இசையமைப்பாளர் ஜிப்ரான் பிறந்தநாள் ஸ்பெஷல்: இசையின் உன்னதத்தை உணரவைத்த கலைஞர் 

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளில் அறிமுகமான கலைஞர்களில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவரும் ரசிகர்கள் பலரின் மரியாதையையும் அன்பையும் பெற்றிருப்பவருமான இசையமைப்பாளர் ஜிப்ரான் இன்று (ஆகஸ்ட் 12) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்திய சினிமாவில் சாதனைகளைப் படைத்த எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் நீண்ட நெடுங்காலம் இசைத் துறையில் தனி சாம்ராஜ்யம் நடத்தியிருக்கிறார்கள். சிலர் குறுகிய காலத்துக்கு மட்டும் திரை இசை ரசிகர்களின் மனங்களை ஆண்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் வெகு சிலரே இசை குறித்த அணுகுமுறை, ஒலிகள், பாடலமைப்பு, இசைக் கருவிகள், சந்தம்,மெட்டு, தாளம், கருவிகளின் வரிசை, பயன்பாடு என அனைத்து வகையிலும் புதுமையைப் புகுத்தி ரசிகர்களின் இசை ரசனைக்கே ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜிப்ரான். இந்த ஒரு காரணத்துக்காகவே திரைப்படங்களின் எண்ணிக்கை. முன்னணியில் இருந்த காலம் ஆகியவற்றைத் தாண்டி தமிழ் சினிமா வரலாற்றில் ஜிப்ரானுக்கு தவிர்க்க முடியாத இடத்தை அளித்தாக வேண்டும்.

விருதுகளைக் குவித்த முதல் படம்

சற்குணம் இயக்கத்தில் 2011-ல் 'வாகை சூட வா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத் துறைக்கு அறிமுகமானார் ஜிப்ரான். லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றவரான ஜிப்ரான் திரைத் துறைக்கு வருவதற்கு முன் அனிமேஷன் நிறுவனங்களிலும் ஊடக நிறுவனங்களிலும் இசையமைப்பாளராகப் பணியாற்றினார். இது தவிர தன் சொந்த ஸ்டூடியோவை நிறுவி 700-க்கு மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்தார்.

'வாகை சூட வா' திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. பாடல்களே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன. 'போறானே போறானே', 'சர சர சாரக் காத்து' ஆகிய இரண்டு பாடல்களும் இசை ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இன்றும் இருக்கின்றன. தேசிய விருதைப் பெற்ற அந்தப் படத்தில் ஜிப்ரானுக்கு பல்வேறு தனியார் விருதுகள் கிடைத்தன. இது தவிர பாடகர்கள் பாடலாசிரியர்களுக்கும் விருதுகள் கிடைத்தன. இளையராஜாவுக்கு 'அன்னக்கிளி', ஏ.ஆர்.ரகுமானுக்கு 'ரோஜா' போல் ஜிப்ரானுக்கும் முதல் படமே முத்தான படமாக அமைந்துவிட்டது.

உன்னத உணர்வை அளித்த காதல் பாடல்

அடுத்ததாக சற்குணம் இயக்கத்தில் 2013-ல் வெளியான 'நையாண்டி' படத்திலும் சிறப்பான பாடல்களை அளித்திருந்தார் ஜிப்ரான். குறிப்பாக 'இனிக்க இனிக்க' பாடல் எப்போது கேட்டாலும் மனதை உருக்கும் காதல் மெலடி. அந்தப் பாடலின் மெட்டும் இசைக் கருவிகளின் ஏற்பாடும் குரலும் என அனைத்தும் சேர்ந்து உன்னதமான உணர்வை அளிக்கும் வகையில் அமைந்த பாடல்.

2014-ல் வெளியான 'திருமணம் என்னும் நிக்கா' படத்துக்கு ஜிப்ரான் அமைத்திருந்த அனைத்துப் பாடல்களும் இசை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைவருமே அந்தப் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டனர். பாடல்களே படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தன. 'கண்ணுக்குள் பொத்தி வைத்தேன் என் செல்லக் கண்ணனே' வா என்னும் கர்நாடக இசை பாணியில் அமைந்த பாடல் அனைவரையும் கொள்ளைகொண்டது. 'என் தாரா என் தாரா' பாடலும் மிகப் பரவலான ரசிகர்களை ஈர்த்தது. அதே ஆண்டில் வெளியான 'அமர காவியம்' படத்திலும் 'தேவ தேவதை' உள்ளிட்ட அருமையான பாடல்கள் அமைந்திருந்தன.

தனிப் பார்வையும் பாணியும்

இந்தப் படங்கள் மூலம் ஜிப்ரான் என்பவர் வெற்றிபெறும் பாடல்கள் பொருத்தமான பின்னணி இசையைக் கொடுக்கும் இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி அவருடைய பாடல்களின் வெற்றி தற்காலிகமானவை அல்ல எத்தனை ஆண்டுகளானாலும் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடிப்பவை என்பது உறுதியானது. அது மட்டுமல்ல அவருக்கென்று ஒரு தனித்துவமான இசைப் பார்வையும் பாணியும் இருக்கிறது என்பதும் அதனால்தான் அவரால் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைக் கொடுக்க முடிகிறது என்பதை உணர முடிந்தது.

கமலுடன் தொடர் பயணம்

அசலான திறமையாளர்களைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள விரும்பும் கமல் ஹாசன் ஜிப்ரானை தன்னுடைய நெடுங்கால சக பயணியாக இருக்கத்தக்கவராக அடையாளம் கண்டுகொண்டார். மற்றவர்கள் அவருடைய பாடல்களை வியந்துகொண்டிருக்க ஜிப்ரானின் அபாரமான பின்னணி இசைத் திறனையும் கமல் உணர்ந்துகொண்டார். அதனால் 'விஸ்வரூபம் 2' படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்தார்.

அந்தப் படம் வெளியாக மிகத் தாமதமானாலும் இடையில் 'உத்தம வில்லன்', 'பாபநாசம்', 'தூங்காவனம்' என மூன்று கமல் படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்துவிட்டார். இளையராஜாவுக்குப் பிறகு கமல் தொடர்ச்சியாக நான்கு படங்களுக்கு இணைந்து பணியாற்றியது ஜிப்ரானுடன்தான். இந்த நான்கு படங்களிலும் ஜிப்ரானின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. 'பாபாநாசம்', 'உத்தம வில்லன்' படங்களில் தரமான பாடல்களும் அமைந்திருந்தன.

இவற்றுக்கிடையில் ஹெச்.வினோத்தின் 'தீரன் அதிகாரம் ஒன்று', கோபி நாயினாரின் 'அறம்' ஆகிய வணிக ரீதியான வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் குவித்த படங்களுக்கும் ஜிப்ரான் இசையமைத்தார். தெலுங்கு படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்தார்.

தரத்தை உயர்த்திய தீம் இசை

2018-ல் வெளியாகி தமிழ் சினிமாவின் தலை சிறந்த சைக்கோ-த்ரில்லர் படங்களில் ஒன்று என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட 'ராட்சசன்' படத்துக்கு ஜிப்ரானின் பின்னணி இசை மிகப் பெரும் பலமாக அமைந்திருந்தது. படத்துக்குத் தேவையான திகில் மற்றும் த்ரில் அனுபவத்தைப் பன்மடங்கு அதிகரிப்பதாக அவருடைய பின்னணி இசை அமைந்திருந்தது.

குறிப்பாக வில்லனுக்கான 'ராட்சசன் தீம்' மற்றும் ;'ராட்சசன் பியானோ தீம்' (படத்தில் கொலைகாரரன வில்லன் ஒரு பியானோ கலைஞர். ஜிப்ரான் பியானோ கருவியை இசைப்பதில் முறையாக பட்டம் பெற்றவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது) தமிழ் சினிமா வரலாற்றின் ஆகச் சிறந்த இசைக் கோர்வைகளின் பட்டியலில் அனாயாசமாக இடம்பிடிக்கத்தக்கவை.

கடந்த ஆண்டு தெலுங்கு, இந்தி, தமிழ் என மும்மொழிகளில் வெளியான பிரம்மாண்டப் படைப்பான 'சாஹோ'. படத்தின் பாராட்டுக்குரிய அம்சங்களில் ஒன்றாக ஜிப்ரானின் பின்னணி இசை அமைந்திருந்தது.

தவிர்க்க முடியாத கலைஞர்

கடந்த பத்தாண்டுகளில் அனைத்து மொழிகளையும் சேர்த்து சுமார் 35 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இன்னும் நிறைய திறமையான இயக்குநர்கள். நட்சத்திர நடிகர்கள் ஆகியோருடன் பணியாற்றும்போது பல வகையான ஜனரஞ்சக கதைகளுக்கு இசையமைக்கும்போதும் அவருடைய வணிக மதிப்பும் இன்னும் பல மடங்கு உயரக்கூடும். அவர் இன்னும் பரவலான ரசிகர்களைச் சென்றடைய முடியும். இருந்தாலும் தன்தனித்தன்மை வாய்ந்த இசைப் பாணியாலும் அபாரமான திறமையாலும் மதிப்புக்குரிய இடத்தை ஏற்கெனவே பெற்றுவிட்டார்

இன்னும் பல சாதனைகளைப் படைத்து காலத்தால் அழிக்க முடியாத இசைப் படைப்புகளை வழங்க ஜிப்ரானை மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE