'மாஸ்டர்' வெளியாகாததால் மிகப்பெரிய ஏமாற்றத்தில் உள்ளோம்: லோகேஷ் கனகராஜ்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' வெளியாகாததால் அனைவரும் மிகப்பெரிய ஏமாற்றத்தில் உள்ளோம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் ஏப்ரல் 9-ம் தேதி படம் வெளியாகி இருக்கும். தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' ஆகஸ்ட் 12-ம் தேதி டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக அளித்துள்ள பேட்டியில் 'மாஸ்டர்' வெளியீடு தாமதம் மற்றும் ஓடிடி வெளியீடு வாய்ப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

"'மாஸ்டர்' ஓடிடி வெளியீடு வெளியாகுமா" என்ற கேள்விக்கு "கண்டிப்பாக ஓடிடியில் வெளியாகாது. எப்போது சாத்தியமோ அப்போது திரையரங்கில் தான் வெளியாகும். அடுத்த வருடம் ஆரம்பத்திலா எப்போது என்பது முடிவு செய்யப்படவில்லை. அது திரையரங்குகள் திறப்பு, புதிய விதிகள் என்ன என்பதெல்லாம் பொறுத்துத்தான் முடிவாகும்" எனத் தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்

"'மாஸ்டர்' வெளியாகாதது குறித்து" என்ற கேள்விக்கு "ஆம் நாங்கள் அனைவரும் மிகப்பெரிய ஏமாற்றத்தில் உள்ளோம். 'மாஸ்டர்' படத்தைக் குறுகிய காலகட்டத்தில் முடிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக வேண்டும் என்று 6 மாதத்துக்குள் அனைத்து வேலைகளையும் முடிக்கத் திட்டமிட்டிருந்தோம்.

இசை வெளியீடு வரை அனைத்தும் திட்டமிட்டபடி தான் சென்று கொண்டிருந்தன. வெளியாக 20 நாட்கள் இருக்கும் போது கரோனா தொற்று பிரச்சினை வந்து ஊரடங்கு அமலானது. எங்கள் குழுவினர் அனைவருக்கும் ஏமாற்றம் தான். ஆனால் படம் எப்போது திரையரங்கில் வந்தாலும் அன்று கொண்டாட்டம் தான்

ஊரடங்கு வந்ததால் இன்னும் இறுதிக் கட்ட வேலைகளில் மெருகேற்ற முடிந்தது. முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே படம் பார்த்துவிட்டோம். எங்களுக்கு மகிழ்ச்சியே. நல்ல படைப்பைத் தந்திருக்கிறோம் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

"விஜய் ரசிகர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்" என்ற கேள்விக்கு "எல்லோரும் அப்டேட் கேட்கிறார்கள். அதை கொடுக்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். அதெல்லாமே திரையரங்குகள் எப்போது திறக்கப்படும், கோவிட் பிரச்சினை எப்போது முடியும் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. அவை முடிவான பிறகு 'மாஸ்டர்' குறித்த அப்டேட்ஸ் உங்களுக்குச் சரியாக வரும். இப்போதைக்கு, அனைவரும் பாதுகாப்பாக, வீட்டில் இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE