‘இன்னொரு யுத்தம் தொடங்கியுள்ளது’: சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பர் உருக்கமான கடிதம்

சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பரான பரேஷ் கெலானி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த ஆக்ஸ்ட் 11 அன்று மாலை திடீரென்று மருத்துவக் காரணங்களுக்காகத் திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சஞ்சய் தத் அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் சஞ்சய் தத்துக்கு 3-ம் கட்ட நுரையீரல் புற்றுநோய் என்றும், இதன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்னர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் ஏற்பட்டதை அவரது மனைவி மான்யதா தத் உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் சஞ்சய் தத் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சஞ்சய் தத்தின் இளம் வயது முதல் நீண்ட கால நெருங்கிய நண்பராக இருக்கும் பரேஷ் கெலானி சஞ்சய் தத்துக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சகோதரா சஞ்சய், நாம் நம் வாழ்வின் அடுத்த கட்டத்தை எவ்வாறு அனுபவிக்க போகிறோம் என்றும், எப்படி நாம் நடக்கவும், ஓடவும், பாயவும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தோம் என்பதை பற்றியெல்லாம் சில நாட்களுக்கு முன்பு நாம் பேசிக் கொண்டிருந்ததை நினைத்தால் ஆச்சர்யமாக உள்ளது. நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்றும், எதிர்கால பயணம் அழகானதாகவும் வண்ணமயமானதாகவும் இருக்கப்போகிறது என்றும் எனக்கு நம்பிக்கை உள்ளது. கடவுள் கருணை மிக்கவர்.

சகோதரா நாம் விளையாண்ட இந்த பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டு விட்டது என்று நினைத்தோம். ஆனால் அப்படி இல்லையென்றே நினைக்கிறேன். இன்னொரு ரோலர் கோஸ்டர் பயணத்துக்கு தயாராவோம். இன்னொரு யுத்தம் தொடங்கியுள்ளது. நீ வெற்றிப் பெறப் போகிற யுத்தம். உன்னுடைய மனவலிமையை நாங்கள் அறிவோம். நீ இதில் வெற்றிபெறுவாய்.

இவ்வாறு பரேஷ் கெலானி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE