உதவி இயக்குநர் டூ நடிகர்; தோனியைச் சந்தித்த தருணங்கள்: ரன்வீர் சிங்கின் நெகிழ்ச்சிப் பகிர்வு

உதவி இயக்குநராக இருந்ததிலிருந்து நடிகராக மாறிய பின்பும் கூட தோனியைச் சந்தித்த தருணங்கள் குறித்து ரன்வீர் சிங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்குப் பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3 விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், கேப்டன் கூல் , ஜென்டில்மேன் விளையாட்டுக்கு உரித்தாக விளங்கியவர் என்ற பெருமைக்குரியவர் தோனி.

இந்திய கிரிக்கெட்டுக்காக 16 ஆண்டுகள் விளையாடிய தோனி, நேற்று (ஆகஸ்ட் 15) இரவு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய ஓய்வு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

தோனி ஒய்வு அறிவிப்பு குறித்து ரன்வீர் சிங் அவருடனான நினைவலைகளைப் பகிரும் வகையில் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"என்னிடம் உள்ள ஒரு அற்புதமான புகைப்படம் என்னுடைய விலைமதிப்பில்லா பொக்கிஷம். இது 2007/08-ல் கர்ஜாத்தில் உள்ள என்.டி.ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது. எனக்கு 22 வயது, உதவி இயக்குநராக பணியாற்றி வந்தேன்.

இந்த குறிப்பிட்ட பணியை நான் ஏன் ஏற்றுச் செய்தேன் என்றால் இந்த விளம்பரப்படத்தில் நடித்திருப்பவர் எம்.எஸ்.தோனி என்பதால்தான். நிறைய வேலை செய்தேன், ஆனால் சம்பளம் குறைவு, ஆனாலும் நான் கவலைப்படவில்லை. அவருடன் இருப்பதையே பெரிதாக விரும்பினேன்.

நான் அப்போது காயமடைந்திருந்தேன், என்னுடைய முயற்சித் திருவினையாகும் என்ற எதிர்பார்ப்பில் வலியுடனே பணியாற்றினேன், தோனியை சந்திக்க வேண்டும், புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் அவரை நேரில் பார்த்தபோது, அதிசயத்தில் வியந்து போனேன். அவர் மிகவும் எளிமையானவராக இருந்தார், இனிமையாகப் பழகுபவராக இருந்தார், நெருங்கிய தோழர் போல் நெருக்கமாகப் பழகினார். அன்பின் ஒளிவிட்டம் அவரைச் சுற்றி இருந்தது. இதனால் அவர் மீதான அன்பு, மரியாதை, மதிப்பு இன்னும் வளர்ந்தது.

என்னுடைய முதல் படம் முடித்தவுடன் எங்கள் குழுவின் ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா என்னை ஒருநாள் அழைத்தார். "ஏய், நீ தோனியின் மிகப்பெரிய விசிறி, மெஹ்பூப் ஸ்டூடியோவில் தோனி ஷூட்டிங்கில் இருக்கிறார், வேண்டுமானால் வந்தால் சந்திக்கலாம்" என்றார். நான் அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு ஸ்டூடியோவுக்கு தோனியைக் காண விரைந்தேன். அவர் கலகலப்பாகப் பழகினார், 'பேண்ட் பஜா பாராத்' படத்தில் என்னுடைய நடிப்பைப் பாராட்டினார்.

என்னுடைய தொப்பி, ஜெர்சியில் அவர் கையெழுத்துப் போட்டு கொடுத்தார். நான் அப்படியே வானில் மேகங்களிடையே மிதப்பது போல் உணர்ந்தேன். அதிலிருந்து ஒவ்வொரு முறை தோனியைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போதும் எனக்குள் ஒரு பூரிப்பும் உற்சாகமும் எழும், அதாவது என் அண்ணா எனக்கு ஒரு நிறை ஆற்றலை அளித்து உற்சாகப்படுத்துவது போல் அது இருக்கும்.

தோனி ஒரு மிகப்பெரிய விளையாட்டு வீரர், என் வாழ்நாளில் அவர் ஆடுவதைப் பார்த்த அதிர்ஷ்டம் கொண்டேன். விளையாட்டின் மிகப்பெரிய ஆளுமை. எப்போதும் என் நாயகன் தோனிதான். நம் நாட்டுக்குப் புகழைக் கொண்டு வந்ததற்காகவும், கோடிக்கணக்கான இதயங்களைப் பெருமையில் நிரப்பியதற்காகவும் நன்றி மாஹி பாய்"

இவ்வாறு ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE