இன்டர்போலுக்குத் தண்ணி காட்டும் ஐவர்: நெட்ஃப்ளிக்ஸைக் கலக்கும் ‘வோர்ல்ட்ஸ் மோஸ்ட் வான்டட்’

தீவிரவாதிகளையோ, ஊரையே அச்சுறுத்தும் வில்லன்களையோ நாயகன் தேடிக் கண்டுபிடிப்பது போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் கோலிவுட்டில் மட்டுமல்ல, ஹாலிவுட் வரை மலிந்து கிடக்கின்றன. ஆனால், சரியான திட்டங்கள் மூலம் சாதுர்யமாகக் குற்றங்களைப் புரியும் சமூக விரோதிகளைத் தேடிப்பிடிப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.

அவர்களைப் பிடிப்பதற்குப் பின்னால் பல நூறு பேர்கள், பல ஆண்டு காலம் உழைக்க வேண்டும் என்ற உண்மையை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளது கடந்த வாரம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘வோர்ல்ட்ஸ் மோஸ்ட் வான்டட்’ (World's Most Wanted) ஆவணத் தொடர்.

20-ம் நூற்றாண்டின் இறுதியில், சர்வதேசக் காவல்துறையான இன்டர்போலின் தேடப்படுபவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, இன்றுவரை பிடிபடாமல் கம்பி நீட்டி வரும் ஐந்து படு பயங்கரமான மனிதர்களைப் பற்றி ரத்தமும் சதையுமான சாட்சிகளுடன் விளக்குகிறது இத்தொடர். நெட்ஃப்ளிக்ஸின் மற்ற ஆவணப் படங்களைப் போலவே இத்தொடரும் நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது. இத்தொடரில் காட்டப்படும் சம்பவங்களில் நேரடியாகத் தொடர்புடையவர்களின் கருத்துகளைச் சமரசம் இன்றி பதிவு செய்துள்ளார்கள்.

மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல் மன்னனான இஸ்மாயில் எல் மாயோ சம்பாடா, ருவாண்டா கலவரத்துக்கு நிதியுதவி செய்த ஃபெலிசியன் காபுகா, 2005-ல் லண்டனில் பல நூறு உயிர்களைக் காவு வாங்கிய குண்டுவெடிப்புக்குக் காரணமான சமந்தா லெத்வெய்ட் என்ற கர்ப்பிணி, பங்குச் சந்தை மோசடி, ஆயுதக் கடத்தல் போன்ற பல குற்றங்களைப் புரிந்த ரஷ்ய மாஃபியாவின் பெரும் புள்ளியான ஸீமியோன் மொகிலிவிச், இத்தாலி அரசுக்கு நேரடி எதிரியாக இருந்த மெஸினா டெனாரோ ஆகிய ஐந்து பேரைப் பற்றிப் பேசுகிறது இந்தத் தொடர். இவர்கள் போலீஸ் மற்றும் ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இன்றளவும் சுதந்திரமாக உலவுவதன் பின்னணி குறித்துச் சுவாரசியமான தகவல்கள் இத்தொடரில் விரவிக் கிடக்கின்றன.

இவர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் எடுத்த நடவடிக்கைகளின் பிரத்யேகக் காணொலிகளும், இவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட மனிதர்களின் பேட்டிகளும் இத்தொடரின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன. குற்றவாளிகள் எப்படித் தப்பித்தார்கள் என்று காட்டியதுபோல் அவர்கள் எப்படித் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டியிருந்தால் இத்தொடர் மேலும் முழுமையானதாக அமைந்திருக்கும்.

இத்தொடரைப் பார்க்கும்போது, ஒரு குற்றவாளியைப் பிடிப்பது என்பது அரசாங்கத்துக்கு எவ்வளவு கடினமான காரியமாக இருக்கிறது என்ற மலைப்பு ஏற்படத்தான் செய்கிறது. அதேசமயம், பல நூறு உயிர்களைக் கொன்ற மனித மிருகங்கள் சுதந்திரமாக உலா வரும் வகையில் உலகம் முழுக்கச் சட்ட விதிமுறைகளில் போதாமையும், நிர்வாகச் சீர்கேடும் நிறைந்துள்ளனவே என்ற வருத்தமும் மேலோங்குகிறது.

- க.விக்னேஷ்வரன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE