கமல் ஹாசனின் 61 ஆண்டுகள்: வணிகத்திலும்  ஒளிரும் நட்சத்திரம் 

By ச.கோபாலகிருஷ்ணன்

கடந்த ஆண்டு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தமிழ் சினிமா நட்சத்திர கதாநாயகர்கள் அவர்களுடைய திரைப்படங்களுக்கான வணிக மதிப்பின் சார்பில் வகைப்படுத்தப்பட்டிருந்தார்கள். ரஜினி, விஜய், அஜித் மூவரும் முதல் நிலையிலும் சூர்யா. ஜெயம் ரவி. தனுஷ். சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் இரண்டாம் நிலையிலும் வகைபிரிக்கப்பட்டிருந்தனர்.

மூன்றாம் நிலையில் யார் பெயரும் குறிப்பிடாமல் மற்ற நடிகர்கள் என்ற வகைப்பாடு இருந்தது. தமிழ் சினிமா நடிகர்களின் வணிக மதிப்பு சார்ந்த ஒரு பட்டியலில் கமல் ஹாசன் பெயர் இடம்பெறவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சி அளித்திருக்கும். கணிசமானோருக்கு வருத்தத்தையும் அளித்திருக்கும். நடிகர்களின் அண்மைக் காலப் படங்களின் வெற்றி தோல்வியை வைத்து தயாரிக்கப்பட்ட பட்டியல்தான் அது.

இதைவைத்து திரை வணிகத்தில் கமலின் நட்சத்திர அந்தஸ்து அஸ்தமித்துவிட்டது என்று கூறிவிடலாமா? நிச்சயம் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் அவர் ஆறு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அவற்றில் 'விஸ்வரூபம்'(2013), 'பாபநாசம்' (2015) இரண்டு மட்டுமே வெற்றிப் படங்கள் அதன் பிறகு அறுவை சிகிச்சை, அரசியல் ஆர்வம் அவருடைய அதிக நேரத்தை எடுத்துக்கொண்டுவிட்டன. திரைப்படங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது. ஒருவேளை அவர் திரையில் தன் நடிப்பு வாழ்க்கையைத் தொடர்வது என்று முடிவெடுத்துவிட்டால் தன்னுடைய வெற்றி சரித்திரத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க அவரால் முடியும் என்பதை மறுக்க முடியாது. அதற்கு இன்றோடு (ஆகஸ்ட் 12) 61 ஆண்டுகளை நிறைவு செய்யும் அவருடைய திரைப் பயணமே சாட்சி.

வெற்றியுடன் தொடங்கிய பயணம்

1959-ல் இதே நாளில் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' வெளியானது இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றார். கமல் ஹாசனின் விருதுகள், கலைரீதியான சாதனைகளின் பயணம் மட்டுமல்ல வணிக வெற்றிகளின் பயணமும் இந்தப் படத்திலிருந்தே தொடங்குகிறது. ஜெமினி கணேசன் – சாவித்ரி முதன்மை இணையராக நடித்திருந்த இந்தப் படம் வணிக ரீதியிலும் பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழில் அவர் முதன்முறையாக கதாநாயகனாக நடித்த 'பட்டாம்பூச்சி' திரைப்படமும் வணிக வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் 1975 பிப்ரவரியில் வெளியானது. அதே ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' கமலை கதாநாயக நடிகராக நிலைநிறுத்திய படம். அன்றைய சமூக மதிப்பீடுகளை மீறியதாக இருந்தாலும் அந்தப் படமும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.

ஐந்தாண்டுகளில் அபார வெற்றிகள்

1976-ல் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'மன்மத லீலை' சென்சார் சான்றிதழ் பெறுவதே பெரும் போராட்டமாக இருந்தது. இருந்தாலும் அந்தப் படமும் வணிக வெற்றியைப் பெற்றதோடு ட்ரெண்ட் செட்டராகவும் அமைந்தது. 1977-ல் பாரதிராஜா இயக்குநராக '16 வயதினிலே' படத்தில் சினிமா வரையறையில் அழகு என்பதற்கு முற்றிலும் எதிரான தோற்றத்துடன் ஒரு அப்பாவி கிராமத்து இளைஞனாக கமல் நடித்திருந்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு தமிழ் சினிமாவில் ஒரு புதிய திருப்புமுனையை நிகழ்த்திய படமாகவும் அமைந்தது. இப்படியாக விதிகளை மீறுவதும் வித்தியாசமான முயற்சிகளைச் செய்வதும் அவற்றின் மூலம் வணிகத்திலும் வெற்றிபெறுவதும் ஒரு நாயக நடிகராக கமலின் தொடக்கக் காலத்திலிருந்தே தொடங்கிவிட்ட நிகழ்வாகும்.

இவை தவிர ஸ்ரீதரின் 'இளமை ஊஞ்சலாடுகிறது'(1978), பாரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்'(1978), டி.என்.பாலுவின் 'சட்டம் என் கையில்' (1978), பாலச்சந்தரின் 'நினைத்தாலே இனிக்கும்'(1979), ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய 'கல்யாணராமன்'(1979), துரை இயக்கிய 'நீயா' (1979) எனப் பல முக்கியமான வெற்றிப் படங்கள் அமைந்தன. இதே காலகட்டத்தில் அவர் மலையாளத்தில் கணிசமான படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருந்தார். தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களிலும் நாயகனாக நடித்தார். இவற்றில் 1978-ல் வெளியான தெலுங்குப் படமான 'மரோசரித்ரா' மிகப் பெரிய வணிக வெற்றியையும் கிளாசிக் அந்தஸ்தையும் பெற்ற காதல் படம். இது தமிழ்நாடு. கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை படைத்தது.

இப்படியாக முதல் ஐந்து ஆண்டுகளில் பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார் கமல். அந்தக் காலகட்டத்தில் ஒரு நடிகர் ஆண்டுக்கு பத்து படங்களில் நடிப்பது மிகவும் சகஜம் என்பதை வைத்துப் பார்த்தாலும் இந்த வெற்றிகளின் எண்ணிக்கை மலைக்க வைப்பது. இவற்றுக்கு நடுவில்தான் ஆர்.சி.சக்தியின் 'உணர்ச்சிகள்' (1976) ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' (1978), போன்ற முற்றிலும் பரீட்சார்த்தமான முயற்சிகளிலும் கமல் நடித்துக்கொண்டிருந்தார்.

வெற்றிக்கொடி நாட்டிய 80-கள்

ஐ.வி. சசி இயக்கத்தில் 1980 ஜூலையில் வெளியான 'குரு', 365 நாட்கள் திரையரங்குகளில் ஓடி பிளாக்பஸ்டர் என்று சொல்லத்தக்கப் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. லாஜிக் பற்றி துளியும் கவலைப்படாத வணிக மசாலாப் படம் இது. இதில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளும் சாகசக் காட்சிகளும் கமலை இன்னும் பரவலான ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன. 1980 தொடங்கி 1989 வரையிலான பத்தாண்டுகளில் கமல் அதிக எண்ணிக்கையிலான வெற்றிப் படங்களையும் பெரிய வெற்றிப் படங்களையும் மிகப் பெரிய வெற்றிப் படங்களையும் வசூல் சாதனைப் படங்களையும் கொடுத்தார்.

'மரோசரித்ரா'வின் இந்தி மறு ஆக்கமான 'ஏக் துஜே கேலியே' 1981இல் வெளியானது அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்று இந்தியில் கமல் ஹாசனை ஒரு கதாநாயகனாக நிலைநிறுத்தியது. தொடர்ந்து அவர் அந்த பத்தாண்டுகளில் நிறைய இந்திப் படங்களில் நடித்தார். அதே நேரம் தமிழில் 1982-ல் வெளியான 'சகலகலா வல்லவன்' புதிய வசூல் சாதனை படைத்தது. 'வறுமையின் நிறம் சிவப்பு' (1980), 'உல்லாசப் பறவைகள்' (1981), 'மீண்டும் கோகிலா' (1981), 'சிம்லா ஸ்பெஷல்' (1982), 'மூன்றாம் பிறை' (1982), 'வாழ்வே மாயம்' (1982), 'தூங்காதே தம்பி தூங்காதே' (1983), 'சலங்கை ஒலி' (1983), 'எனக்குள் ஒருவன்' (1984), 'காக்கி சட்டை' (1985), 'புன்னகை மன்னன்' (1986), 'நாயகன்' (1987), 'அபூர்வ சகோதரர்கள்' (1989), 'வெற்றிவிழா' (1989) ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வெற்றிப் படங்கள்.

இவற்றில் 'மூன்றாம் பிறை', 'நாயகன்', 'சலங்கை ஒலி;' ஆகியவை அழியாவரம் பெற்ற காவியங்கள் என்பது தனிக் கதை. 'அபூர்வ சகோதரர்கள்' கலகலப்பான வணிகப் படம் என்றாலும் அதில் கமல் குட்டையான உருவம் கொண்டவராக நடிப்பதற்காக எடுத்துக்கொண்ட மெனக்கெடல் இன்றுவரை திரையுலக அதிசயமாக இருக்கிறது. அபாரமான வசூலை ஈட்டியது. இதன் இந்தி மொழிமாற்று வடிவமான 'அப்புராஜா'வும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் மற்ற மொழிகளிலும் கமல் கணிசமான வெற்றிப் படங்களைக் கொடுத்தார். 'மூன்றாம் பிறை' இந்தி வடிவமான 'சத்மா', நேரடித் தெலுங்குப் படங்களான 'ஸ்வாதி முத்யம்', 'சாகர சங்கமம்', 'இந்த்ருடு சந்த்ருடு', மலையாளப் படமான 'சாணக்யன்' ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

கிரேசி மோகனுடனும் அவர் இல்லாமலும்

1990-களில் கமல் ஹாசன் பரீட்சார்த்த முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். படத்தின் ஒட்டுமொத்த உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் அவருடைய 'டச்' இருந்தது. சில விதிவிலக்குகள் தவிர இதுவே இப்போதுவரை தொடர்கிறது. பரீட்சார்த்த முயற்சிகளுக்காக அறியப்படும் இந்தப் பத்தாண்டில்தான் 'சிங்காரவேலன்'(1992) 'தேவர் மகன்' (1992), 'இந்தியன்' (1996) போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களும் அமைந்தன. இது தவிர கமல் கிரேசி மோகனுடன் இணைந்து அளித்த நகைச்சுவைப் படங்களான 'மைக்கேல் மதன காமராஜன்' (1990), 'சதிலீலாவதி' (1995), 'அவ்வை சண்முகி' (1996) ஆகிய படங்களும் வணிக வெற்றியைப் பெற்றன.

புத்தாயிரத்திலும் இதே போக்கு தொடர்ந்தது. 'பம்மல் கே. சம்பந்தம்' (2002), 'பஞ்சதந்திரம்' (2002), 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' என கிரேசி மோகன் வசனம் எழுதிய நகைச்சுவைப் படங்களைத் தவிர அவரே எழுதி இயக்கிய 'விருமாண்டி' (2004) வணிக வெற்றியைப் பெற்றது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'வேட்டையாடு விளையாடு' (2006) பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று வணிகக் களத்தில் கமலின் நட்சத்திர அந்தஸ்தை நிலைநிறுத்தியது. 2008இல் வெளியான 'தசாவதாரம்' (2008) அதுவரை இல்லாத புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. பெரிய பட்ஜெட்டில் முழுக்க முழுக்க வெகுஜன ரசனையை மையப்படுத்திய படங்களையும் தன்னால் வெற்றிகரமாகக் கொடுக்க முடியும் என்று கமல் நீருபித்த படம் அது.

அடுத்த பத்தாண்டுகளின் கதை என்ன என்பதை மேலே பார்த்தோம்.

வணிகத்திலும் 'ஞானி'தான்

கமல்ஹாசன் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய பரீட்சார்த்த முயற்சிகள், சிறந்த நடிப்பு, கதாபாத்திரத்துக்காக யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவு மெனக்கெடுவது. உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் சினிமாவின் தரத்தை உயர்த்த முயல்வது என கலை சார்ந்த அம்சங்களே. அதனாலேயே அவர் 'கலைஞானி' என்று ரசிகர்களாலும் திரையுலகினராலும் அழைக்கப்படுகிறார். ஆனால் வணிகரீதியாகவும் அவர் தொடர்ந்து வெற்றிகரமாகவே இயங்கிவந்திருக்கிறார். போட்டி நடிகரான ரஜினிகாந்துடன் ஒப்பிட அவருக்கு வணிக அந்தஸ்தில் இரண்டாம் இடம்தான் கொடுக்க முடியும் என்றாலும் அது அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதை காரணமாக அமைந்தது.

2011-ல் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் பாலசந்தரின் கேள்விக்குப் பதிலளித்த ரஜினிகாந்த், வெகுஜன ரசனைக்கேற்ற வணிக வெற்றிப் படங்களில் நடிப்பதே தனக்கு விருப்பமானது என்று கூறியிருந்தார். கமலும் அப்படிப்பட்ட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தால் ரஜினியைத் தாண்டியும் சென்றிருக்கலாம் ரஜினிக்கு சமமாக இருந்திருக்கலாம் அல்லது அப்போதும் ரஜினிக்கு அடுத்த இடத்திலேயே இருந்திருக்கலாம். ஆனால் 'ராஜபார்வை', 'குணா', 'மகாநதி', 'ஹே ராம்', 'அன்பே சிவம்' போன்ற காலத்தால் அழிக்க முடியாத இடத்தைப் பெற்ற கிளாசிக் படங்கள் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.

ஆகவே வணிக வெற்றியில் அக்கறை இருந்தாலும் வணிகப் படங்களுக்கான சமரசங்களுக்கு உட்பட்டு ரசிகர்களின் கலைப் பசிக்கும் தீனி போட்டவர் என்று கமல்ஹாசனை சொல்லலாம். வணிக வெற்றிப் படங்களில் நடிக்கவும் எடுக்கவும் தெரிந்த ஒருவர் அதற்கு அப்பாலும் தன் பார்வையைச் செலுத்தியிருப்பது ஒரு கலைஞன் என்னும் முறையில் அவருடைய மாபெரும் வெற்றிதானே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE