இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள் ஸ்பெஷல்: சாமானியர்களையும் சென்றடைந்த பிரம்மாண்ட சாதனையாளர்

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் 1990-களிலும் அதற்குப் பிறகும் அறிமுகமான இயக்குநர்களில் ஆகப் பெரிய உயரத்தை அடைந்திருப்பவரும் இந்திய சினிமாவின் மிக வெற்றிகரமான திரைப் படைப்பாளிகளில் ஒருவரும் தமிழ்த் திரையில் பிரம்மாண்டம் என்றால் என்ன என்பதை படத்துக்குப் படம் நிகழ்த்திக் காட்டுபவருமான இயக்குநர் ஷங்கர் இன்று (ஆகஸ்ட் 17) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அரிதான வெற்றி விகிதம்

1993-ல் 'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், இதுவரை 13 படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் ஒரு சில படங்களை மட்டுமே வணிகரீதியாகத் தோல்வி என்று வகைப்படுத்த முடியும் அவற்றிலும் ஷங்கரிடம் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டம் இல்லாமல் இருக்காது. 25 ஆண்டுகளுக்கு மேல் இயங்கியும் இந்த அளவு வெற்றி விகிதம் கொண்ட திரைப் படைப்பாளிகளை இந்திய சினிமாவில் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சமூகப் பிரச்சினைகளும் சாமானியர் விரும்பும் தீர்வுகளும்

ஷங்கரின் பெரும்பாலான படங்கள் ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டவை. அவற்றுக்குத் தீர்வளிக்க முனைபவையாகவும் அவை இருக்கின்றன. இந்தத் தீர்வுகள் நடைமுறையில் சாத்தியமாகக் கூடுமா என்பது தெரியாது. ஆனால் சாத்தியமாகப்பட வேண்டியவை என்றே பார்வையாளர்கள் நினைத்தார்கள். இதெல்லாம் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இந்தச் சீரழிவுகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டப்படுவது எப்போது?, நம்மைத் துன்பங்களிலிருந்து காப்பாற்ற ஒரு நாயகன் வந்துவிட மாட்டானா? என்றெல்லாம். ஏங்கித் தவிக்கும் நிலையிலேயே இருக்கும் சாமானிய மக்களுக்கு ஷங்கரின் படங்கள் நம்பிக்கை அளித்தன. வணிகக் கணக்குகளைக் காட்டிலும் ஷங்கருக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதும். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தியேட்டருக்குச் செல்வோர்கூட ஷங்கர் படம் வெளியானவுடன் டிக்கெட் வாங்கத் துடிப்பதும் இதனால்தான்.

கேளிக்கைக்குச் சமமான முக்கியத்துவம்

ஏழைகளுக்குக் கல்வி கிடைக்காமல் இருப்பது (ஜெண்டில்மேன்), அரசு அலுவலகங்களில் லஞ்சம் (இந்தியன்) ஊழல்(சிவாஜி, முதல்வன்), தனிநபர்களின் பொறுப்பின்மையால் சமூகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சினைகள் (அந்நியன்) என மக்களைப் பாதிக்கும் தீவிரமான பிரச்சினைகளைக் கையாளும் ஷங்கர் படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களிலும் குறைவைப்பதே இல்லை.

ரஜினி, கமல், விஜய், விக்ரம் போன்ற நட்சத்திரங்களுடன் பணியாற்றும்போது அவர்களுடைய இமேஜுக்கும் அது சார்ந்த ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற காட்சிகளையும் வசனங்களையும் திரைக்கதையின் தேவைக்கேற்ப அழகாக உருவாக்கி இணைக்கும் ஷங்கரின் வல்லமை அபாரமானது. அதே நேரம் ரஜினிக்கு 'எந்திரன்', விஜய்க்கு 'நண்பன்' போல் உச்ச நட்சத்திரங்களை வழக்கத்துக்கு மாறான கதைக் களத்திலும் கதாபாத்திரத்திலும் பொருத்தி அவற்றையும் மிகப் பெரிய வெற்றிப் படமாக்குவது ஷங்கரின் தனித் திறமை.

கவுண்டமணி, செந்தில். வடிவேலு, விவேக், சந்தானம் என முன்னணி நகைச்சுவை நடிகர்கள் பலர் ஷங்கர் படங்களில் வெகு சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருப்பார்கள். ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்றோரின் இசையில் பாடல்கள் பெரும்பாலும் வெற்றிபெற்றுவிடும். ஷங்கர் அவற்றைப் படம்பிடிக்கும் விதம் பார்வைக்கும் விருந்தாக அமைந்திருக்கும். சென்டிமெண்ட் காட்சிகளிலும் குறைவைக்காத அவருடைய படங்களில் சண்டைக் காட்சிகளிலும் படத்துக்கு படம் புதிய எல்லைகளில் எட்டப்படும்.

ஷங்கர் படங்களில் சமூகப் பிரச்சினைகள் பேசப்படும் விதம். முன்வைக்கப்படும் தீர்வுகள். அவற்றில் வெளிப்படும் அரசியல் பார்வை ஆகியவற்றோடு உடன்படுபவர்களும் முரண்படுபவர்களும் இருக்கலாம். ஆனால் ஜனரஞ்சகமான அம்சங்கள் ஒவ்வொன்றையும் ரசிக்கும் வகையில் இணைத்து அவற்றோடு தீவிரமான சமூகப் பிரச்சினைகளையும் அவை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும் என்பதற்கான முன்னுதாரணமாக ஷங்கரின் பல படங்கள் இருக்கின்றன. ஒரு இயக்குநராக ஷங்கரின் மிக முக்கியமான பங்களிப்பு அல்லது கொடை என்று இதைச் சொல்லலாம்.

கடைக்கோடி ரசிகனையும் சென்றடைபவர்

தன் படத்தில் பேசப்படும் ஒவ்வொரு விஷயமும் கடைக்கோடி ரசிகருக்கும் புரியும்படி இருக்க வேண்டும் என்பதில் ஷங்கர் மிகத் தெளிவாக இருப்பார். 'முதல்வன்' படத்தின் இறுதிக் காட்சியில் அர்ஜுனால் துப்பாக்கியால் சுடப்பட்ட ரகுவரன் அதற்கு முந்தைய தொலைக்காட்சி நேர்காணலை நினைவுகூர்ந்து “that was a good interview” என்று கூறிவிட்டு இறப்பார். அதற்கு முன் அந்த நேர்காணல் காட்சியின் ஒரு சிறு பகுதியைத் திரையில் காட்டுவார் ஷங்கர். இன்றைய விமர்சகர்களும் உலகப் படங்களைப் பார்ப்பவர்களும் இதை ஸ்பூம்ஃபீடிங் (“ரசிகர்களைக் குழந்தைகள் போல் பாவித்து ஊட்டி விடுதல்”) என்று விமர்சிக்கலாம்.

ஆனால் இந்த விஷயத்தைக்கூட அதாவது ரகுவரன் அந்த வசனத்தில் என்ன சொல்கிறார் என்பதைக்கூட முந்தைய காட்சியை நினைவுகூர்ந்து புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கும் சாமானிய ரசிகர்களுக்கும் தன் படங்களில் எதுவும் புரியாமல் போய்விடக் கூடாது, என்பதற்கே முதன்மை முக்கியத்துவம் கொடுப்பார் ஷங்கர். அதுவே அவரை எல்லா தரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைக்கிறது. இயக்குநர்களில் ஒரு சூப்பர் ஸ்டாராக அவரை ஆக்கியுள்ளது.

பிரம்மாண்டத்தின் புதிய உயரங்கள்

ஷங்கரின் படங்களில் காட்சியில் மட்டுமல்ல கற்பனையிலும்கூட பிரம்மாண்டம் இருக்கும். 'இந்தியன்' படத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தை மறு உருவாக்கம் செய்தது மட்டுமல்ல அதை மையப்படுத்திய கதையை யோசித்ததே எவ்வளவு பிரம்மாண்டமான கற்பனை என்று யோசித்துப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ள முடியும். 'ஒரு நாள் முதல்வன்' என்ற கற்பனை எவ்வளவு ஈர்ப்புக்குரியது. அதன் அனைத்து சாத்தியங்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பாகக் கொண்டுவந்துவிடுவார் ஷங்கர். இதுவும்தான் அதாவது இந்த கற்பனை விஸ்தாரமும்தான் ஷங்கரின் பிரம்மாண்டம்

அதேபோல் காட்சிகளில் பிரம்மாண்டத்துக்கு ஒவ்வொரு படத்திலும் ஷங்கர் தனக்கென்று புதிய இலக்குகளை நியமித்து அவற்றைத் தாண்டிச் செல்பவர். 1990களில் 'ஜீன்ஸ்', 'இந்தியன்', 'முதல்வன்' போன்ற படங்களில் உருவாக்க ரீதியாக யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விஷயங்களை அவர் செய்துகாட்டினார். இப்போது அவை எல்லாம் தமிழ் சினிமாவில் இயல்பாகிவிட்டன. 'எந்திரன்','ஐ', '2.0' போன்ற அவருடைய படங்களில் அவருடைய உருவாக்க உயரங்கள் இந்திய சினிமாவுக்கே சவால் விடுபவையாக உள்ளன. குறிப்பாக 'ஐ' படத்தின் 'ஐல ஐல ஐ' பாடலில் நிறங்களையும் கிராஃபிக்ஸையும் பயன்படுத்தி மிக உயர்தரமான சர்வதேச விளம்பரப் படங்களைப் பார்க்கும் உணர்வைத் தரும் வகையில் படமாக்கிய விதம் அனைவரையும் வாய்பிளக்க வைத்தது (அதுவும் கதைக்குப் பொருத்தமானது). ஷங்கரின் பிரம்மாண்டக் கனவுகளுக்கு எல்லைகளே இல்லை என்பதையும் அந்தப் பாடலும் படமும் நிரூபித்தன.

இப்படி பல அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ள ஷங்கர் தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் ஹாசனுடன் இணைந்து 'இந்தியன் 2' படத்தில் இணைந்து பணியாற்றிவருகிறார். 'இந்தியன்' படம் வசூல் சாதனை படைத்தது. கமல் ஹாசனுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அதே போல் 'இந்தியன் 2', தமிழ் சினிமா வணிகத்தில் இதுவரை நிகழ்த்தப்பட்ட பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தரமான படங்களின் தயாரிப்பாளர்

ஒரு இயக்குநர் என்பதைத் தாண்டி ஷங்கர் ஒரு தரமான தயாரிப்பாளராகவும் தனி முத்திரை பதித்தவர். அவர் முதன் முதலில் தயாரித்த 'முதல்வன்' அவர் அதுவரை இயக்கிய படங்களைக் காட்டிலும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது. வடிவேலுவை நாயகனாக்கிய 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' தமிழ் சினிமா வரலாற்றில் பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட நகைச்சுவைப் படம். மிகவும் தரமான வெற்றிப் படமும்கூட. இவை தவிர 'காதல்', 'வெய்யில்' போன்ற மிகத் தரமான காவிய படைப்புகளையும் ஷங்கர் தயாரித்துள்ளார்.

இந்திய சினிமா வட்டாரத்திலும் உலக ரசிகர்களின் பார்வையிலும் தமிழ் சினிமா மீதான மதிப்பைப் பன்மடங்கு அதிகரித்தவர் ஷங்கர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தன் பெயருக்காகவே ரசிகர்களைத் திரையரங்குக்குப் படையெடுக்க வைக்கும் திறனைத் தக்கவைத்திருக்கும் ஷங்கர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த இந்தப் பிறந்தநாளில் மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE