மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஆல்ஃபிரட் ஜோசப் ஹிட்ச்காக்கின் 121-வது பிறந்ததினம் இன்று (ஆக.13). அவர் பிறந்தது லண்டனில் உள்ள லேயிடன் ஸ்டோன். தந்தை வில்லியம் ஹிட்ச்காக், தாயார் எம்மா ஜேன்.
1923 இல் ஹிட்ச்காக் இயக்கிய முதல் படம் 'தி நம்பர் 13' பல்வேறு காரணங்களால் தடைபட்டது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1925 இல் வெளியான 'பிளஷர் கார்டன்' திரைப்படமே ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமாகும். அது பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைகிறது. அதன் பிறகு 1927 இல் வெளியான 'லாட்ஜர் - ஏ ஸ்டோரி ஆஃப் லண்டன் ஃபாக்' திரைப்படம் மிகப்பெரி ய வெற்றியைப் பெற்று, ஹிட்ச்காக் என்ற கலைஞனை உலகுக்கு அடையாளம் காட்டியது. முப்பதுகளின் இறுதியில் அவர் இயக்கிய 'தி லேடி வேனிசஸ்', 'ஜமைக்கா இன்' போன்ற திரைப்படங்கள் அமெரிக்காவில் திரையிடப்பட்டு அங்கும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹிட்ச்காக் ஹாலிவுட்டுக்கு பயணமாகிறார்.
ஹாலிவுட்டில் அவர் இயக்கிய முதல் படம் 'ரெபெக்கா' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிறந்த இயக்குநர் பிரிவில் அவரது பெயர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. நாற்பதுகளில் மட்டும் மூன்றுமுறை அவரது பெயர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு நிராகரிக்கப்படுகிறது. த்ரில்லர் படங்களை குறைவாக மதிப்பிடும் அன்றைய போக்கு ஹிட்ச்காக்கு ஆஸ்கர் கிடைப்பதற்கு தடையாக இருந்தது. பிரான்சின் திரைப்பட விமர்சகர்கள் ஹிட்ச்காக் படங்கள் குறித்து எழுதிய விமர்சனங்கள், அவரது படங்கள் மீதான பார்வையை மாற்றுகிறது.. குறிப்பாக விமர்சகரும், இயக்குநருமான பிரான்ஸ்வோ த்ரூபோ, ஹிட்ச்காக்கின் படங்கள் குறித்து முக்கியமான விமர்சனங்களை முன்வைத்தார். ஹிட்ச்காக்கின் படங்கள் வெறுமனே பார்வையாளர்களை பயமுறுத்துவதில்லை, குற்றத்தையும், அதன் சூழலையும், குற்றத்துக்குப் பிந்தைய குற்றவாளியின் மனநிலையையும் ஆராய்கிறது என்பதை விளக்கினார். ஹிட்ச்காக்குடன் த்ரூபோ மேற்கொண்ட திரைப்பட உரையாடல் மிகவும் புகழ்பெற்றது.
ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ குறித்து பேசுகையில், அதனை ஒரு முழுமையான திரைப்படம் என்கிறார் த்ரூபோ. ஒரு முழுமையான திரைப்படத்தில் இதுதான் சிறந்தது என்று இசையையோ, நடிப்பையோ இன்னபிறவற்றையோ சுட்ட முடியாது. இயக்குநர் சொல்லவரும் கருத்துக்கு இவை ஒத்திசைவாக இருக்க வேண்டும். சிறந்தவற்றைவிட பொருத்தமானவையே முழுமையான திரைப்படத்தை உருவாக்குகின்றன. அந்தவகையில் சைக்கோ ஒரு முழுமையான திரைப்படம்.
ஹிட்ச்காக் தீவிரமான கதைச்சொல்லி. பெட்ரோ அல்மதோவரைப் போன்று நெடிய காலங்களைக் கொண்ட, கிளை கிளையாகப் பிரிந்து செல்லும் விஸ்தீரணமான கதைச்சொல்லி அல்ல. அவரது பாணி வேறு. அதிகபட்சம் ஒரு நெடிய சம்பவமாக அவரது கதைகள் இருக்கும். சைக்கோ படத்தில் ஒரு இளம்பெண் பணத்தை திருடிச் செல்கிறாள். பாதி வழியில் கொல்லப்படுகிறாள். கொலை செய்தது யார் என்பதில் சந்தேகம். ஓரிரு நாள்களில் மர்மம் விலகிவிடுகிறது. ஒரேவாரத்தில் நடந்து முடிகிற கதை. பிளாஷ்பேக் கிடையாது. சைக்கோ என்றில்லை, பெரும்பாலும் எந்தப் படத்திலும்.
எனில், ஹிட்ச்காக்கை தீவிரமான கதைச்சொல்லி என்றது, அவர் கதை சொல்லும் முறையை வைத்து. கதை நடக்கும் இடத்தை, சூழலை பார்வையாளன் மனதில் பதியும் வகையில் படமாக்குவதில் ஹிட்ச்காக் நிபுணர். சைக்கோவில் பணத்தைத் திருடிச் செல்லும் மேரியன் கிரேனை போலீஸ்காரர் ஒருவர் பின்தொடர்வதை, கார் விற்பனை நிலையத்தில் மேரியன் கிரேனை அவர் மடக்க முயல்வதை, அத்தனை துல்லியமாக பிசிறின்றி காட்சிப்படுத்தியிருப்பார். யாருடைய கார் எங்கு நிற்கிறது, எங்கிருந்து எப்படி நகர்கிறது என்பதில் பார்வையாளனுக்கு குழப்பமே எழாது.
மேரியன் கிரேனின் சகோதரி நார்மன் பேட்ஸின் வீட்டில் ஒவ்வொரு அறையாக சோதனையிடுவதையும், திடீரென நார்மன் பேட்ஸ் வருகையில் அவள் மறைந்து கொள்வதையும், துண்டு துண்டு காட்சிகளாக்கி, பார்வையாளனை போலி பரபரப்புக்கு உட்படுத்தாமல், நேர, இட பிசகில்லாமல் காட்சிப்படுத்தியிருப்பார். இந்த அழுத்தமான தடுமாற்றமில்லாத நேர்த்தியே அவரை தீவிர கதைச்சொல்லியாக முன் வைக்கிறது.
திரைப்படத்தில் கூடுதல் தகவல்களை தருவதற்கு இயக்குநர்கள் பல்வேறு யுக்திகளை கையாள்வதுண்டு. உதாரணமாக, பழைய திரைப்படங்களில் நாயகன் வெளிநாடு செல்கிறார் என்றால், விமான நிலையத்துக்கு கிளம்புகையில், ‘பரிமளம், நான் மெடிக்கல் கான்பரன்ஸில் கலந்து கொள்ள அமெரிக்காப் போறேன், வர இரண்டு வாரங்கள் ஆகும், குழந்தைகளை கவனித்துக் கொள்’ என்பார். அமெரிக்கா செல்ல அழைப்பு வரும்போதே மனைவி பரிமளத்திடம் இதை சொல்ல மாட்டாரா? சொல்வார் என்பது இயக்குநருக்கு தெரியும். ஆனால், இரண்டரை மணிநேரத்தில் அவற்றையெல்லாம் வைக்க முடியாது. எந்த இடத்தில் ஆக்ஷன் சொல்கிறோமோ, அந்த இடத்தில் சுருக்கமாக விஷயத்தை பார்வையாளனுக்கு விளக்கிவிட வேண்டும். இப்போது வளர்ந்திருக்கிறோம். நாயகன் காரில் கிளம்பும்போது எதுவும் கூறுவதில்லை. அதற்குப் பதில், பரிமளத்தின் தோழி வந்து, 'எங்கடி உன் புருஷன் போகிறான்?' என்று கேட்க, பரிமளம் விஷயத்தை விளக்குவாள். ஒரு கதாபாத்திரத்தின் பின்புலத்தைச் சொல்ல, இந்த யுக்தியை வெட்டியும் ஒட்டியுமே இப்போதும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. ஹிட்ச்காக் இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்கிறார்?
சைக்கோவில் மேரியன் கிரேனுக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்பதுவரையே நமக்கு தெரியும். அவள் பணத்துடன் காரில் செல்கையில், பணம் காணாமல் போனதை அறிய நேரும்போது சம்பந்தப்பட்டவர்கள் என்னென்ன பேசிக் கொள்வார்கள் என்பது அவளது மனக்குரலாக பின்னணியில் ஒலிக்கும். மேரியன் கிரேனின் பதட்டத்தை தீவிரப்படுத்திக் காட்டும் காட்சி இது. அதேநேரம், மேரியன் கிரேனின் சகோதரியைப் பற்றியும், அவள் சார்ந்த நபர்கள் பற்றியும் கூடுதலான விவரங்களை ஹிட்ச்காக் பார்வையாளன் அறியாமலே அவன் மனதில் பதிய வைத்துவிடுகிறார். பிற படங்களில் வருவதைப் போன்று விவரத் திணிப்பாக இது தெரிவதில்லை.
ஹிட்ச்காக்கின் திரைப்படங்கள் நீண்ட ஆனால் எண்ணிக்கையில் குறைவான காட்சிகளை கொண்டவை. சைக்கோவை, மேரியன் கிரேன், அவளது காதலன் சேம் இருவரின் சந்திப்பு, மேரியன் கிரேனின் அலுவலகக் காட்சி, பணத்துடன் காரில் பயணிப்பது, பேட்ஸ் விடுதியில் தங்குதல் - கொல்லப்படுதல், தனியார் துப்பறிவாளனின் விசாரணை, மேரியன் கிரேனின் சகோதரி மற்றும் சேம் இருவரின் விசாரணை, மனநல மருத்துவரின் விளக்கம் என ஏழே பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம். இந்த ஏழில் முழுப்படமும் அடங்கிவிடும்.
பொதுவாக த்ரில்லர் படங்களை ஒருமுறை பார்த்து அதன் மர்ம முடிச்சுகள் தெரிய வந்த பிறகு அதனை இரண்டாவதுமுறை பார்ப்பது சலிப்பை தரும் அனுபவம். ஆனால், ஹிட்ச்காக்கின் படங்களை பலமுறை பார்த்தப் பிறகும் சுவாரஸியத்தை தக்க வைத்திருக்கும். இந்த மாயம் எவ்வாறு நிகழ்கிறது?
சாதாரண த்ரில்லர்களில் திருப்புமுனைக் காட்சிகளை நோக்கி பிற காட்சிகள் பாய்ந்து செல்வதாக அல்லது குறிப்புணர்த்துவதாக திரைக்கதை அமைக்கப்படும். அதனால், இயல்பாகவே அவை பலவீனமாகிவிடுகின்றன. முக்கிய காட்சியின் முடிச்சு அவிழும்போது, முந்தைய காட்சிகளும் சாயம் இழந்துவிடுகின்றன. உதாரணமாக ஒரு கதாபாத்திரம் அடுத்தக் காட்சியில் சாகப்போகிறது என்று வைத்துக்கொள்வோம். முந்தைய காட்சியில் அந்த கதாபாத்திரம் வீட்டிலிருந்து கிளம்புகையில், அதன் அம்மா கதாபாத்திரம், 'என்னப்பா, ஒருநாளும் இல்லாம அப்படி என்னைப் பார்க்கிற?' என்று சொல்லும். அப்போதே, அந்த கதாபாத்திரத்தின் கதை முடியப் போகிறது என்பது தெரிந்துவிடும். ‘பார்த்து போயிட்டு வாப்பா. இப்பயெல்லாம் கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஓட்டுறாங்க’ என்று அம்மா கதாபாத்திரம் சொல்லும்போது, மகன் கதாபாத்திரம், வண்டியில் அடிபட்டு சாகப்போகிறது என்பதுவரை தெரிந்துவிடும்.
அந்த கதாபாத்திரம் அடுத்தக் காட்சியில் அடிபட்டு சாகும்போது, பார்வையாளர்களுக்கு இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்திருந்தாலும், முதல்முறை படத்தைப் பார்க்கையில், நாம் நினைப்பது நடக்குமா என்ற எதிர்பார்ப்பும், அப்படி நடந்தால், நாம் நினைத்த மாதிரியே நடந்துவிட்டது என்ற பூரிப்பும் கிடைக்கும். ஆனால், அதே படத்தை மறுபடியும் பார்க்கும் போது, அம்மா கதாபாத்திரம், முதல் வசனத்தை சொல்லும் போதே, மகன் கதாபாத்திரம் அடிபட்டு சாவதுவரை அனைத்தும் பார்வையாளனின் மனதில் நொடியில் வந்து போகும். அதன் பிறகு - சில நொடியோ இல்லை பல நிமிடங்களோ - அந்த கதாபாத்திரம் சாகிறவரை அவன் ‘தேமே’ என்று படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
இந்தத் தவறை, ஹிட்ச்காக் செய்வதில்லை. ஒவ்வொரு காட்சியுமே அவருக்கு முக்கியம். மேலும் திருப்புமுனைக் காட்சியை குறிப்புணத்துவது போன்றோ அல்லது திருப்புமுனைக் காட்சிகளை நோக்கி முந்தையக் காட்சிகள் பாய்ந்து செல்வது போன்றோ அவர் காட்சிகளை அமைப்பதில்லை. வாழ்க்கையில் திடீரென சம்பவங்கள் நடப்பது போல்தான் அமைக்கப்படும். சைக்கோ திரைப்படத்தில் நாயகி மேரியன் கிரேன் கொலை செய்யப்படுவதே கதையின் மையம். அந்தக் காட்சிக்கு முந்தையக் காட்சியில் மேரியன் கிரேனும், நார்மன் பேட்ஸும் பேசிக் கொண்டிருப்பார்கள். இரண்டு வெவ்வேறு உலகங்கள் பேசிக் கொள்வது போலிருக்கும் அந்த உரையாடல். இரண்டு பேரின் குணாம்சமும் அந்தப் பேச்சில் வெளிப்படும். ஒருகட்டத்தில், திருடிய பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் முடிவை மேரியன் கிரேன் எடுக்கும் அளவுக்கு அழுத்தமானதாக அந்த உரையாடல் அமைக்கப்பட்டிருக்கும்.
அடுத்து நடக்கப் போகும் கொலைக்கான சிறு தடயத்தைக்கூட அதில் பார்க்க முடியாது. அதேபோல் நார்மன் பேட்ஸ் யார் என்பதையும், அவனது மனக்கோளாறின் தன்மையையும் அவனது பேச்சில் கோடிட்டு காட்டியிருப்பார். சைக்கோவை எத்தனைமுறை பார்த்தாலும், இந்தக் காட்சியைப் பார்க்கையில் பார்வையாளனின் மனம் இதில் ஒன்றுமே தவிர, அடுத்தக் காட்சியை நோக்கி தாவாது. காரணம் நாயகி கொலை செய்யப்படும் அதிர்ச்சிக்கு இணையானது, அவளும், நார்மனும் பேசிக் கொள்ளும் இடம்.
காட்சிகளைப் போலவே இசையிலும், ஹிட்ச்காக்கின் அணுகுமுறை கவனிக்கத்தக்கது.. அசம்பாவிதம் நடக்கப் போவதற்கு முன்னால், அப்படியொன்று நடக்கப் போவதாக முன்னறிவிக்கும் இசை ஹிட்ச்காக்கின் படங்களில் இருப்பதில்லை. உதாரணமாக, சைக்கோவில் மேரியன் கிரேன் குளிக்கையில் அவள் பின்னால் கத்தியுடன் ஒரு நிழலுருவம் தெரிகிறது. சாதாரண த்ரில்லராக இருந்தால், உருவம் தெரிவதற்கு முன்பே இசைக்கருவிகள் அலறத் தொடங்கும். ஆனால், சைக்கோவில் கத்தியால் குத்தப்படும் அசம்பாவிதம் நிகழும் போது மட்டுமே உச்ச ஸ்தாயியில் வயலின் இசைக்கப்படும்.
அதே போல் கதை சொல்வதற்கு இசையை ஹிட்ச்காக் இசையைப் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக ஒரு துக்ககரமான செய்தி போனில் சொல்லப்படுகிறது என்றால்,. சம்பந்தப்பட்ட நபர் ரிஸீவரை எடுக்கும் போதே பின்னணியில் வயலின் வாசிக்க ஆரம்பித்துவிடும். செய்தியை சொல்லாமலே அவர் கேட்கப்போவது துக்கச் செய்தி என்பதை இசை முன்னறிவித்துவிடும். ஹிட்ச்காக்கின் படங்களில் இசையானது இப்படி யானை மணியோசையாக விடைத்துக் கொள்வதில்லை.
இரண்டு காட்சிகளை இணைக்க, வசனமில்லாத மான்டேஜ் காட்சிகளை நகர்த்த ஹிட்ச்காக் இசையை பயன்படுத்துகிறார். இதைத் தவிர கதாபாத்திரத்தின், காட்சியின் தன்மையை பிரதிபலிக்கவும், அதன் அழுத்தத்தை கூட்டவும் இசையை பயன்படுத்துகிறார். மேரியன் கிரேன் காரில் வருகையில் வெளியே பெய்யும் பெருமழைக்கேற்ப இசையும் பீறிடுகிறது. மேரியன் கிரேனுக்கு திருட்டு புதிது. அதுதான் முதல்முறை. அவள் பதற்றத்தில் இருக்கிறாள். அடுத்து என்ன நடக்கும் என்ற பயம் அவளை அலைக்கழிக்கிறது. அந்த மனப்போராட்டத்தை இசை வெளிப்படுத்துகிறது. மேரியன் கிரேனின் பிணத்தை நார்மன் பேட்ஸ் சதுப்புநில குட்டையில் மூழ்கடிக்கும் காட்சி ஏறக்குறைய ஒரு நிமிடம் வருகிறது. இரவில் தனிமையில் கார் மூழ்குவதை பேட்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தக் காட்சியில் இசையே இல்லை. நார்மன் ஏற்கனவே தாயையும், அவளது காதலனையும் கொன்றவன். இரண்டு இளம் பெண்களையும் கொலை செய்திருக்கிறான். இப்போதும்கூட தாயின் கொலையை மறைக்க, ஒரு மகனாக தன் கடமையைச் செய்கிறான். ஆகவே அவனுக்கு பயமில்லை. பதட்டமோ, குற்றவுணர்வோ இல்லை. முந்தையக் காட்சியில் மேரியன் கிரேனின் மனதை இசை எப்படி பிரதிபலித்ததோ, அதேபோல் இசையில்லாத மவுனம் நார்மனின் மனதை பிரதிபலிக்கிறது.
ஜிம்மி ஜிப் போன்ற நவீன உபகரணங்கள் இல்லாத காலத்தில் ஒளிப்பதிவில் ஹிட்ச்காக் பல சாதனைகள் புரிந்துள்ளார். சைக்கோவின் அறிமுகக் காட்சியில் கேமரா வெளியிலிருந்து உயரமான ஜன்னல் வழியாக அறைக்குள் நுழையும். ஒரே ஷாட்டில் அந்தக் காட்சியை எடுப்பதற்கான உபகரணங்கள் அன்று இல்லை. ஜன்னலின் சிறு இடைவெளி வழியாக கேமரா அறைக்குள் நுழையும் தருணத்தில் ஏற்படும் இருளை சாதகமாக்கி இரு ஷாட்களை இணைத்து அதனை ஒரே ஷாட்டாக உணரும்படி அமைத்திருப்பார். இதே யுக்தியை நார்மன் பேட்ஸ், பதப்படுத்தப்பட்ட தனது தாயின் சடலத்தை கையில் தூக்கிவரும் காட்சியில் பயன்படுத்தியிருப்பார். அதில் படியேறிவரும் கேமரா, அப்படியே மேலே டாப் ஆங்கிளுக்கு சென்று நின்று கொள்ளும். நார்மன் பேட்ஸின் கையில் இருப்பது சடலம் என்று பார்வையாளர்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக இந்தக் கோணத்தை அவர் தேர்வு செய்திருப்பார். இரண்டு ஷாட்கள் ஒட்ட வைக்கப்பட்டது இதிலும் தெரிவதில்லை. அதேபோல் ஷவரிலிருந்து நேராக கேமராவை நோக்கி நீர் கொட்டுவதை சில விநாடிகள் காட்டியிருப்பார். ஆனால், கேமராவில் நீர்த்திவலைகள் விழுவதில்லை. கதைக்கும், காட்சிக்கும் தேவையான ஒளிப்பதிவிற்கு அதிகம் மெனக்கெடுகிறவர், வித்தியாசமாக காண்பிக்கிறேன் என சிடுக்கான கேமரா கோணங்களையோ, நகர்வுகளையோ, ஆர்ப்பாட்டமான ஒளி அமைப்புகளையோ அனுமதிப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரபல இயக்குநர் முர்னேயின் படத்தில் ஹிட்ச்காக் கலை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். கலை இயக்கம் குறித்த விழிப்புநிலையை அவரது திரைப்படங்களில் காணலாம். சைக்கோவில் வரும் மோட்டலும், அதையொட்டிய நார்மன் பேட்ஸின் வீடும், திரையில் வரும்போதே பார்வையாளனின் மனதில் அமானுஷ்யத்தை உணரவைக்கும். அந்த மோட்டலையும், வீட்டையும் பெரும் தேடலுக்குப் பிறகே ஹிட்ச்காக் கண்டுபிடித்திருக்கிறார்.
தனது படங்களுக்கான கதையை ஹிட்ச்காக் பெரும்பாலும் நாவல்களிலிருந்தே எடுத்துக் கொண்டார். சைக்கோவும் ராபர்ட் ப்ளோச் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டதே. படத்தின் திரைக்கதையை எழுதிய பின் தனது கற்பனையில் காட்சிகளை விரிவாக ஓடவிடுகிறவர், படப்பிடிப்பின் போது ஸ்கிரிப்டையே பார்ப்பதில்லை என பேட்டி ஒன்றில் குறிப்பிடுகிறார்.
ஹிட்ச்காக்கினுடையது கறாரான கத்தோலிக்க குடும்பம். கத்தோலிக்கப் பள்ளியின் தீவிர கண்காணிப்பில் கழிந்தது அவரது பள்ளிப்பருவம். சுதந்திரத்தைவிட எளிதாக கிடைப்பதாக இருந்தன தண்டனைகள். குற்றத்தைப் பொறுத்து தண்டனைகள் மாறுபடும். சில நேரம் துண்டுச் சீட்டுடன் பக்கத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு ஹிட்ச்காக் அவரது தந்தையால் அனுப்பப்படுவார். அந்தச் சீட்டில், பத்து நிமிடம் ஹிட்ச்காக்கை லாக்கப்பில் அடைக்கும்படி குறிப்பு எழுதப்பட்டிருக்கும். பயத்தை கிளறும் இந்தத் தண்டனைகளின் பாதிப்பை ஹிட்ச்காக்கின் படங்களில் காணலாம்.
ஹிட்ச்காக்கின் படங்களைப் பார்த்து பார்வையாளன் அதன் காட்சிகளுக்கேற்ப உணர்ச்சிப்படுவதில்லை. மாறாக அவர்கள் எப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆள்பட வேண்டும் என்பதை தீர்மானித்தே ஹிட்ச்காக் காட்சிகளை அமைக்கிறார். உதாரணமாக, இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் நடுவில் இருக்கும் மேஜை திடீரென வெடித்தால், பார்வையாளர்கள் அதிர்ச்சியடைவார்கள். ஆனால், அந்த அதிர்ச்சி, குண்டு வெடிக்கும் அந்தகணம் மட்டுமே இருக்கும். மாறாக மேஜைக்கடியில் குண்டு இருப்பதை முன்பே பார்வையாளர்களுக்கு காண்பித்தால், அந்த கணத்திலிருந்தே, குண்டு எப்போது வெடிக்குமோ என்று பார்வையாளர்கள் பதட்டப்பட ஆரம்பிப்பார்கள். இதன்மூலம் பார்வையாளர்களின் பதட்டத்தை பல நொடிகள் நீட்டிக்க முடியும் என்கிறார் ஹிட்ச்காக். அவர் ஒவ்வொரு காட்சியையும் இப்படி திட்டமிட்டே அமைக்கிறார். அதன்படி பார்வையார்களை தான் விரும்பும் திசையில் வழி நடத்துகிறார். ஒரு பொம்மையைப் போல அவர்களை கையாள்கிறார்.
ஐம்பதுகளை ஹிட்ச்காக்கின் காலம் எனலாம். அவரின் சிறந்த படங்கள் இந்த காலகட்டத்தில் வரிசையாக வெளியாயின. 'ஸ்டேஜ் ப்ரைட்', 'ஸ்ட்ரேன்ஜர்ஸ் ஆன் ஏ ட்ரெய்ன்', 'டயல் எம் ஃபார் மர்டர்', 'ரியர் விண்டோ', 'டூ கேட்ச் ஏ தீஃப்', 'தி ராங் மேன்', 'வெர்டிகோ', 'நார்த் பை நார்த் வெஸ்ட்' ஆகிய படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸை கலகலக்க வைத்தன. 1976 இல் வெளிவந்த 'பேமிலி பிளாட்' திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படம். அதன் பிறகு, 'தி ஷார்ட் நைட்' என்ற படத்தை இயக்க அவர் மேற்கொண்ட முயற்சி உடல்நிலைக் காரணமாக ஆரம்பத்திலேயே நின்றது. 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி உடல்நலக்குறைவால், ஹிட்ச்காக் மறைந்தார்.
‘லாட்ஜர்’ திரைப்படத்திலிருந்து, தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது ஒரு காட்சியில் தோன்றுவதை வழக்கமாக கொண்டிருந்த ஹிட்ச்காக், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை, அவர் எந்தக் காட்சியில் தோன்றுவார் என ஆர்வமாக கவனிக்க வைத்தார். அவர் மறைந்தாலும், இன்று எடுக்கப்படும் சஸ்பென்ஸ் த்ரில்லர் களில் ஏதேனும் ஒருவகையில் அவர் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறார்.
-கட்டுரையாளர் ஜான் பாபுராஜ்
தொடர்புக்கு: johnbaburaj74@gmail.com
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago