இதுவரை என் குடும்பத்தின் பெயரை எங்கும் பயன்படுத்தியதில்லை - இசையமைப்பாளர் அர்மான் மாலிக் வெளிப்படை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.

மேலும், கரண் ஜோஹர், சல்மான் கான், ஆலியா பட் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல இசையமைப்பாளர் தபூ மாலிக்கின் மகனும், இசையமைப்பாளர் அனு மாலிக்கின் மருமகனுமான அர்மான் மாலிக் இதுவரை தன் குடும்பத்தின் பெயரை எங்கும் பயன்படுத்தியதில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து அர்மான் மாலிக் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது முதல் எனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளேன்.

இசை அனுபவம் நிறைந்த ஒரு குடும்பத்திலிருந்து நாம் சினிமாவுக்கு வரும்போது மற்றவர்கள் நம் குடும்பத்தினர் சென்ற பாதையிலேயே நாமும் செல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் நான் எனக்கென்று ஒரு தனி பாதையை உருவாக்க விரும்பினேன். இதுவரை என் குடும்பத்தின் பெயரை எங்கும் பயன்படுத்தியதும் இல்லை.

என்னுடைய 9 வயதில் பிரபல ரியாலிட்டி இசை நிகழ்ச்சி ஒன்றில் என்னுடைய குடும்ப பெயரை பயன்படுத்தாமல் அர்மான் என்ற பெயருடன் பங்குபெற்றேன். பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களின் பாடத் தொடங்கியதன் மூலம் பல இசைக் கலைஞர்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அதன்பிறகே சினிமாவில் பாட வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இவ்வாறு அர்மான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE