'ராட்சஷக் கலைஞன்' கமல் 61; ‘களத்தூர் கண்ணம்மா’ வெளியாகி 61 ஆண்டுகள்

By வி. ராம்ஜி

டெய்ஸி ராணி என்றொரு குழந்தை நட்சத்திரம். அந்தக் குழந்தை கேரக்டருக்கு, பத்தாயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு டெய்ஸி ராணியை நடிக்கச் சொல்லி, ஒப்பந்தம் போடப்பட்டது. அந்தக் குழந்தையின் நடிப்பு எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஒருநாள், வீட்டில்... டேபிள் லேம்ப் வெளிச்சத்தில், புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் ஏவி.மெய்யப்பச் செட்டியார். அவரின் குடும்ப நண்பர் ஒரு சிறுவனுடன் வந்திருந்தார். அந்த குடும்ப நண்பர் ஒரு பெண்மணி. அவர், சுதந்திரப் போராட்ட தியாகியும் வக்கீலுமாக இருக்கும் குடும்பத்துக்கும் நெருங்கிய நண்பர். அந்தப் பையனின் சேட்டையும் பேச்சும் அங்கிருப்பவர்களை எல்லோரும் கவர்ந்தது. ஏவி.எம்.குடும்பத்தையும் ஈர்த்தது. ‘அப்பச்சி... இந்தப் பையனைப் பாத்தீங்களா, துறுதுறுன்னு’ என்று அந்தப் பையனை அறிமுகப்படுத்தினார்கள். ஏவி.மெய்யப்பச் செட்டியார், டேபிள் லேம்ப் வெளிச்சத்தை, அப்படியே அந்தப் பையனின் பக்கம் திருப்பினார். முகம் பார்த்தார். அருகில் இருப்பவரிடம் ஏதோ சொன்னார். படத்திலிருந்து டெய்ஸி ராணியை எடுத்துவிட்டு, அந்தப் பையனை புக் செய்தார்கள்.

படத்தில் நடித்த அந்தச் சிறுவனுக்கு, தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின்னர் எத்தனையோ விருதுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எப்படி எப்படியான வெளிச்சங்கள் அவர் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. உலகமே இன்றைக்குக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஏவிஎம்... குழந்தை நட்சத்திரம் என்றாலும் அவர் நினைவுக்கு வருவார். ஜெமினி - சாவித்திரி என்றதும் நினைவுக்கு வருவார். ‘களத்தூர் கண்ணம்மா’ என்று சொன்னதும் நினைவுக்கு வருவார்.

‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடலைச் சொன்னாலும் ஞாபகத்துக்கு இவர்தான் வருவார். அன்று தொடங்கி... இன்று வரை... எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாத உன்னதக் கலைஞனாக, உலக நாயகனாகத் திகழ்கிறார் கமல்ஹாசன்.

கமல் குடும்பத்தில் எல்லோரும் நன்றாகப் படித்தவர்கள். ஆனால், இவருக்கு படிப்பில் மீது நாட்டமே இல்லை. இன்றைக்கு கமல் படித்தததை, கமலின் பட்டறிவைக் கண்டு, அவரின் குடும்பமே அண்ணாந்து வியக்கிறது. கமலின் தேடல் உலகளவு. தேடித்தேடி, தன் மூளையின் இடுக்குகளில் கூட சேகரித்துக் கொண்டிருக்கிற விஷயங்கள்... எட்டாத அதிசயம்.

ஜெமினியுடன் ‘களத்தூர் கண்ணம்மா’, எம்ஜிஆருடன் ‘ஆனந்த ஜோதி’, எஸ்.எஸ்.ஆருடன் ‘வானம்பாடி’, ஜெமினி, தேவிகா, சந்திரபாபுவுடன் ‘பாதகாணிக்கை’, சிவாஜியுடன் ‘பார்த்தால் பசி தீரும்’ என்று சிறுவயதில் அப்படியொரு அட்டகாச வாய்ப்புகள் மடியில் வந்துவிழுந்தன. இவர்களின் மடியில் அமர்ந்து வளர்ந்தார்.

‘’ ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் நடிக்கும் போது, என்னைப் போலவே இன்னொரு பையன் வந்து நடிக்கப் போறேன்’ என்று அவனின் வருகையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அவன் வரவில்லை. நான் தான் நடித்தேன். இரண்டுவிதமாகவும் நடித்தேன். பின்னாளில்தான் தெரிந்தது... அது டபுள் ஆக்‌ஷன் என்று’’ என்று பின்னாளில் கமல் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில், சிறுவன் கமல் செய்தது இரட்டை வேடம். இன்னொரு வேடத்துக்கு இன்னொரு பையன் வருவான் என்று நினைத்த கமல், இரண்டு, நான்கு, பத்து வேடங்களிலெல்லாம் நடித்து வியப்பு கூட்டினார் என்பதில்தான் இருக்கிறது கமலின் அசுரப் பாய்ச்சல்.

ஒப்படைத்தல் என்றொரு வார்த்தை கலையிலும் உண்டு; பக்தியிலும் உண்டு. கலையில் தன்னை பக்தியுடன் ஒப்படைத்தார். பரதம் உள்ளிட்ட நடனங்களைப் பயின்றார். கமலின் அப்பாவான சீனிவாசனின் ஆசை என்ன என்று கமல் அப்போது அறிந்தாரா... இல்லையா? தெரியாது. டி.கே.எஸ். என்று சொல்லப்படும் சண்முகம் அண்ணாச்சியின் நாடகக் குழுவில் சேர்ந்து நடித்தார். ‘அப்பாவின் ஆசை’ நாடகத்தில் நடித்தார். ஏவிஎம் குருகுலவாசம் பயிற்றுவித்தது. சண்முகம் அண்ணாச்சி, முதல் குருவானார்.
அந்தக் காலத்தில், நடன இயக்குநர் தங்கப்பன் மாஸ்டர் வெகு பிரபலம். இவரால்தான், வெஸ்டர்ன் டைப் நடனங்களும் ஏதேனும் ஒரு அர்த்தம் சொல்லும் விஷயமாக நடனங்களும் தமிழ் உலகுக்கு வந்தன. தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராகப் பணிபுரிந்தார். கமலின் அடுத்தடுத்த வயதில்... அடுத்ததான வளர்ச்சி. எம்ஜிஆர் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்’ உள்ளிட்ட படத்துக்கெல்லாம் இவர் உதவி நடன இயக்குநர். ’கமல் சூப்பரா டான்ஸ் ஆடுவார்’ என்றொரு பாராட்டுகள் இன்றைக்கும் உண்டு. அங்கே... தங்கப்பன் மாஸ்டர் இன்னொரு வகையில் குருவானார்.

வாலிபப் பருவத்துக்கு வந்த போது, வாய்ப்புகள் வரவில்லை. அப்போது கமலுக்கு, இயக்குவதில் விருப்பம் இருந்தது. கே.பாலசந்தரிடம் அழைத்துச் சென்ற ஜெமினி, ‘இந்தப் பயலுக்கு உன் படத்துல ஒரு வேஷம் கொடுப்பா’ என்று சொல்ல... அங்கே... இன்னொரு கதவு திறந்தது. இன்னொரு வழியும் கிடைத்தது. இன்னொரு உச்சநட்சத்திரம் தமிழ் உலகுக்கு அரங்கேற்றமானார். ‘என் வாத்தியார் பாலசந்தர்’ என்று இன்று வரைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிற கமல், தன் அலுவலகத்தில் பாலசந்தருக்கு சிலையும் எழுப்பியுள்ளார். கமல் வாழ்வின் முக்கியமான குரு. அந்த குருவுக்கு கமல் செய்த மரியாதை.

‘இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பா’ என்றார் ஜெமினி கணேசன். ஆனால் பாலசந்தரோ... 36 வாய்ப்புகளை வழங்கினார். கமல் இன்றைக்குச் செய்துகொண்டிருக்கிற எல்லா விஸ்வரூப முயற்சிகளுக்கும் பரீட்சார்த்த முயற்சியாக, கமலை திரைக்களத்தில் உலவவிட்டார். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அவர்கள்’ என்று கருப்பு வெள்ளைக் காலத்தில், கமலைக் கொண்டு வர்ணஜாலங்கள் காட்டினார் கே.பி.

இதே காலகட்டத்தில்தான் கேரளத் திரையுலகம், ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோடுக்கு சிகப்புக் கம்பளமிட்டு கமலை வரவேற்றது. ‘கன்யாகுமரி’ படத்தில் நாயகனானார். சேதுமாதவன் முதலான மிகச்சிறந்த இயக்குநர்கள், தொடர்ந்து கமலை வைத்து படங்கள் பண்ணினார்கள். ‘நிற குடம்’ மாதிரியான படங்கள் கமலின் நடிப்பைப் பறைசாற்றின. கமலின் நடிப்புத்திறனை உணர்ந்ததில் கேரள சினிமாவுக்கு முதலிடம் உண்டு; முக்கியமான இடமும் உண்டு.

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், ரா.சங்கரன் இயக்கத்தில், கனக சண்முகம் இயக்கத்தில், ஏ.எஸ்.பிரகாசம் படத்தில் என ஏராளமான படங்களில் நடித்தார். இதனிடையே கமல் நிறைய்யவே படித்தார். இன்னமும் படித்துக்கொண்டே இருக்கிறார். தேடித்தேடி பல மொழிகளில் வந்த நூல்களில் படித்துக் கொண்டிருக்கிறார். கவிதைகள் எழுதினார். கதைகள் எழுதினார். ஆர்.சி.சக்தி இயக்கத்தில் ‘உணர்ச்சிகள்’ என்ற படத்துக்கு கதை, திரைக்கதை எழுதினார். பாலசந்தர் நடிப்புப் பாதை போட்டுக்கொடுத்து அதில் தன் ராஜபாட்டையைத் தொடர்ந்திருந்தாலும் அவரின் டைரக்‌ஷன் கங்கு, உள்ளே கனன்று கொண்டே இருந்தது.

பாலசந்தரைப் போலவே அங்கே இன்னொரு குரு கிடைத்தார். அவர்... அனந்து. இவரின் வழியே நல்ல படங்கள், வித்தியாசமான படங்களின் பரிச்சயம் கிடைத்தது. எழுபதுகளில், கமல் - ஜெயசித்ரா ஜோடி பேசப்பட்டது. கமல் - ஜெயசுதா ஜோடி ரசிக்கப்பட்டது. கமல் - ஜெயப்ரதா, கமல் - ஸ்ரீப்ரியா, கமல் - ஸ்ரீதேவி, கமல் - மாதவி என காம்பினேஷன்கள் எப்படி இருந்தாலும் கமல் ஜோடி ஈர்க்கப்பட்டது.

‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’, ‘மோகம் முப்பது வருஷம்’, ‘ஆடு புலி ஆட்டம்’ என்று ஒருபக்கம்... ‘மன்மத லீலை’, ‘உயர்ந்தவர்கள்’, ‘அவள் அப்படித்தான்’ என்றொரு பக்கம் என பயணித்தார். இன்று வரை கொண்டாடிக்கொண்டிருக்கும் ‘அவள் அப்படித்தான்’ படம் தயாரிப்புக்கும் இளையராஜா இசையமைப்பதற்கும் படம் ரிலீஸ் ஆவதற்கும் என கமலின் உதவியும் ஒத்துழைப்பையும் ருத்ரய்யா இருந்தால், தனிப்புத்தகமாகவே எழுதியிருப்பார்.

’ஹாசன் புரொடக்‌ஷன்ஸ்’ என்று சினிமா கம்பெனி தொடங்கினார். ‘ராஜபார்வை’ பார்த்தார். அதில் இளையராஜாவை வைத்துக்கொண்டு, அப்போதே இசை டிரீட்மெண்ட் கொடுத்திருப்பார் கமல்.

‘மரோ சரித்ரா’ தொடங்கி தெலுங்கில் ஒரு ரவுண்டு. ‘கோகிலா’ தொடங்கி கன்னடத்தில் ஒரு ரவுண்டு. ‘ஏக் துஜே கேலியே’ தொடங்கி இந்தியில் ஒரு ரவுண்டு. வங்காளப் படம் வரைக்கும் கூட வங்காள விரிகுடா அளவுக்கு எல்லை பரப்பினார். கே.விஸ்வநாத்துக்கு கமல் எப்போதுமே ஸ்பெஷல். ‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’ மாதிரியான படங்களில் கமலின் உழைப்பையும் நடிப்பையும் மறக்கவே முடியாது. ‘திக்கற்ற பார்வதி’ தந்த சிங்கீதம் சீனிவாசராவ் ‘இரு நிலவுகள்’ மாதிரியான படங்களில் இருந்தே பரிச்சயம்; நட்பு. ‘மைக்கேல் மதன காமராஜன்’ வரையிலான திரைப்பயணம் கமலின் வெவ்வேறு பரிமாணங்கள்.

பாரதிராஜா வந்தார். ‘16 வயதினிலே’ வந்தது. ‘சப்பாணி’யானார். இந்தக் கூட்டணி, தமிழ்சினிமாவின் புதிய கால்களாகவும் பாதைகளாகவும் அமைந்தன. ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘ஒரு கைதியின் டைரி’ என இந்தக் கூட்டணியின் படங்களெல்லாமே மன டைரியில் குறித்து வைத்துக்கொள்ளவேண்டிய படங்கள்.

சுஜாதா, பாலகுமாரன், ரா.கி.ரங்கராஜன், புவியரசு, பேராசிரியர் ஞானசம்பந்தன் என்றொரு நட்பு வட்டம், இன்னொரு பக்கம். இதில் கிரேஸி மோகனையும் இணைத்துக் கொண்டார். பஞ்சு அருணாசலம் படைப்புகளில், ‘கல்யாண ராமன்’, ‘சகலகலா வல்லவன்’, ‘எல்லாம் இன்ப மயம்’ என்று எஸ்.பி.முத்துராமனுடன் இணைந்து பல படங்கள். மணிரத்னம் வந்தார். ‘நாயகன்’ வந்தது. ‘வேலுநாயக்கரானார்’. இதன் பிறகு ராஜ்கமல் இண்டர்நேஷனில் எத்தனையோ படங்கள்.

‘அபூர்வ சகோதரர்கள்’, ’வெற்றி விழா, ’பேசும் படம்’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சத்யா’, ’ஆளவந்தான்’, ’அன்பேசிவம்’, ’ஹேராம்’, ’உன்னைப் போல் ஒருவன்’, ‘அவ்வை சண்முகி’, ’விருமாண்டி’, ‘தசாவதாரம்’, ‘விஸ்வரூபம்’ என்று நடித்தார். சில படங்களுக்கு கதை வசனம் எழுதினார். இயக்கினார்.

‘ஞாயிறு ஒளி மழையில்’ என்று முதன் முதலாகப் பாடினார். கமல் பாடகராகவும் திகழ்கிறார். பாட்டுகள் எழுதியும் அசத்தினார். கதை எழுதுவார். திரைக்கதை அமைப்பார். வசனம் எழுதுவார். ‘தேவர் மகன்’ ஒரு பாய்ச்சல். ‘மகாநதி’ இன்னொரு சலனமில்லாத பயணம். இன்றைக்கு டெக்னிக்கல் என்று ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இங்கே, தமிழ் சினிமாவில் வந்த பல டெக்னிக்கல்களை விமானத்தில் ஏற்றிக்கொண்டு, கோடம்பாக்கத்தில் கைகுலுக்கி உலவ விட்டவர் கமலாகத்தான் இருக்கும்.

இப்படியாக, கமலின் பயணத்தை இப்படி கட் ஷாட்டுகளாகச் சொல்லவே நீண்டகாலம் அவசியம். இத்தனை ஆண்டுகால திரைப்பயணம், திரை வாழ்க்கை, திரையின் வெற்றி தோல்விகள், சாதுர்யங்கள், சாத்தியம் அல்லாதவற்றையெல்லாம் சாத்தியாமாக்கிய ராட்சஷக் கலைஞன் கமல்... அபூர்வக் கலைஞன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மாற்றாகச் சொல்ல ஒருவருமில்லை.

1959ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி ‘களத்தூர் கண்ணம்மா’வின் மூலமாக, ‘அம்மாவும் அப்பாவும் நீயே’ என்று இந்தக் கலையே எனக்கு அப்பா, அம்மா என்று அடியெடுத்து வைத்த கமலின் பயணமே ஒரு சாதனைதான். 61 ஆண்டு கால சாதனை.

தான் இருக்கும் துறையில், வளர்ந்தவர்கள், ஜெயித்தவர்கள் எத்தனையோ பேர். தானும் வளர்ந்து தன் துறையையும் வளர்ச்சிக்குக் கொண்டுவந்தவர்கள் மிகச்சிலர். அந்தச் சிலரில்... முக்கியமானவர் கமல்ஹாசன் எனும் பன்முககலைஞன்.

திரையுலகில் 61ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஒப்பற்ற உலக நாயகன் கமல்ஹாசனை வாழ்த்துவோம்; போற்றுவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்