தணிக்கை செய்யாத 'ஆரண்ய காண்டம்' பதிப்பை எனது நூலகத்தில் தேடுகிறேன்: அனுராக் காஷ்யப்

By செய்திப்பிரிவு

'ஆரண்ய காண்டம்' திரைப்படத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பு தன்னிடம் இருந்ததாகவும், அதைத் தற்போது தேடி வருவதாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.

தமிழ்த் திரைப்படங்களையும், இயக்குநர்களையும் சிலாகித்துப் பாராட்டிப் பேசி பாலிவுட் ரசிகர்களிடத்திலும் எடுத்துச் செல்லும் பல கலைஞர்களில் முக்கியமானவர் அனுராக் காஷ்யப்.

பாலிவுட்டில் மாற்று சினிமாவுக்குப் பிரபலமான அனுராக், இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், சசிகுமார், தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் குறித்துப் பல பேட்டிகளில் பாராட்டிப் பேசியுள்ளார். தனது 'கேங்ஸ் ஆஃப் வஸேபூர்' திரைப்படங்களுக்கு 'சுப்பிரமணியபுரம்' தான் உந்துதலாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அனுராக் காஷ்யப் இரண்டு ட்வீட்களைப் பகிர்ந்திருந்தார்.

"எனது (காணொலி) நூலகத்தைச் சுத்தம் செய்யும்போது தணிக்கை செய்யப்படாத 'நோ ஸ்மோக்கிங்' திரைப்படத்தின் ஆவிட் வடிவம் 150 நிமிடங்கள் கிடைத்தது. 'பாம்பே வெல்வட்' திரைப்படத்தின் மாற்று வடிவம், 'ப்ளாக் ஃப்ரைடே' திரைப்படத்தின் நீட்டிக்கப்பட்ட பதிப்பு, தெளிவாக சப்டைட்டில் சேர்க்கப்பட்ட 'பான்ச்' ஆகிய திரைப்படங்கள் கிடைத்தன. அனைத்துமே ஆவிட் எடிட்டிங்கிலிருந்து பெற்றவை. 'பான்ச்' திரைப்படத்தின் பீட்டா வடிவமும் கிடைத்தது".

"வீடியோகாரன், வெற்றிமாறனின் 'வடசென்னை' திரைப்படத்தின் முதல் வடிவம், சப்டைட்டில் சேர்க்கப்பட்ட 'சுப்பிரமணியபுரம்', 'தித்லி' திரைப்படத்தின் தணிக்கை செய்யப்படாத ஃப்ரெஞ்ச் பதிப்பு ஆகியவையும் கிடைத்தன. 'ஆரண்ய காண்டம்' திரைப்படத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பை தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று அனுராக் காஷ்யப் குறிப்பிட்டுள்ளார்.

அனுராக்கின் இந்த ட்வீட்டைத் தொடர்ந்து இந்தத் திரைப்படத்துக்கென இணையத்தில் இருக்கும் பெரிய ரசிகர் கூட்டமும் அவருக்குப் பின்னூட்டங்கள் இட ஆரம்பித்துள்ளன. 'ஆரண்ய காண்டம்' படத்தின் வெட்டுகள் இல்லாத பிரதி உங்களுக்குக் கிடைத்தால் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டு வருகின்றனர்.

'வடசென்னை'யின் முதல் வடிவம் 4 மணி நேரங்களுக்கு மேல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதையும் எங்களுடன் பகிர வேண்டும் என்று சிலர் கேட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE