கோவிட்-19 நெருக்கடியால் ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகமாகும்: அதுல் குல்கர்னி

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் கோவிட்-19 நெருக்கடியால் ஏற்கெனவே இருக்கும் ஏற்றத்தாழ்வு, சமத்துவமின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் இன்னும் அதிகமாகும் என்று நடிகர் அதுல் குல்கர்னி கூறியுள்ளார்.

இந்தி, மராத்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் அதுல் குல்கர்னி. தமிழில் 'ஹே ராம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது இவருக்குக் கிடைத்தது. மேலும் 'சாந்தினி பார்' என்ற படத்துக்காகவும் 2002-ம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளார். 'ரன்', 'படிக்காதவன்', 'ஆரம்பம்', 'வீரம்' உள்ளிட்ட கமர்ஷியல் படங்களிலும் அதுல் குல்கர்னி நடித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் கரோனா நெருக்கடி குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள குல்கர்னி, "எல்லாம் நிச்சயமற்ற நிலையில் உள்ளன. ஆனால், ஒன்று நிச்சயம். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஏற்றத்தாழ்வு, சமத்துவமின்மை ஆகியவை சமூகத்தில் வளரும்.

தற்போது இணைய வழிக் கல்வி போதிக்கப்படுகிறது. அதற்கு குறிப்பிட்ட சில கருவிகள் உங்களிடம் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு வீட்டில் கற்றுத் தரக்கூடிய வகையில் பெற்றோர் இருக்க வேண்டும். கிராமப்புறங்களில், ஏன் மும்பையின் குடிசைப் பகுதிகளில் பலர் பெற்றோரின்றி இருக்கிறார்கள். இதனால் கல்வியில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை நாம் பார்க்கப்போகிறோம். இது 7-8 வருடங்களுக்குப் பின் நம்மைப் பாதிக்கும். இந்த சமத்துவமின்மையைக் குறைப்பதே ஒவ்வொரு அரசின் முயற்சியாக இருக்க வேண்டும்" என்று அதுல் குல்கர்னி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE