மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!  

By வி. ராம்ஜி

முதல் படத்திலேயே சிறுவன் கமலுக்கு பாட்டு கொடுக்கப்பட்டது. சிறுவர் சிறுமி பாடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு பின்னணி பாடுவது பாடகியராகத்தான் இருக்கும். 1959ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளியான கமலின் முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில், சிறுவன் கமல், ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடலுக்கு வாயசைக்க... அந்தப் பாடலை, எம்.எஸ்.ராஜேஸ்வரி அழகாக, மழலைத் தனத்துடன் பாடியிருப்பார். அப்போது... நாமே பாடப் போகிறோம். ஒரு பாடகரைப் போல் கலக்கப் போகிறோம் என்று கமலே கூட நினைத்திருக்க மாட்டார்.

59ம் ஆண்டில் திரைத்துறைக்கு வந்த கமலுக்கு 75ம் ஆண்டு முக்கியமான ஆண்டானது. அப்போது கமலுக்கு 21 வயது. திரையுலகிற்கு வந்து 16 வருடங்கள். முக்தா சீனிவாசன் இயக்கத்தில், மேஜர் சுந்தர்ராஜன், சாவித்திரி தீபாவுடன் நடித்தார் கமல். தீபாவுக்கு இதுதான் முதல் படம். 59ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ‘களத்தூர் கண்ணம்மா’வில் அறிமுகமான நடிகர் கமல், 75ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 12ம் தேதி ‘அந்தரங்கம்’ படத்தில், பாடகராகவும் அறிமுகமானார். நேதாஜி எழுதிய ‘ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்’ பாடல் தனித்துவமாக இருந்தது. அந்தக் குரலின் வசீகரம் பாடலை இன்றுவரைக்கும் பிரபலப்படுத்தியிருக்கிறது. ஜி.தேவராஜன் இசையமைத்திருந்தார்.

இதன் பிறகு, வரிசையாக படங்களில் நடித்தாலும் பாடல்களின் பக்கம் செல்லவில்லை கமல். தவிர, இந்தக் காலகட்டங்களில்தான், எஸ்.பி.பி.யின் குரல் கமலுக்கு மிகவும் பாந்தமாகிப்போயிருந்தது. கமலுக்கு இவர் பாடிய ‘உன்னை நான் பார்த்தது’, ’கடவுள் அமைத்து வைத்த மேடை’, ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ என்றெல்லாம் பாடல்கள் கமல் - எஸ்.பி.பி. கூட்டணிக்கு கட்டியம் கூறும் வகையில் இருந்தன; வாகை சூடின.

78ம் ஆண்டு (அக்டோபர் 10ம் தேதி), கமலுக்கு இன்னொரு வகையில் மிக முக்கியமான ஆண்டானது. பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜாவின் இசையில், ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் நடித்தார் கமல். இந்தப் படத்தில் இரண்டே பாடல்கள். ஒரு பாடலை மலேசியா வாசுதேவன் பாடினார். ‘இந்த மின்மினிக்கு கண்ணிலொரு மின்னல் வந்தது’ பாடல் வெற்றி பெற்றது. இன்னொரு பாடல்... இதை விட மும்மடங்கு வெற்றியைப் பெற்றது. அது... ‘நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை’. கமல் பாடிய இந்தப் பாடலும் குறிப்பாக அந்த ஹம்மிங்கும் தேர்ந்த பாடகர் என்று ரசிகர்களை உணரவைத்தன.

அதே 78ம் ஆண்டு. அக்டோபர் 30ம் தேதி, ‘அவள் அப்படித்தான்’ வெளியானது. கமலும் ரஜினியும் ஸ்ரீப்ரியாவும் நடித்தார்கள். ருத்ரய்யா இயக்கினார். இளையராஜா இசையமைத்தார். இந்தப் படத்தில் ‘பன்னீர் புஷ்பங்களே’ எனும் கங்கை அமரனின் பாடலை கமல் பாடினார். குறைந்த இசைக்கருவிகளுடன் அமைந்துள்ள இந்தப் பாடலைப் பாடுவது சிரமம் என்று, கச்சேரிகளில் அப்போதெல்லாம் பாடுவதைத் தவிர்த்துவிடுவார்கள். இந்த இரண்டு பாடல்களும் அந்த வருடத்தில் வந்த பாடல்களில் தனித்துவம் மிக்க பாடல்களாகின.

பிறகு 80ம் ஆண்டு. சிறுவனாக ‘களத்தூர் கண்ணம்மா’வில் கமல் நடித்தார் அல்லவா. அதில் கமலுடன் இன்னொரு சிறுவன் நடித்தார். பின்னாளில், ஏ.பி.நாகராஜன் முதலானோருடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். பின்னர், படங்களை இயக்கினார். அவர்... தசரதன். இயக்குநர் தசரதனின் நட்புக்காக, மனோரமா மகன் பூபதி முதலானோர் பாடுகிற பாடலை கமல் பாடிக்கொடுத்தார். ‘அண்ணா வாடா தம்பி வாடா சொன்னாக்கேளுடா’ என்கிற பாடலை சந்திரபோஸ் இசையில் கமல் பாடினார். முதன்முதலாக, கமல் வேறொரு நடிகர்களுக்குப் பாடிய பாடல் அதுவாகத்தான் இருக்கும்.

இதன் பின்னர், திரும்பவும் இடைவெளி. 82ம் ஆண்டு, பாலுமகேந்திராவின் இயக்கத்தில் இளையராஜா இசையில் கமல் ஒரு பாடலைப் பாடினார். அது கதை சொல்லும் பாட்டு. ஒரு கதையை, நாடக பாணியில் கமல் நடித்து, ஆடி, விழுந்து, தாவியபடி பாடுகிற பாட்டு.’முன்னுமொரு காலத்துல முருங்கைமரக் காட்டுக்குள்ளே’ என்ற அந்தப் பாடல், கமலின் குரலில் அவ்வளவு யதார்த்தமாக வந்திருந்தது. ஸ்ரீதேவிக்கு கதை சொல்லும் பாட்டு இது.

மோகன் நடித்து, ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் ’ஓ மானே மானே...’ என்ற படம் வந்தது. இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தில், ‘பொன்மானைத் தேடுதே என் வீணை பாடுதே’ என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார் கமல். இதேபோல், ஆர்.சி.சக்தி இயக்கத்தில் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்திருந்தாலும் கமல் கெஸ்ட் ரோல்தான். கமலுக்கு மனைவி சத்யப்ரியா. இதிலும் ஒரு பாடலைப் பாடினார்.

ஹாசன் புரொடக்‌ஷன்ஸ் என்ற கம்பெனியைத் தொடங்கி, ‘ராஜபார்வை’ தயாரித்தார். ’விழியோரத்துக் கனவு’ என்றொரு பாடலைப் பாடினார். பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற கம்பெனியைத் தொடங்கி, ‘விக்ரம்’ படம் தயாரித்தார். இதில், டைட்டில் பாடல் ‘விக்ரம்...நான் வெற்றி பெற்றவன்’ என்ற பாடலைப் பாடினார். ஹைபிட்ச் பாடல் இது. பாடலை ரசித்தவர்கள்தான் அதிகம். முணுமுணுத்தவர்கள் குறைவு. ‘வனிதா மணி வன மோகினி’ பாடலை எஸ்.பி.பி. பாடினார். ஆனாலும் முதலில் வரும் தொகையறாவை, ‘கண்ணே... கட்டிக்கவா ஒட்டிக்கவா’ என்பதை கமல் பாடியிருந்தார்.

இதன் பிறகுதான், கமல் அதிக அளவில் பாடத்தொடங்கினார். ‘நாயகன்’ படத்தின் ‘தென் பாண்டிச்சீமையிலேயும், ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் ‘ராஜா கையவைச்சா’வும் ஆகச்சிறந்த பாடகராகவும் கமலை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன. ‘கலைஞன்’ படத்தின் ‘கொக்கரக்கோ கோழி’யும் அப்படியொரு தொடமுடியாத உச்சஸ்தாயியிகளைக் கொண்ட பாடல். ஏவிஎம்மின் ‘பேர் சொல்லும் பிள்ளை’யில், ‘அம்மம்மா வந்ததிந்த சிங்கக்குட்டி’ ஏழு நிமிடப் பாடல் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. படம் ஆரம்பித்த உடனேயே வருகிற இந்தப் பாடலும் பாடிய விதமும் பாடலுக்கு கமலின் நடனமும் அப்போது ரொம்பவே பேசப்பட்டது.

‘அவ்வை சண்முகி’யில் மாமியாக, பெண்ணாக நடித்தது மட்டுமா? ‘ருக்கு ருக்கு ருக்கு’ என்று தேவாவின் இசையில், பெண் குரலிலும் பாடி அசத்தினார் கமல்.

‘தேவர் மகன்’ படத்தில், ‘இஞ்சி இடுப்பழகி’யும் ‘மகாநதி’யில் ‘எங்கேயோ திக்குத்திசை’ என்பது உள்ளிட்ட பாடல்களும் நம்மை இன்னும் என்னவோ செய்துகொண்டிருக்கின்றன. ‘பேய்களா பூதமா ஆவியா அலையுதா?’ என்ற பாடல் நம்மையும் குழந்தையாகவோ அல்லது குழந்தையைக் கொஞ்சி விளையாடுகிற தகப்பனாகவோ ஆக்கிவிடும். ’தேவர் மகன்’ படத்தில் ‘சாந்து பொட்டு சந்தனப்பொட்டு’ என்று எஸ்.பி.பி. பாடியிருப்பார். ‘விக்ரம்’ படம் போலவே, ‘கம்பு சாத்திரம் தெரியும்’ என்று பாடலின் நடுவே கமல் பாடுவார்.

கமலுக்கு மெட்ராஸ் பாஷை புதிதில்லை. பொளந்துகட்டுவார். சென்னை பாஷையில் கமல் நடித்த படங்கள் அப்போதே உண்டு. கே.பாலாஜியின் தயாரிப்பில், ‘சவால்’ படத்தில் ’தண்ணியப் போட்டா சந்தோஷம் பிறக்கும்’ என்றொரு பாடலை எம்.எஸ்.வி. இசையில் பாடியிருப்பார். பின்னாளில், ‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தில் ‘கந்தசாமி ராமசாமி’ என்ற பாடலையும் ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ‘ஆழ்வார்பேட்டை ஆளுடா’ பாடலையும் சென்னை பாஷையில் தனக்கே உரிய பாணியில் பாடியிருப்பார் கமல். ’சிங்கார வேலனில்’, ‘சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே’ பாடலில் விளையாடியிருப்பார்.

‘ஹேராம்’ படத்தின் ஆரம்பப் பாடலை எவரும் பாடுவதற்கு நினைக்கக்கூட முடியாது. ‘ராம் ராம் சாகேத்ராம் ராம்’ என்று பாட்டு முழுவதும் கனம் கூடியிருக்கும். ஒவ்வொரு வரிகளிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். ஸ்ருதிஹாசன் இசையமைத்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் பாடல்களே இல்லை. ஒரேயொரு பாடல். அந்தப் பாடலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். இஸ்லாமிய வரிகளையும் தொழுகைக்கு ஓதுகிற ‘பாங்க்’கையுமாகச் சேர்த்து பிரமாதமாகப் பாடியிருப்பார்.

’அன்பே சிவம்’ படத்தில் மட்டும் என்ன? வித்யாசாகர் இசையில், ‘யார் யார் சிவம்?’ என்ற பாடலும் ‘தென் பாண்டிச்சீமையிலே’ போல நம்மை உள்ளுக்குள் கொண்டு செல்லும். ஊடுருவும் பாடல். ’ஏலே மச்சி மச்சி, தலை சுத்தி சுத்தி’ என்று உதித் நாராயணனுடன் சேர்ந்து பாடியிருப்பார் கமல். இதேபோலத்தான் ‘காதலா காதலா’வில்... ‘காசு மேல காசு வந்து கொட்டுகிற வேளை இது’ என்ற பாடலில் இருவரும் பாடினார்கள். இதிலும் சென்னை பாஷை. இந்தப் படத்தில் ‘மடோனா மாடலா நீ’ என்ற பாடல் உச்சஸ்தாயி வகைதான். ‘அன்பே சிவம்’ படத்தில், ’நாட்டுக்கொரு சேதி சொல்ல நாகரீகக் கோமாளி வந்தேனுங்க’ என்ற பாடலில் கமலின் குரல் இசை போகிற இடங்களுக்குத் தக்கபடி பயணிக்கும். பாடலின் தொடக்கத்தில், ‘ஙே..ஙே... ஙே..’ என்று இழுப்பார். அதிலே ஜாலம் காட்டியிருக்கும் கமலின் குரல்.

‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் ‘சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்’ பாடல், அவரின் பாட்டு லிஸ்டில் புது உச்சம் தொட்ட பாடல். கே.ஜே.ஜேசுதாஸைப் பாடவைப்பதாக இருந்து, பிறகு இளையராஜா, ‘நீங்களே பாடிருங்க’ என்று கமலைச் சொல்லி பாடவைத்தாராம். பாடலில்... ‘நீ... நீ...... ‘என்று ஒரு சங்கதி போட்டிருப்பார்.

மனோரமா மகன் பூபதிக்குப் பாடியது போல், மோகனுக்குப் பாடியது போல், அஜித் நடித்த ‘உல்லாசம்’ படத்தில் ‘முத்தே முத்தம்மா’ பாடலை கார்த்திக் ராஜா இசையில் பாடினார் கமல்.

‘அவ்வை சண்முகி’யில் பெண்குரலில் பாடியது போலவே, ‘தசாவதாரம்’ படத்தில், ‘முகுந்தா முகுந்தா’ பாடலில் பாட்டிக் கமல் பாடுவது புதுச்சுவையுடன் ரகளையாக அமைந்திருந்தது. ‘தெனாலி’யில், இலங்கைத் தமிழில் பேசி நடித்ததுடன், ‘ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சு’ உள்ளிட்ட பாடல்களை கமல் பாடியிருப்பார். ‘இஞ்சாருங்கோ’ பாடல் அந்தக் காலத்து குத்துப்பாடல். ‘ஓ ஜாரே...’ என்று சொல்லும்போதே ஆடத்தூண்டும். இன்னும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். ‘சதி லீலாவதி’யின் ‘மாறுகோ மாறுகோ மாறுகயீ’ என்ற பாடல் உட்பட பல பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

’மன்மதன் அம்பு’ படப் பாடலும் உச்சஸ்தாயி ரகம். இப்படி கமல் நடிப்பிலும் உச்சஸ்தாயி ரகம்தான். பாடலிலும் அவ்விதம்தான்! ’ராமரானாலும் பாபரானாலும்’, ‘சிரிசிரிசிரி... சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர்’ என்பன உள்ளிட்ட எத்தனையோ பாடல்கள்... கமலின் முத்திரைப் பாடல்களாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

கமல் நடிகர் மட்டும் அல்ல... பாடகரும் கூட. பன்முகக் கலைஞரும் கூட! அதனால்தான் அவர். சகலகலாவல்லவன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE