வெப் சீரிஸாக உருவாகும் விகாஸ் துபேவின் கதை: ஹன்ஸல் மேத்தா இயக்குகிறார்

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபேவின் வாழ்க்கையை இயக்குநர் ஹன்ஸல் மேத்தா வெப் சீரிஸாக உருவாக்கவுள்ளார்.

கடந்த ஜூலை 3-ம் தேதி அன்று விகாஸ் துபேவை கைது செய்யப்போன உ.பி.யைச் சேர்ந்த 8 போலீஸார் துபேவின் கூட்டத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 9-ம் தேதி விகாஸ் துபே கைது செய்யப்பட்டார்.

ஜூலை 10-ம் தேதி விகாஸ் துபே சென்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளானது. அங்கிருந்து விகாஸ் துபே தப்பிக்க முயன்ற போது உ.பி.போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதற்கு முன்னரே துபேவின் கூட்டாளிகள் 5 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். திரைப்படங்களுக்கு ஈடாக நடந்தேறிய இந்தச் சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது விகாஸ் துபேயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு வெப் சீரிஸ் உருவாகிறது. 'ஷாஹித்', 'அலிகார்', 'சிம்ரன்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஹன்ஸல் மேத்தா இதை உருவாக்குகிறார்.

"இது நம் காலகட்டத்தின், அரசியல் அமைப்பின் பிரதிபலிப்பு. அரசியல்வாதிகள், குற்றவாளிகள், சட்டங்களை உருவாக்குபவர்கள் இந்த அமைப்பில் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றனர். இதை எப்படி அணுகப் போகிறேன் என்று இவ்வளவு சீக்கிரம் சொல்லிவிட முடியாது.

ஆனால் கண்டிப்பாகப் பொறுப்புடன் அணுகுவேன், ஆச்சரியமான நினைவூட்டலாக இருக்கும். இதிலிருந்து ஒரு பரபரப்பான, துணிச்சலான அரசியல் த்ரில்லர் கதை வரும் என்று பார்க்கிறேன். இதைச் சொல்வதிலும் சுவாரசியம் இருக்கும்" என்று ஹன்ஸல் மேத்தா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE