’இளமை இதோ இதோ’, ‘நிலா காயுது’ , ‘நேத்து ராத்திரி யம்மா’; 38 வருடங்களாக மனதில் நிற்கிறான் ‘சகலகலா வல்லவன்’!

By வி. ராம்ஜி

ஆழமான கதை கொண்ட படமென்றால் லாஜிக் மீறல்கள் இருக்கக்கூடாது என்றும் பொழுதுபோக்குப் படமென்றால் லாஜிக் ஓட்டைகளெல்லாம் இருந்தால் தப்பில்லை என்றும் தப்புக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறோம். அப்படித்தான், காமெடிப் படமா... லாஜிக் தேவையில்லை, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட மசாலாப் படமா... லாஜிக் இருக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை என்று படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், பொழுதுபோக்கு கொண்ட கதையில், ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில், எல்லா லாஜிக்குகளுடனும் வந்த பக்கா பேக்கேஜ் திரைப்படம்தான்... ‘சகலகலா வல்லவன்’.
‘சகலகலா வல்லவன்’ ஆக்‌ஷன் படமா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்லலாம்.பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படமா என்று கேட்டால் அதற்கும் பதில் ஆமாம் என்று தலையாட்டலாம். மசாலாப் படமா இது என்று கேட்டால், அதற்கும் அதே பதிலைச் சொல்லிவிடலாம். சென்டிமென்ட் படமா என்றாலும் குடும்பப் படமா என்றாலும் இதே பதிலைத்தான் சொல்லியாகவேண்டும். எல்லோருக்கும் பிடித்தமான படமாகத் தந்ததில்தான் அடங்கியிருக்கிறது ‘சகலகலா வல்லவனின்’ வெற்றி!

தங்கையைக் கெடுத்தவனுக்கே தங்கையைத் திருமணம் செய்து வைக்கப் போராடும் அண்ணனின் கதைதான் ‘சகலகலா வல்லவன்’. ஆனால் இந்தை மையத்தை வைத்துக் கொண்டு, இழை இழையான வேலைப்பாடுகள் கொண்ட திரைக்கதைதான், படத்தைத் தூக்கிக்கொண்டு சென்று பட்டிதொட்டிசிட்டி என போட்ட தியேட்டர்களிலெல்லாம் ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டுகளை மாட்டவைத்தது.

ஓரளவு வசதி கொண்ட நடுத்தர வர்க்கக் குடும்பம். ஊரில் பெருந்தனக்காரக் குடும்பம். மனைவியின் ராஜாங்கம்தான் அங்கே. வி.கே.ராமசாமியின் மனைவி புஷ்பலதா, வட்டிக்கு விட்டு, அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, ஏழைகளின் வயிற்றில் அடிப்பவர். இவர்களின் மகன் ரவீந்தர். மகள் அம்பிகா. இருவருமே பணத்திமிரும் அலட்டலுமாக இருப்பவர்கள். அந்த வீட்டில் நாணயமும் நேர்மையுமாக இருப்பவர் வி.கே.ஆர். மட்டுமே.

இங்கே, கமலுக்கு உயிர் அவரின் தங்கை துளசி. அம்மா அப்பாவுடனும் ஒய்.ஜி. மகேந்திரனுடனும் நிறைவாக வாழ்ந்துகொண்டிருப்பார். கோயில் பூஜையில் புஷ்பலதா கோபம் கொள்வார். சாலையில் ரவீந்தர் ஆத்திரமாவார். அம்பிகாவும் அப்படித்தான் கர்வத்துடன் பேசுவார்.

இதில் கமலும் அம்பிகாவும் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். இருவரும் நக்கல் கேலி செய்துகொள்வார்கள்.
இப்படியான முட்டல் மோதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்க, ஒருகட்டத்தில் கமலைப் பழிவாங்கத் துடிப்பார் ரவீந்தர். வட்டிக்கு வாங்கிய பணத்தை கமல் தர, அதைத் தரவே இல்லை என்று சொல்லிவிடுவார் ரவீந்தர். இதில் இன்னும் மோதல் வெடிக்கும். இதையடுத்து, கமலின் தங்கை துளசியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துவிடுவார் ரவீந்தர்.
இது கமலுக்குத் தெரியவர, குடும்பத்துக்குத் தெரியாமல், ரவீந்தரிடம் சென்று மன்றாடுவார். ஆனால் அவரோ அலட்சியப்படுத்திவிடுவார். அப்போது, ‘என் தங்கச்சிக்கு நீதான் தாலி கட்டுறே’ என்று சபதம் போடுவார் கமல். அதை நிறைவேற்ற, சகல கலைகளையும் கொண்டு, வேறு வேடங்கள், அமெரிக்க இங்கிலீஷெல்லாம் பேசி திருமணம் செய்துவைப்பார்.
ரவீந்தருக்கும் துளசிக்கும் கல்யாணம். கமலுக்கும் அம்பிகாவுக்கும் கல்யாணம். திருமணத்துக்குப் பிறகு, விஷயம் வெளிப்படும். துளசியை ஏற்காமல் வேலைக்காரி போல் நடத்துவார் ரவீந்தர். மேலும் சில்க் ஸ்மிதாவுடன் தொடர்பில் இருப்பார். இதையெல்லாம் தெரிந்துகொண்ட கமல், துளசியுடன் ரவீந்தரைச் சேர்த்து வைத்தாரா என்பதையும் அம்பிகாவுடன் இணைந்தாரா என்பதை இரண்டரை மணி நேர கமர்ஷியல் முலாம் பூசி, அட்டகாசமாக கொடுத்திருப்பார்கள்.

கமல் - அம்பிகா ஜோடி இந்தப் படத்தில் பேசப்பட்டது. குடுமியும் முறுக்கு மீசையும் வேஷ்டியுமாக கமல் கெட்டப் அசத்தலாக இருக்கும். கிராமத்துப் பின்னணியும் சூழலும் அழகுற காட்டப்பட்டிருக்கும். புஷ்பலதாவின் மிடுக்கும் தோரணையும் அவரிடம் வட்டிக்கு பணம் வாங்காத நமக்கே கூட, கோபத்தை வரவழைக்கும். வழக்கம் போலவே, வி.கே.ஆரின் டைமிங் காமெடியும், உடலை அலட்டிக்கொள்ளாமல் நடிக்கிற அவரின் பாடி லாங்வேஜும் ரொம்பவே ரசிக்கவைத்தன.

மாட்டுவண்டியின் அச்சாணியை கழற்றி குப்புறக் கவிழ்ப்பார் அம்பிகா. பிறகு அவரின் கார் டயரைப் பஞ்சராக்கி பதறவிடுவார் கமல். இடைவேளைக்குப் பிறகு பணக்காரக் கமலாக குறுந்தாடியுடன் வருவார். அவரிடம் அசடு வழிவார் அம்பிகா. அதேபோல், பழனி என்கிற ரவீந்தரின் பெயரை, ‘பன்னி பன்னி’ என்று துளசி கூப்பிடுவார். பாம்புப் பச்சடி, தவளைக் கறி, பன்றிக் கறி, கீரிப்பிள்ளை என்று சொல்ல, ‘கீரிப்பிள்ளையா... என்னப்பா சுந்தரம் பிள்ளை’ என்று தேங்காய் சீனிவாசனிடம் வி.கே.ஆர். சொல்லுவார். இப்படி, படம் நெடுக, காமெடி சரவெடி கொளுத்திப் போட்டுக்கொண்டே இருப்பார் பஞ்சு அருணாசலம். படத்துக்கு கதை, வசனம் அவர்தான்.

ஏவிஎம் படமென்றால், பஞ்சு அருணாசலம் கதை, வசனம் இருக்கும். பாபு ஒளிப்பதிவு செய்வார். விட்டல் எடிட்டிங் வேலையைச் செய்வார். ஏவிஎம்மின் செல்லப்பிள்ளை எஸ்.பி.முத்துராமன், மிக அருமையாகவும் தெளிவாகவும் படத்தின் ‘மூட்’ என்னவோ அவற்றை நமக்குக் கடத்திவிடுவார். இப்படியான கூட்டணியுடன் வந்த ‘சகலகலா வல்லவன்’ மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.

இடைவேளை வரை குடுமியுடன் இருக்கும் போது குண்டாக இருக்கிற கமல், இடைவேளைக்குப் பிறகு பணக்காரராக அமெரிக்க ரிட்டர்னாக கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு டிஸ்கோ ஆடுவார். அப்போதெல்லாம் ஒல்லியாக இருப்பார். முன்னதாகப் பேசுகிற கிராமத்து ஸ்லாங்கும் பின்னே பேசுகிற அமெரிக்க இங்கிலீஷும் கொண்டு அசத்தியிருப்பார்.

புஷ்பலதாவை எதிர்க்கும் போது ஆவேசமும் அம்பிகாவை கலாய்க்கும் போது கிண்டலும் தங்கை துளசியுடன் பேசும் போது பாசமும் ரவீந்தரிடம் பேசும்போதெல்லாம் கோபமும் வி.கே.ஆரிடம் காட்டுகிற மரியாதையும் தேங்காய் சீனிவாசனிடம் காட்டுகிற நன்றியும் சில்க் ஸ்மிதாவிடம் துபாய் ஷேக் போல் வரும் போது நடக்கிற நடையும், பேசுகிற ஸ்டைலும் என படம் நெடுக கமல், வழக்கம் போல் தன் உழைப்பையும் நடிப்பையும் கொட்டியிருப்பார்.

எண்பதுகளில் ஜூடோ ரத்தினம்தான் சண்டைக்காட்சிகளுக்கெல்லாம் மாஸ்டர். படத்தில் உள்ள சண்டைக்காட்சிகளெல்லாம் மிரட்டியெடுக்கும். ஒவ்வொரு சண்டையையும் வெரைட்டியாக, அதிரடியாகப் பண்ணியிருப்பார்.

வாலியின் பாடல்கள் எல்லாமே ஹிட்டடித்தன. இளையராஜா தன் இசைக்கலையால், சகலகலா வல்லவனை இன்னும் வல்லவனாக்கினார். ‘16 வயதினிலே’ படத்தில் ‘சோளம் வெதக்கையிலே’ என்று டைட்டில் பாடல் பாடியவர், அதற்குப் பின்னரும் பாடினார் என்றாலும், ‘சகலகலா வல்லவன்’ படத்தில் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ என்று டைட்டில் பாட்டு பாட, ’இளையராஜா டைட்டில் ஸாங் பாடினால், படம் ஹிட்டாகிரும்’ என்று திரையுலகினர் சென்டிமென்டுடன் பாட வைத்தார்கள். பின்னாளில், ‘அம்மன் கோவில் கிழக்காலே’ என்று ஒரு டைட்டிலே வைக்கப்பட்டது.

‘அம்மன் கோவில் கிழக்காலே’ என்ற பாட்டு கிராமத்து அழகை நமக்குக் கடத்திவிடும். ‘கட்டவண்டி கட்டவண்டி கடையாணி கழண்ட வண்டி’ என்று அம்பிகாவுக்கு ஒரு பாடல். ‘கட்டவண்டி கட்டவண்டி காப்பாத்த வந்தவண்டி’ என்று கமலுக்கு ஒரு பாடல். இரண்டுமே வண்டியை மையமாகக் கொண்ட பாடல். ஆகவே, வண்டி வண்டி என்று முடியும் வகையில் எழுதப்பட்டிருக்கும். இரண்டு பாடல்களுமே செம ஹிட்டடித்தது.

‘நிலா காயுது நேரம் நல்ல நேரம்’ பாடல் ஒரு ரகம். ‘நேத்து ராத்திரி யம்மா’ இன்னொரு ரகம். இந்த இரண்டு பாடல்களையும் சிலோன் ரேடியோவில் தினமும் நான்கு முறையாவது ஒலிபரப்பவில்லையென்றால், அவர்கள் தூங்கவேமாட்டார்கள் போல. இன்றைக்கும் வரைக்கும் இந்தப் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் லிஸ்ட்டில் இருக்கின்றன.


தமிழகமெங்கும் திரையிட்ட அனைத்துத் தியேட்டர்களிலும் தினமும் 4 காட்சிகள் என்றால் நான்கு காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் போர்டு தொங்கவிடப்பட்டது. தியேட்டருக்குள் படம் பார்க்கச் சென்ற கூட்டத்தை விட மூன்று மடங்கு கூட்டம், டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் சென்றது. பெரும்பான்மையான ஊர்களில், 150 நாட்களைக் கடந்தும், வெள்ளிவிழா என்று சொல்லப்படும் 175 நாட்களைக் கடந்தும் சில ஊர்களில் 250 நாட்களைக் கடந்தும் ஓடி, பிரமாண்டமான வசூல் சாதனையைப் படைத்தது. அதுவரை, ஏ அண்ட் பி செண்டர் ஹீரோவாக இருந்த கமலஹாசனை, ஏ, பி, சி என அனைத்து ஏரியாக்களுக்கும் கொண்டு சென்று, கமர்ஷியல் ஹீரோவாகவும் வசூல் மன்னனாகவும் ஆக்கிய படமாக ‘சகலகலா வல்லவன்’ அமைந்தது. இத்தனைக்கும் எம்ஜிஆர் நடித்த கருப்பு வெள்ளைப் படமான ‘பெரிய இடத்துப் பெண்’ எனும் கதையைத்தான் வேறொரு விதமாகக் கொடுத்ததாகவும் சொல்லுவார்கள். அதில் எம்ஜிஆரும் அக்காவும். இதில் கமலும் தங்கையும்!


1982ம் ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது ‘சகலகலா வல்லவன்’. படம் வெளியாகி, 38 வருடங்களாகின்றன. 83ம் ஆண்டு தொடங்கி, இந்த 2020ம் ஆண்டு வரை... டிசம்பர் 31ம் தேதியும் ஜனவரி 1ம் தேதியும் ‘சகலகலா வல்லவனை’ கொண்டாடிக்கொண்டே இருக்கிறது. ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. கிராமத்துப்படமான ‘சகலகலா வல்லவன்’ படத்தில், இளையராஜா மேல்நாட்டு பாணியில் இசையமைத்த, ‘இளமை இதோ இதோ.. இனிமை இதோ இதோ...’ என்று ஹேப்பி நியூ இயர் பாடல் ஒலிக்காத ஊரே இல்லை. வீடுகளே இல்லை. உச்சரிக்காத உதடுகளே இல்லை. இன்னும் நூறு ஆண்டுகளானாலும் ஆங்கிலப் புத்தாண்டு நாளில், ‘ஹேப்பி நியூ இயர்’ பாடலாக ‘சகலகலா வல்லவன்’ பாட்டுத்தான் இருக்கும்.


38 ஆண்டுகளாகியும், அடுத்த தலைமுறையைக் கடந்து, மூன்றாவது தலைமுறையை நெருங்கும் வேளையிலும் இன்னும் பிரமிப்புக் காட்டிக்கொண்டே இருக்கிறான் ‘சகலகலா வல்லவன்’!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்