தனித்துவ நடிப்பால் ஒளிர்ந்த அம்பிகா - அம்பிகா பிறந்தநாள் ஸ்பெஷல்

By வி. ராம்ஜி

அக்காவும் தங்கையுமாக திரையுலகில் ஜெயித்தவர்கள் பலர் உண்டு. முக்கியமாக, கேரளத்தில் இருந்து வந்த லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள் தனியொரு இடத்தைப் பிடித்தார்கள் இங்கே. இதேபோல, அதே கேரளத்தில் இருந்து வந்து, எண்பதுகளில்... அக்காவும் தங்கையும் ராஜபாட்டையே நடத்தினார்கள். அவர்கள்... அம்பிகா, ராதா.

அக்கா அம்பிகாதான், தமிழ் சினிமாவுக்கு முதலில் வந்தார். அம்பிகா 1979-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படம் ‘சக்களத்தி’. திரைக்கு வந்து 41 ஆண்டுகளாகிவிட்டன. அவர் முதன் முதலாக மிகப்பெரிய வெற்றியைச் சுவைத்த படம் ‘அந்த 7 நாட்கள்’.

கேரளத்தில் பிறந்து தமிழுக்கு அறிமுகமாகி, எண்பதுகளின் எல்லா நடிகர்களுடனும் நடித்து, மிகப்பெரிய ரவுண்டு வந்தார். இன்றைக்கும் படங்களிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அம்பிகா, முதன்முதலாக தமிழில் நடித்த படம் ‘சக்களத்தி’. இயக்குநர் தேவராஜ் - மோகன் இயக்கத்தில், சுதாகர், விஜயன், ஷோபா, ஒய்.விஜயா முதலானோர் நடித்த இந்தப் படத்தில் அம்பிகாவும் நடித்திருந்தார். படத்துக்கு இசை இளையராஜா. எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. 1979-ம் ஆண்டு வெளிவந்தது அம்பிகாவின் முதல் படம். இதையடுத்து 80-ம் ஆண்டு படம் எதுவும் வரவில்லை. ஆனால் 80-ம் ஆண்டின் மத்தியில், படங்கள் வரிசையாக புக் ஆகத்தொடங்கின. ஆனாலும் எல்லாமே சின்னச் சின்ன படங்களாகவே அமைந்தன.

81-ம் ஆண்டு, கமல் இருவேடங்களில் நடித்த ‘கடல் மீன்கள்’ படம் வெளியானது.ஜி.என்.ரங்கராஜன் இயக்கினார். கமல், சுஜாதா, ஸ்வப்னா, அம்பிகா, சுமன், நாகேஷ், தங்கவேலு முதலானோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில், கமலும் அம்பிகாவும் நடித்தாலும் இருவரும் ஜோடி சேரவில்லை. சுமனுக்குத்தான் அம்பிகா ஜோடி. இதே காலகட்டத்தில், நம்மூரில்தான் அம்பிகாவைப் புரிந்துகொள்ள திரையுலகிற்கு தாமதமானது. ஆனால், கேரளத்தில், வரிசையாக படங்கள் வந்தன. ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை அழகுற வெளிப்படுத்தினார்.

பின்னாளில், கமல் - ரஜினியுடன் ஏகப்பட்ட படங்களில் ஜோடியாக நடித்தார் அம்பிகா. கமலுடன் முதன்முதலாக அம்பிகா நடித்த படமென்று பார்த்தால், அது ‘கடல்மீன்கள்’. ஆனாலென்ன... இந்தப் படத்தில், கமலுக்கு மகளாக நடித்தார் அம்பிகா. அதாவது அப்பா - மகன் என இரண்டு கமல். ஆக, கமலுக்கு மகள் ப்ளஸ் கமலுக்கு சகோதரி. இளையராஜா இசை. பாட்டெல்லாம் சூப்பர். ஆனாலும் பெரிதாகப் போகவில்லை. ஆகவே, அம்பிகா திரையுலகில் கவனிக்கப்படவில்லை.

‘கடல்மீன்கள்’ படத்தை அடுத்து, ‘தரையில் வாழும் மீன்கள்’ படத்தில் நடித்தார் அம்பிகா. இதில் விஜயபாபு ஹீரோ. ‘கடல்மீன்கள்’ படத்தைப் போலவே ‘தரையில் வாழும் மீன்கள்’ படமும் வெற்றியில் இருந்து கழுவுற மீனில் நழுவுற மீனாகிப் போனது.
இந்த சமயத்தில்தான், அம்பிகாவுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. காதலித்தது ஒருவரை... கல்யாணம் செய்து கொள்வது இன்னொருவரை. காதலின் குதூகலத்தையும் அது தோல்வியில் முடிந்து கல்யாணத்துக்குள் சிக்கிக்கொண்ட துக்கத்தையும் துக்கத்தினால் தற்கொலைக்கு முயன்று மீண்டு வந்திருக்கிற இயலாமை கலந்த விரக்தி என உணர்ச்சிகளைக் கொட்டி, உலுக்கியெடுத்தார். மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அதுதான்... ‘அந்த 7 நாட்கள்’.

’அந்த 7 நாட்கள்’ படத்தை யாரால்தான் மறக்கமுடியும். பாக்யராஜ், அம்பிகா, ராஜேஷ், காஜா ஷெரீப், கல்லாப்பெட்டி சிங்காரம். அவ்வளவுதான் கேரக்டர்கள். பாலக்காட்டு மாதவனையும் வசந்தியையும் டாக்டர் ஆனந்தையும் கோபியையும் மறந்துவிடமுடியுமா என்ன?

‘சென்டிமென்ட்ல எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதுவரைக்கும் அம்பிகா நடிச்ச படங்கள் பெருசாப் போகலை. ஆனா ‘அந்த 7 நாட்கள்’ படத்துக்கு அம்பிகா சரியா இருப்பாங்கன்னு உறுதியா நம்பினேன். அவரையே புக் பண்ணினேன். ‘அம்பிகா நடிச்ச படம் எதுவுமே சரியாப் போகல.வேற நடிகையைப் போடுங்க’ன்னு எல்லாருமே அட்வைஸ் பண்ணினாங்க. ‘அப்படியொரு பேரு அவங்களுக்கு இருக்குன்னா, அதை மாத்திக்காட்டணும். அப்படியொரு படமா இந்த ‘அந்த 7 நாட்கள்’ இருக்கட்டுமே’ன்னு சொல்லிட்டேன். படம் வந்துச்சு. மிகப்பெரிய வெற்றியைத் தந்துச்சு. நான் இப்படிப்பட்ட சென்டிமென்டுகள்ல எப்பவுமே லாக் ஆக மாட்டேன்’ என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

79-ம் ஆண்டு அறிமுகமாகி படங்களில் நடித்து வந்த அம்பிகாவுக்கு 81-ம் ஆண்டு ‘அந்த 7 நாட்கள்’ கிடைத்தது. அவர் அடைந்த முதல் வெற்றி இது. இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் கமலுடன் நடித்தார் அம்பிகா. இந்த முறை இந்த ஜோடி. வெள்ளிவிழாவையெல்லாம் கடந்து ஓடிய அந்தப்படம்... ‘சகலகலா வல்லவன்’.

அதேபோல், பஞ்சு அருணாசலம் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ரஜினியுடன் அம்பிகா இணைந்து நடித்ததுதான் ‘எங்கேயோ கேட்ட குரல்’. அதேசமயத்தில் வந்த படம். இதில் ராதாவும் நடித்தார். அநேகமாக, அக்கா அம்பிகாவும் தங்கை ராதாவும் இணைந்து நடித்த முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்.

இதையடுத்து, ‘உயர்ந்த உள்ளம்’, ‘காக்கிசட்டை’, ‘நானும் ஒரு தொழிலாளி’, ‘காதல் பரிசு’ என்றும் ரஜினியுடன் ‘படிக்காதவன்’, ‘நான் சிகப்பு மனிதன்’ என்பது உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். சொல்லப்போனால், எண்பதுகளின் எல்லா ஹீரோக்களிலும் நடித்து மிகப்பெரிய ரவுண்டு வந்தார். சிவகுமாருடன் சேர்ந்த நடித்த படங்களெல்லாம் சூப்பர் ஹிட். அதேபோல் மோகன் - அம்பிகா ஜோடி ரசிக்கப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் ‘இதயக்கோயில்’ படத்திலும் கோவைத்தம்பியின் ‘நான் பாடும் பாடல்’ படத்திலும் அற்புதமான நடிப்பை வழங்கியிருந்தார்.

கார்த்திக்குடன் நடித்தார். அதுவும் ஹிட்டு. விஜயகாந்துடன் நடித்தார். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில், கேரக்டரை உணர்ந்து நடித்த அவரின் பண்பட்ட நடிப்பை எல்லோரும் ரசித்தார்கள். ‘நான்பாடும் பாடல்’ படத்திலும் ’தழுவாத கைகள்’ படத்திலும் இவரின் முதிர்ச்சியான நடிப்பு, படத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது. ’மனக்கணக்கு’ படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

கமலின் சொந்தப் படமான ‘விக்ரம்’ படத்திலும் அம்பிகா நடித்தார். ரஜினியின் சொந்தப் படமான ‘மாவீரன்’ படத்திலும் அம்பிகா நடித்தார். ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்திலும் வயதான தோற்றத்திலும் நடித்து நெகட்டீவ் ரோல் செய்து அசத்தினார். ‘வாழ்க்கை’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாகவும் பிரமிக்க வைத்தார்.

யாருடன் நடித்தாலும் தன் தனித்துவ நடிப்பை வெளிப்படுத்திவிடுவார் அம்பிகா. இதையடுத்து சீரியல்களிலும் தற்போது திறம்பட நடித்துக் கொண்டிருக்கிறார்.

எண்பதுகள் தொடங்கி, இன்று வரைக்கும் தன் தனித்துவத்தால் ஒளிர்ந்துகொண்டிருக்கும் அம்பிகாவுக்கு இன்று (16.8.2020) பிறந்தநாள்.

அம்பிகாவை வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE