேன். எஸ்பிபியின் ஆரோக்கியம் குறித்து அவர்கள் தொடர்ந்து எனக்குத் தகவல் சொல்லி வருகிறார்கள். இன்றும் அவர்களுடன் நான் பேசினேன். பாலு நாளுக்கு நாள் நன்றாகத் தேறி வருகிறார் என்பது எனக்கு மன அமைதியை, சந்தோஷத்தைத் தருகிறது. அவர் மீண்டும் வர வேண்டும், பாடல்கள் மூலம் மகிழ்விக்க வேண்டும் என்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்களோடு நானும் இறைவனை வேண்டுகிறேன். அனைவரது பிரார்த்தனைகளும், இறைவனின் ஆசியும் அவரை குணமடையச் செய்யும். அவருக்காக நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் வேண்டுவோம்"

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE