முதல் பார்வை: ஒன்பது குழி சம்பத்

By ஸ்கிரீனன்

பொறுப்பற்று திரியும் நாயகனுக்கு வரும் காதல் கைகூடியதா என்பது தான் 'ஒன்பது குழி சம்பத்'

கிராமத்தில் ஒன்பது குழு விளையாடிக் கொண்டு பொறுப்பற்று திரிபவர் சம்பத் (பாலாஜி மகாராஜா). அம்மாவோடு ஏற்பட்ட பிரச்சினையால் அவருடனும் பேசுவதில்லை. அதே கிராமத்தில் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருபவர் வசந்தி (நிகிலா விமல்). இவருடைய குடும்பத்தினர் முன்பு நல்லபடியாக வாழ்ந்து, இப்போது நொடிந்து போன குடும்பம். இதனால் கிராமத்தினர் யாருடனும் நிகிலா விமல் குடும்பத்தினர் பேசுவதில்லை.

ஒரு கட்டத்தில் சம்பத்திடம் பேசும் சூழல் நிகிலா விமலுக்கு ஏற்படுகிறது. இதற்குப் பின் நிகிலா விமல் மீது காதல் கொள்கிறார் சம்பத். இதனால் நிகிலா விமல் குடும்பத்தில் சிக்கல் ஏற்படவே, ஊர் திருவிழாவில் துடைப்பத்தால் சம்பத்தை அடித்துவிடுகிறார். பின்பு, சம்பத் தன் மீது வைத்திருக்கும் காதலின் தீவிரத்தை உணர்ந்து நிகிலா விமலுக்கும் காதல் வருகிறது. சம்பத் - வசந்தி காதல் கைகூடியதா என்பது தான் திரைக்கதை.

ரகுபதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கிராமத்தின் வாழ்வியலை ரொம்ப அழகாகப் பதிவு செய்துள்ளார். காதலின் தீவிரத்துக்கு இன்னும் சில காட்சிகளை மட்டும் சேர்த்திருந்தால் கண்டிப்பாகத் தவிர்க்க முடியாத படமாக இருந்திருக்கும்.

நாயகனாக பாலாஜி மகாராஜா. கிராமத்து கதாபாத்திரத்தை அப்படியே தன் நடிப்பால் கொண்டு வந்துள்ளார். பொறுப்பற்று திரியும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தேர்வு. நாயகியாக நிகிலா விமல். அவருடைய முதல் படம் இது தான் என்பதால் நடிப்பில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். நாயகனின் நண்பராக அப்புக்குட்டி, அம்மாவாக நடித்திருப்பவர், நிகிலா விமல் அப்பாவாக இயக்குநர் இந்திரன் எனக் கதைக்குப் பொருத்தமான தேர்வு.

திருச்சிக்கு பக்கத்தில் உள்ள கிராமத்தில் நடக்கும் கதை. இந்தக் கதைக்கு மிகவும் முக்கியமான தேவை ஒளிப்பதிவு. அதை மிகவும் அற்புதமாகச் செய்திருக்கிறார் கொளஞ்சி குமார். கிராமத்து அழகை அப்படியே கடத்தியிருக்கிறார். வி.ஏ.சார்லியின் இசை படத்தின் காட்சிகளுக்கு மிகவும் பொருந்தியிருக்கிறது. தீனா எடிட்டிங் கச்சிதம்.

படத்தின் கதை மிகவும் சிறியது தான். ஆனால் படத்தை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சிக்கு இடையேயும் கிராமத்து அழகைக் காட்ட வேண்டும் என சில காட்சிகளைச் சேர்த்திருக்கிறார்கள். அதை எல்லாம் நீக்கிவிட்டாலே படத்தின் நீளம் இன்னும் குறையும். சம்பத் - வசந்தி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததிற்கான காட்சி ஒட்டவில்லை. காதலின் தீவிரத்தை உணர்த்த இன்னும் சில காட்சிகளைச் சேர்த்திருந்தால் இன்னும் கதை வலுவாக இருந்திருக்கும்.

ஒட்டுமொத்த படத்தில் க்ளைமாக்ஸ் திருப்பத்தில் ரசிகர்களுக்கு உள்ள அழுத்தம், மொத்த படத்திலும் இருந்திருந்தால் முக்கியமான படமாக இருந்திருக்கும் இந்த 'ஒன்பது குழி சம்பத்'.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE