சுஷாந்துக்கான சர்வதேசப் பிரார்த்தனை: 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகத் தகவல்

By ஐஏஎன்எஸ்

சுஷாந்த் சிங்கிற்காக அவரது சகோதரி ஷ்வேதா சிங் கீர்த்தி நடத்திய சர்வதேச பிரார்த்தனைக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதாகவும், இந்த நிகழ்வு ஒரு ஆன்மிக புரட்சிக்கான தருணம் என்றும் ஷ்வேதா கூறியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது குடும்பத்தினர், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இந்நிலையில், சுஷாந்தின் சகோதரி ஷ்வேதா, சுஷாந்துக்கு நீதி கிடைக்க வேண்டி அவரது ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இணையம் மூலமாகவே பலரும் பங்குபெறும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

திங்கட்கிழமை, தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது சகோதரருக்கான பிரார்த்தனைக் கூட்டத்தில், உலகம் முழுவதுமிலிருந்து கலந்து கொண்ட சுஷாந்தின் ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளுக்கு நன்றி கூறியுள்ளார். இதோடு பலரும் பிரார்த்தனை செய்யும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

"சுஷாந்துக்காகப் பிரார்த்தனை செய்ய உலகளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்தனர். இது ஒரு ஆன்மிக புரட்சி. உலகம் முழுவதும் இதன் வீச்சு அதிகரித்து வருகிறது. நமது பிரார்த்தனைகளுக்குப் பலன் கிடைக்காமல் போகாது" என்று ஷ்வேதா குறிப்பிட்டுள்ளார்

சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதாவும் இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பிரார்த்தனைகளால் எதையும் மாற்ற முடியும் என்று ஷ்வேதாவின் பதிவில் அங்கிதா கருத்துப் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE