சோனு சூட் உதவியால் மருத்துவச் சிகிச்சை: மறுவாழ்வு பெற்ற இளம்பெண்

22 வயதான ப்ரக்யாவுக்கு ஒரு விபத்தில் இரண்டு கால் மூட்டுகளும் சேதமானதால், கிட்டத்தட்ட 6 மாதங்கள் படுக்கையில் கிடந்தார்.

ஆனால் வியாழக்கிழமை ப்ரக்யாவுக்கு ஒரு புதிய நாளாக இருந்தது. ஏனென்றால் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின், வாக்கர் உதவியோடு சில அடிகள் எடுத்து வைத்தார். இதை சாத்தியமாக்கிய நடிகர் சோனு சூட்டுக்கு ப்ரக்யாவின் குடும்பத்தினர் தொடர்ந்து தங்கள் நன்றிகளையும், ஆசீர்வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கோரக்பூரில் பத்ரி பஜார் பகுதியில் பூசாரியாக இருக்கும் ப்ரக்யாவின் தந்தை விஜய் மிஷ்ரா, "கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சாலை விபத்தில் ப்ரக்யாவுக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டன. அவரது இரண்டு கால் மூட்டுகளும் சேதமடைந்தன. அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்றும், அதற்கு 1.5 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் உள்ளூர் மருத்துவர்கள் கூறினர். நாங்கள் அவ்வளவு பணம் செலவு செய்யும் நிலையில் இல்லை. பெரும்பாலான உறவினர்களும் உதவி செய்யவில்லை" என்று நினைவுகூருகிறார்.

சட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்த ப்ரக்யா, சில அரசியல் தலைவர்களை உதவிக்கு அணுகவும் முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை. ஆகஸ்ட் முதல் வாரத்தில், சோனு சூட் உதவ வேண்டும் என்று கோரி ட்வீட் செய்திருந்தார் ப்ரக்யா. டெல்லியில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரிடம் பேசிய சோனு சூட் ப்ரக்யாவுக்கு பதிலளித்தார். கடந்த புதன்கிழமையன்று காஸியாபாத்தில் ப்ரக்யாவுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இன்னும் 2-3 நாட்களில் ப்ரக்யா வீடு திரும்புவார்.

"ரயில் டிக்கெட் உள்ளிட்ட அத்தனை ஏற்பாடுகளும் சோனு சூட் கவனித்துக் கொண்டார். நாங்கள் டெல்லிக்குச் சென்றவுடன் அவரது அணி எங்களை ரயில் நிலையத்தில் சந்தித்து அங்கிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. சோனு சூட் எங்களுக்குக் கடவுளைப் போல. இது மாதிரியான தேவதைகளை இன்று பார்ப்பது கடினம். அவருக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. ஆனால் கணக்கிலடங்கா ஆசீர்வாதங்களை, நல் வாழ்த்துகளை அவருக்குத் தருகிறேன். அவருக்கு இன்னும் அதிக மகிழ்ச்சியும், பிரகாசமான எதிர்காலமும் அமையட்டும்" என்று நெகிழ்கிறார் ப்ரக்யாவின் தந்தை.

"எனக்கு, சோனு சூட் தான் கடவுள். நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் கல்வி பெற முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்" என்கிறார் ப்ரக்யா.

இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதும் தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியின்றி அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிக்கினர்.

தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு ஆங்காங்கே அவர்கள் போராட்டங்களையும் நடத்தினர். அப்படிச் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி சிலரைத் தனி விமானம் மூலமாகவும் சோனு சூட் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வறுமையில் இருக்கும் விவசாயிக்கு ட்ராக்டர், ஸ்பெய்னில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை சோனு சூட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE