நடிகர் அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷல்: எப்படி நடித்தாலும் ரசிக்கவைப்பவர்  

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டு காலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னணிக் கதாநாயகனாகவும் கடந்த பத்தாண்டுகளில் குணச்சித்திர, வில்லன் நடிகராகவும் வெற்றிகரமாக இயங்கிவருபவரான நடிகர் அர்ஜுன் இன்று (ஆகஸ்ட் 15) அன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி இயக்குநர். கதை-திரைக்கதை ஆசிரியராகவும் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

கன்னட-தமிழ் தொடக்கம்

கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் மகனான அர்ஜுன் 1981-ல் வெளியான 'சிம்மதா மரி சைன்யா' என்னும் படத்தின் கதாநாயகனாக திரைத் துறைக்கு அறிமுகமானார். 1984-ல் ராமநாராயணன் இயக்கிய 'நன்றி' என்னும் திரைப்படத்தின் இரண்டு நாயகர்களில் ஒருவராக தமிழ் திரைத் துறையில் முதல் தடம் பதித்தார். 1980களில் தொடர்ந்து தமிழ், கன்னடம் என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் 'யார்' (1985), 'சங்கர்குரு'(1987), 'தாய்மேல் ஆணை'(1988), 'படிச்ச புள்ள' உள்ளிட்ட வெற்றிப் படங்கள் அமைந்தன.

90-களில் புதிய உயரங்கள்

1990-ல் அர்ஜுன் ஒரு நடிகராக பல உயரங்களை எட்டி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். ஒரு திரைப்படைப்பாளியாகவும் கவனிக்கவைத்தார். 1990-ல் ஒரு கன்னடப் படம் ஐந்து தமிழ்ப் படங்களில் நடித்தார். 'ஆத்தா நா பாஸாயிட்டேன்', 'தங்கைக்கு ஒரு தாலாட்டு' ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகின. 1992-ல் 'சேவகன்' படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கியதோடு தயாரிக்கவும் செய்தார் அர்ஜுன். குஷ்பு நாயகியாக நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

1993-ல் இயக்குநர் ஷங்கர் அறிமுகமான 'ஜெண்டில்மேன்' படத்தின் நாயகனாக நடித்தார் அர்ஜுன். பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற இந்தப் படம் அர்ஜுனின் திரைவாழ்வில் அவருக்கு மிகப் பெரிய உயரத்தைப் பெற்றுத் தந்தது. அதே ஆண்டு வெளியான 'பிரதாப்', 'கோகுலம்' திரைப்படங்களும் வெற்றிபெற்றன 1994-ல் அவர் இயக்கி நடித்த 'ஜெய் ஹிந்த்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தில் தீவிரவாதிகளைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்தியத் தேசப்பற்றை முன்னிறுத்திய அந்தப் படம் தேசப்பற்றை மையமாகக் கொண்ட பல காவல்துறைப் படங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. சுதந்திரத் தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் படமாகவும் உள்ளது (இன்றுகூட ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் 'ஜெய் ஹிந்த்' ஒளிபரப்பப்பட்டது). இதே ஆண்டில் பி.வாசு இயக்கத்தில் அர்ஜுன் நடித்த 'சாது' திரைப்படமும் வெற்றிபெற்றது.

1995-ல் அர்ஜுன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து இயக்கிய 'கர்ணா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் வித்யாசாகர் இசையில் அனைத்துப் பாடல்களும் அருமையாக இருந்தன. குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம்-எஸ்.ஜானகி பாடிய 'மலரே மெளனமா' என்னும் பாடல் சாகாவரம் பெற்ற மெலடிப் பாடலாகிவிட்டது.

மக்கள் முதல்வனும் அழகான காதலனும்

1999-ல் ஷங்கர் முதன்முறையாக தயாரித்து இயக்கிய 'முதல்வன்' அர்ஜுனின் திரைவாழ்வின் உச்சம் என்று சொல்லலாம். ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதப்பட்ட இந்தக் கதையில் அவர் நடிக்க மறுக்கவே அர்ஜுனை நாடினார்கள். படத்தைப் பார்த்தவர்கள் அர்ஜுனைத் தவிர வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்னும் அளவுக்குக் கதையின் தேவைக்கும் கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்தினார் அர்ஜுன். வெகு சிறப்பாக நடித்தும் இருந்தார்.

வஸந்த் இயக்கத்தில் 2000-ம் ஆண்டில் வெளியான 'ரிதம்' வணிகரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அர்ஜுனின் திரைவாழ்வில் மிக முக்கியமான படம். வாழ்க்கைத் துணையை இழந்த இருவருக்கிடையே அரும்பும் நட்பையும் அது காதலாக முகிழ்வதையும் தடைகளைக் கடந்து இருவரும் வாழ்வில் இணைவதையும் ஒரு அழகான கவிதையைப் போல் காட்சிப்படுத்தியிருந்த அந்தப் படத்தில் பத்திரிகை புகைப்பட நிருபர் கார்த்திகேயனாக அர்ஜுன் மிக இயல்பாகவும் அழகாகவும் நடித்திருந்தார்.வெளியான போதே விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தப் படம் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும் அதிகம் பேரால் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் பல படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருந்தார் அர்ஜுன். அவற்றில் 'ஏழுமலை', 'கிரி', 'அரசாட்சி', 'வாத்தியார்', 'மருதமலை', ' ஆகியவை வெற்றிபெற்றன. 'கிரி', 'மருதமலை' படங்களில் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சிகளிலும் சிறப்பாகப் பங்களித்தார். பாரதிராஜா இயக்கிய 'பொம்மலாட்டம்' படத்தில் நானா படேகருக்கு இணையான வேடத்தில் நடித்தார்.

உருமாற்றமும் மாறாத செல்வாக்கு

2011-ல் வெளியான அஜித்தின் 50-ம் படமான 'மங்காத்தா' படத்தில் எதிர்மறை அம்சங்கள் நிரம்பிய நாயகனை எதிர்க்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் அர்ஜுன். அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றியும் அவருடைய கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பும் அவருடைய திரைப்பாதையில் மாற்றத்துக்கு வித்திட்டன. 2013-ல் மணி ரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் தீமையின் மனித உருவமாக நடித்து அசத்தினார். தொடர்ந்து இந்தப் பத்தாண்டில் பல படங்களில் நாயகனுக்குக் கிட்டத்தட்ட இணையான முக்கியத்துவம் கொண்ட துணைக் கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்துவருகிறார். 2016-ல் வெளியான மிகப் பெரிய வெற்றிபெற்ற 'இரும்புத்திரை' படத்தில் வில்லனாக அவர் நடித்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அறிவும் மிடுக்கும் நிறைந்த வில்லன் கதாபாத்திரங்களுக்கான மிகச் சிறந்த தேர்வாகத் திகழ்கிறார் அர்ஜுன். வில்லன்,துணை நடிகராகிவிட்ட பிறகும் நாயகன் அல்லது முதன்மைப் பாத்திரத்துக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள் அர்ஜுனைத் தேடிவருவதிலிருந்தே ஒரு நடிகராக அவருக்கு இருக்கும் மதிப்பும் செல்வாக்கும் அப்படியே இருக்கின்றன என்பதை உணரலாம்.

ஆக்‌ஷன் கிங் மட்டுமல்ல

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் நாயகனாக நடித்துக்கொண்டிருந்த அர்ஜுன் தமிழ். கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார் அர்ஜுன். 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட வெகு சில நாயக நடிகர்களில் அவரும் ஒருவர். உடற்கட்டு சண்டைக் காட்சிகளில் அபார மெனக்கெடல் ஆகியவற்றால் 'ஆக்‌ஷன் கிங்' என்று அடைமொழிக்குப் பொருத்தமானவராக இருக்கிறார். சண்டைக் காட்சிகள் நிரம்பிய படங்களுக்காகவே அதிக புகழைப் பெற்றார். இருந்தாலும் அவரை 'ஆக்‌ஷன் ஹீரோ' என்ற பதத்துக்குள் மட்டும் அடைத்துவிட முடியாது. தொடர்ந்து 'கோகுலம்', 'கொண்டாட்டம்' போன்ற குடும்ப சென்டிமெண்ட் படங்களிலும், 'கண்ணோடு காண்பதெல்லாம்', 'ரிதம்' போன்ற மென்மையான காதல் படங்களிலும் நடித்துவந்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை வெற்றியையும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளன. இதற்குக் காரணம் அவரிடம் இருக்கும் இயல்பான நடிப்புத் திறனும் இளமையான தோற்றமும்தாம். இவற்றை எப்போதும் தக்கவைத்திருக்கிறார்.இப்போதுகூட அவருடைய தோற்றத்தின் மூலம் உண்மையான வயதைத் தெரிந்துகொள்ள முடியாது ஒரு இயக்குநராகவும் அவருடைய வெற்றி விகிதம் குறிப்பிடத்தக்கது.

இத்தனை சிறப்புகளுடன் தென்னிந்திய சினிமாவில் நாற்பதாண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவரும் அர்ஜுன் இன்னும் பல சாதனைகளை நிகழ்ந்த அவருடைய இந்தப் பிறந்தநாளில் மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE